முதற்கட்டமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், காலனித்துவ ஆட்சிக்கெதிராக போராடிய பல முஸ்லிம் வீரர்கள் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ‘தேசத் துரோகிகள்’ என முத்திரை குத்தப்பட்டுள்ளமை தொடர்பில் விரிவான விளக்கங்களை முன்வைத்தார். இவ்விவகாரத்தை உரிய அமைச்சின் ஊடாக முன்னெடுத்து தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார். இதன்போது, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக இவ்விடயத்தை முன்னெடுத்து நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், குறித்த வீரர்களை உரிய முறையில் தேசப் பற்றாளர்களாக அங்கீகரிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், இவ்விடயம் தொடர்பான முழுமையான ஆவணங்கள், வர்த்தமானி அறிவித்தல்கள் உள்ளிட்ட தேவையான தகவல்களையும் அமைச்சரிடம் கையளித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, இந்த விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்கள் தொடர்பான இந்த விவகாரம் குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் இதற்கு முன்னரும் பல தடவைகள் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
— ஊடகப் பிரிவு

0 comments :
Post a Comment