இலங்கை – புத்தளம்: ஆப்தீன் அ.மு.க. பாடசாலைக்கு இந்திய தேசிய மனித உரிமைகள் – சமூக நீதிக்கான அமைப்பினால் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு





கரீம் எ. மிஸ்காத்-
புத்தளம் மாவட்டம், ஆப்தீன் அ.மு.க. பாடசாலை, இந்திய நாட்டின் தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான அமைப்பினால் வழங்கப்படும் “சிறந்த மனிதநேய கல்விச் சேவை விருது” பெற்றுக் கொண்டு பெருமை சேர்த்துள்ளது.

ஜெனிவாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த சர்வதேச அமைப்பு, மனித உரிமைகள், சமூக நீதி மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக சிறப்பான சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களை அடையாளம் கண்டு பாராட்டி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, இலங்கையின் புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆப்தீன் அ.மு.க. பாடசாலை, வளப்பற்றாக்குறை போன்ற பல சவால்களையும் தாண்டி, மாணவர்களுக்கு தரமான கல்வியினை வழங்கி வருவதனை கருத்தில் கொண்டு இவ்விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த விருதினை, இந்திய தேசிய மனித உரிமைகள் – சமூக நீதிக்கான அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர், தமிழ்நாடு, ராமநாதபுரம், நம்புதாலை சேர்ந்த எம். பாரிஸ் அவர்கள், நேரடியாக பாடசாலைக்கு வருகை தந்து, இன்று (05.02.2026) பாடசாலை சமூகத்தின் முன்னிலையில், அதிபர் எம்.டி.எம். மனாஸ் அவர்களிடம் வழங்கி வைத்து கௌரவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய எம். பாரிஸ் அவர்கள்,
“பாரிய உட்கட்டமைப்பு மற்றும் வளப்பற்றாக்குறை நிலவுகின்ற நிலையிலும், மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கில் தன்னலமின்றி சேவை புரிந்து வரும் இப்பாடசாலை நிர்வாகத்தினரும் ஆசிரியர்களும் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள். இத்தகைய மனிதநேய கல்விச் சேவைகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இவ்விருது வழங்கப்படுகின்றது. இந்த விருதினை வழங்குவதில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்” எனத் தெரிவித்தார்.

இவ்விருது, ஆப்தீன் அ.மு.க. பாடசாலை சமூகத்திற்கும், பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் புத்தளம் பிரதேச மக்களுக்கும் பெரும் பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. இது எதிர்காலத்தில் மேலும் சிறந்த கல்விச் சேவைகளை வழங்குவதற்கான ஊக்கமாக அமையும் என அனைவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :