அரச வம்சத்தில் சித்தார்த்தனாக பிறந்து பின்நாட்களில் கவுதமராக மாறிய புத்தர் தோற்றுவித்த புத்த சமயத்தின் நெறிமுறைகளை உலகின் பல நாடுகளில் வாழும் கோடானுக்கோடி மக்கள் கடைபிடித்து வருகின்றனர். குறிப்பாக, சீனா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற தெற்காசிய நாடுகளின் ஆட்சியாளர்களும் புத்த மதத்தை சார்ந்தவர்களாகவே உள்ளனர்.
இவ்வகையில், இலங்கையிலும் புத்த சமயத்தின் நெறிமுறைகளின் வழியொற்றியே ஆட்சி நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், புத்தபிரான் ஞானநிலையை அடைவதற்காக தவம் இருந்த போதி மரத்தை 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று தரிசித்தார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கயாவில் இந்த வரலாற்று சிறப்புமிக்க போதி மரம் அமைந்துள்ள மஹாபோதி ஆலய வளாகத்தை சுமார் ஒரு மணி நேரம் அவர் சுற்றிப் பார்த்தார். இநத ஆலயம் அசோக மாமன்னரால் கி.பி.260-ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த போதி மரத்தை அவர் 15 நிமிடங்கள் வழிபாடு செய்த சிறிசேனாவுக்கு மஹாபோதி அமைப்பின் சார்பில் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்துக்கு பின்னர் இங்கிருந்து விமானம் மூலம் அவர் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார். இன்று இரவு திருப்பதியில் தங்கும் அவர் நாளை அதிகாலை சுப்ரபாத சேவையின்போது திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கிறார்.
