எமது கட்சிக்கோ எமக்கோ தனிப்பட்ட வகையில் ஜனாதிபதியிடமிருந்து எந்த பதவிகளும் கிடைக்காத நிலையிலும் நாம்; மீண்டும் அவருக்கு ஆதரவளிக்க காரணம் பாரிய பயங்கரவாதத்திலிருந்து இந்த நாட்டையும் முஸ்லிம்களையும் காப்பாற்றியதற்காவேயாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.
இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். இங்கு அவர் தெரிவித்ததாவது,
கடந்த 2005, 2010 ஜனாதிபதி தேர்தல்களில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உலமா கட்சி ஆதரவு வழங்கியது. அவ்வேளைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவே செயற்பட்டது. அக்கட்சியின் பேச்சைக்கேட்டு 80 வீதமான முஸ்லிம்கள் மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்தும்; சிறிய கட்சியாகினும் முஸ்லிம் சமயத்தலைவர்களின் தலைமையிலான கட்சியான உலமா கட்சி இருந்த பக்கத்துக்கே இறைவன் வெற்றியை தந்தான். இதன் மூலம் இந்த நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என இறைவன் நாடியிருந்தான்.
அண்மைக்காலத்தில் முஸ்லிம் சமூகம் சில பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது என்பது உண்மை. அந்த வேளையில் எமது முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டு விலகியிருந்தால் அது அரசில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கெதிரான அடாவடித்தனங்களை கட்டுப்படுத்த வழியேற்படுத்தியிருக்கும். ஆனால் இந்த சுய நல கட்சிகளும் அவர்களின் அமைச்சர்களும் தஙகளது சுகங்களை காத்துக்கொள்வதற்காக மௌனிகளாக இருந்த காரணத்தினாலேயே நமக்கெதிரான அநியாயங்கள் விடயத்தில் கவனம் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இன்றும் கூட இந்த முஸ்லிம் கட்சிகள் எதிர் காலத்தில் தமக்கு வாக்குகள் கிடைக்காது போய் விடுமோ என்ற அச்சத்தினால்த்தான் அரசிலிருந்து வெளியேறியுள்ளார்களே தவிர சமூகத்தின் மீது அக்கறை கொண்டல்ல.
இத்தகைய சூழலில் யுத்தத்தை வென்று அனைத்து மக்களுக்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக செயற்பட எமது மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை. நாம் 2005ம் ஆண்டு அவருக்கு ஆதரவளித்த போது நாட்டில் யுத்தம் நீங்க வேண்டும், 18 வருடங்களாக வழங்காமல் இருந்த மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.
அதனை அவர் ஏற்று அதன் படி 2009ல் யத்தம் நிறைவு பெற்று 2010ல் 150 மளலிமாருக்கு ஆசிரிய நியமனம் வழங்கியதன் மூலம் ஜனாதிபதி அவர்கள் தான் சொன்னதை செய்து காட்டுபவர் என்பது எமக்கு உறுதியானது. இதற்காக மௌலவிமார் எமக்கோ ஜனாதிபதிக்கோ நன்றி தெரிவிக்காதவர்களாக இருப்பதற்காக நாம் நன்றி கெட்டவர்களாக இருக்க முடியாது. அதே போல் இந்த தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்று முஸ்லிம்களும் உலமா கட்சியுடன் அணி திரண்டால் மௌலவி ஆரியரிய நியமனத்தை மீண்டும் எம்மால் பெற்றுக்கொடுக்க முடிவதோடு முஸ்லிம்களுக்கெதிரான இனவாதங்களை ஜனாதிபதி கட்டுப்படுத்துவார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
முஸ்லிம்களை பொறுத்தவரை சமீப காலத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் மட்டும்தான் அவர்களுக்கு நினைவில் உள்ளது. இதற்கு முன் எத்தகைய பயங்கர சூழலில் வாழ்ந்தோம், எத்தனை உயிர்களை பலி கொடுத்தோம், எங்களை காப்பாற்ற ஒரு தலைவர் வர மாட்டாரா என்று நாம் ஏங்கியதையும் மறந்து விட்டார்கள். ஏனைய இனங்களை விட முஸ்லிம் பொதுமக்களே பாரிய பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்தது. ஒரு சமூகம் மொத்தமாக தமது மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டது என்றால் அது முஸ்லிம் சமூகம் மட்டுமேயாகும்.
இத்தகைய கொடூரமான யுகத்திலிருந்து நம்மை விடுவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ் நாள் முழுவதும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். எனவேதான் இத்தகையதொரு தலைவரை மீ;ண்டும் ஜனாதிபதியாக்குவதே இந்த நாட்டின் எதிர் காலத்துக்கு நாம் செய்யும் சிறந்த செயல் என்பதால் நாம்; இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவக்கு ஆதரவளிக்கிறோம் என்றார்.
மேற்படி ஊடக மாநாட்டில் உலமா கட்சியின் உப தலைவர் மௌலவி ஜெஸ்மின், இணை செயலாளரும் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருhன இஸ்ஸதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

.jpg)