தமிழர் சமூகத்தின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, பண்பாட்டு விழாவாக மட்டுமன்றி, பல்கலைக்கழக சமூகத்தினுள் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் முக்கிய நிகழ்வாகவும் அமைந்தது.
இவ்விழாவில் ஊழியர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எம். நிஜாம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்கள் இவ்வாறான பண்பாட்டு நிகழ்வுகளை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்து நடத்துவது, சமூகவாழ்வில் சகிப்புத்தன்மையையும் நல்லெண்ணத்தையும் வளர்க்கும் ஒரு வலுவான அடையாளமாக விளங்குகிறது எனக் குறிப்பிட்டார். குறிப்பாக கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள், சமூக ஒற்றுமையை உருவாக்குவதில் முன்னோடி பங்காற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அவர், இவ்வாறான விழாக்கள் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் நல்ல முன்னுதாரணமாக அமைகின்றன என்றும் தெரிவித்தார்.
மேலும், ஊழியர் மேம்பாட்டு நிலையத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் எம்.எச். நபார் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார். தனது உரையில், தனது இளமைக்காலம் முதல் பல்வேறு பண்பாட்டு மற்றும் சமய விழாக்களில் கலந்து கொண்டு பெற்ற இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்த அவர், இவ்வாறான நிகழ்வுகள் மனிதர்களை மனதளவில் ஒன்றிணைக்கும் சக்தி கொண்டவை எனக் கூறினார். பல்கலைக்கழக சூழலில் இதுபோன்ற விழாக்கள் தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
இங்கு உரையாற்றிய தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.எம்.ஏ. முனாஸ், தனது தலைமையுரையில், தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இவ்வாறான பண்பாட்டு நிகழ்வுகளை இரண்டாவது தடவையாக வெற்றிகரமாக ஏற்பாடு செய்து நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார். இந்நிகழ்வுகள் பல்கலைக்கழக ஊழியர்களிடையே மட்டுமன்றி, பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களிடையே பரஸ்பர புரிந்துணர்வையும் நல்லுறவையும் வளர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார். எதிர்காலத்திலும் சமூக, சமய மற்றும் பண்பாட்டு விழாக்களை ஒருங்கிணைந்து நடத்த சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.
ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம்.எம். காமில் வரவேற்ப்புரை நிகழ்த்தி, விழாவிற்கு வருகை தந்த பிரதம விருந்தினர், கௌரவ அதிதிகள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இவ்வாறான நிகழ்வுகள் ஊழியர்களிடையே நல்லுறவையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதாக அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் புன்னைச்சோலை காளி கோவில் பிரதம பூசகர் நக்கீரன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பொங்கல் திருநாளின் ஆன்மிக, பண்பாட்டு மற்றும் சமூக முக்கியத்துவங்களை விரிவாக எடுத்துரைத்தார். இயற்கைக்கு நன்றி செலுத்தும் ஒரு திருநாளாக பொங்கல் கொண்டாடப்படுவதுடன், மனிதர்களுக்கிடையே பகிர்வு, அன்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாகவும் அது திகழ்கிறது என அவர் விளக்கினார்.
நிகழ்வின் இறுதியில் பல்கலைக்கழகத்தின் பல துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட பொங்கல் உணவை ஒன்றிணைந்து பகிர்ந்து உண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இவ்விழா, பல்கலைக்கழக சமூகத்தில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்திய ஒரு நினைவுகூரத்தக்க நிகழ்வாக அமைந்தது.
.jpg)
0 comments :
Post a Comment