பைஷல் இஸ்மாயில்-
பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் திறமையாக செயற்படுவதுடன், எதிர்கால சந்ததியினரின் நலன்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அட்டாளைச்சேனை நூர் பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் தூரநோக்கு செயற்பாடுகள் பாராட்டத் தக்கவையாக உள்ளன என்று கிழக்கு மாகாண சபை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
மாகாண சபை உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பிளாஸ்டிக் கதிரைகளை கையளித்தல், நூருல்லாஹ் அல்-குர்ஆன் பாடசாலை மாணவர்களுக்கு அல்-குர்ஆன் பிரதிகளை கையளித்தல் நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் நஸீர் மேற்கண்டவாறு கூறினார்.
மாகாண சபை உறுப்பினர் நஸீர் மேலும் அங்கு தெரிவிக்கையில்;
சமய நிறுவனங்களுக்கு உதவிகளை வழங்குவதும், சமய நிறுவனங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் மனதுக்கு நிறைவைத்தருகின்றன. அந்தவகையில் நாம் இறை இல்லங்களான பள்ளிவாசல்களுக்கு கணிசமானளவு உதவிகளை வழங்கி வருகின்றோம். நான் பள்ளிவாயலுக்கும், மத்ரஸாக்களுக்கும், பாடசாலைகளுக்கும் செய்யும் சேவைகள் என்றும் தொடர்ந்து கொண்டே செல்லும்.
இந்தச் சேவை நான் அரசியலுக்கு வந்த பின் செய்யவில்லை அதற்கு முன்னே செய்துவருகின்றேன். அன்று தொட்டு இன்றுவரையில் இவ்வாறான கல்வி நிறுவனங்களுக்கும், வணக்கஸ்தளங்களுக்கும் பல உதவிகளை செய்வதற்கான பல திட்டங்களை வகுத்தும் வருகின்றேன்.
நூர் பள்ளிவாசலுக்கு உதவி வழங்குவது இது முதற்தடவையல்ல, 2012 ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளராக பதவி வகித்த காலப் பகுதியிலும் இப்பள்ளிவாசலுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளமை வரலாற்றுப் பதிவாகும்.
எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தையும் தாண்டி இவ்வாறான உதவிகளை வழங்க நான் சித்தமாயுள்ளேன். இப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி என்பனவே இப்பள்ளிவாசல் அபிவிருத்திக்கு காரணமாகும் எனலாம். இன்றைய சமய நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் கலந்து கொண்டு பிரதேச மக்களை மகிழ்வித்துள்ளார். சமூகத்தின் விடுதலைக்கான சரியான பாதையை தெரிவுசெய்து, சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் பயணிக்கும் துணிச்சல்மிக்க இளம் மாகாணசபை உறுப்பினர் அவர். அவரும் இவ்வாறான சமயநிறுவனங்களுக்கு பல உதவிகளை அதிகம் வழங்கி வருகின்றவர் என்றார்.
பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் யு.எம்.அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.எல்.முனாப், ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.எம்.நஸீர், ஓய்வுபெற்ற பிரதேச செயலாளர் ஏ.எல்.இப்றாலெவ்வை,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் யு.எம்.வாஹிட் உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள், பிரதேச மக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)