த.நவோஜ்-
வடக்கில் ஒரு இடத்திலும், கிழக்கில் ஒரு இடத்திலும் இன்னும் அரசாங்கம் நலன்புரி நிலையங்கள் என்று சொல்லி எமது மக்களை அகதி முகாம்களில் அடைத்து வைத்திருக்கின்றார்கள். அவர்களை அவர்கள் சொந்த இடத்திற்கு அனுப்பாமல், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவு மறுக்கப்பட்டிருக்கின்றது அதனை மீண்டும் வழங்குங்கள் என்று நாம் அரசாங்கத்தினை வலியுறுத்தியிருக்கின்றோம் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் தெரிவித்தார்.
அகில இலங்கை இந்து மாமன்றம் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர் நடாத்தும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் நினைவு தினம் மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு மேற்கடண்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நல்லூர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி, கிழக்குப் பல்கலைக் கழக முதுநிலை விரிவுரையாளர் ச.முகுந்தன், கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், இந்துநாகரீக துறை தலைவருமான திருமதி.சாந்தி கேசவன், கொழும்பு கல்வி வலய ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் திருமதி.ஹேமா சண்முகசர்மா, அகில இலங்கை இந்து மாமன்ற பொதுச் செயலாளர் மு.கதிர்காமநாதன், அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் சி.தனபாலா, விஸ்வ ஹிந்துப் பரிசத்தின் வர்த்தகப் பிரதி நிதியும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவருமான சி.அருளானந்தம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி முதல்வர் எஸ்.லசீசன், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், ஆலய தர்மஹர்த்தாக்கள், பேரவையின் பிரதிநிதிகள், இந்து அமைப்பு பிரதிநிதிகள், இந்து சமய ஆர்வாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
மட்டக்களப்பு மண்தான் இன்னும் நாவலர் எதிர்பார்த்த சைவ மரபிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இங்கே இருக்கின்ற தாய்மார்கள் சேலையில் காணுகின்ற போது அது எமக்கு பெருமையாக இருக்கின்றது. அந்த பெருமையை கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் காண முடியாது. யாழ்ப்பாணத்தினை பொருத்த மட்டில் திருமணங்களின் போது மட்டுமே அவர்கள் சைவ உணவினைப் பரிமாறுகின்றனர். ஆனால் நாளாந்தம் சைவ உணவினை பேணும் நிலைமை நான் இந்த கிழக்கு மண்ணில் தான் கண்டிருக்கின்றேன். இப்படியாக கிழக்கு மாகாணமெங்கும் சைவத்தை சிறப்பாக வாழ வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
கடந்த சில ஆண்டுகளாக அகில இலங்கை இந்து மாமன்றம் வடக்கில் சுவாமி விபுலானந்தருக்கும், கிழக்கில் ஆறுமுகநாவலருக்கும் விழா எடுப்பதில் முனைப்பாக இருந்து வருகின்றது. அந்த பெருமைக்குரியவர் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்கள் தான் ஏனெனில் ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் போது கூறினார் வடக்கும் கிழக்கும் இணைந்து நின்றால் தான் எமது பலத்தினைக் காட்ட முடியும். அவர் அப்படி சொல்லும் போது பெருந்தலைவர் தந்தை செல்வாவின் வார்த்தைகள் எமக்கு ஞாபகம் வந்தது. எமது இரு மாகாணமும் இணைந்து செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார் அன்று அவர் வித்திட்ட அந்த கருத்தினை நாம் செயற்படுத்தி வருகின்றோம்.
அதற்கு மேலாக எமது பாராளுமன்றத்திலே சைவ சின்னங்களை அணிந்து கொண்டு செந்தமிழில் அவர் உரையாற்றுவதை தொலைக்காட்சியில் நாம் காணுகின்ற போது அது எமக்கெல்லாம் ஒரு தனிப் பெருமை.
அது மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற எம் உடன் பிறப்புகளே இந்த மண்ணில் சுவாமி விபுலானந்தர் அவர்கள் வாழ்ந்து ஒரு புனித வழியை உங்களுக்கு ஏற்படுத்தினார்கள் அவர் கூட ஆறுமுக நாவலரைப் பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.
அவர்களைப் போன்று எமது பாராளுமன்ற உறுப்பினரும் துணிவுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இவர் ஆலயங்களில் இடம்பெறுகின்ற மிருகப் பலியினை தடுப்பதற்கு அயராது பாடுபட்டு வருகின்றவர். இத்தகு புண்ணியம் எம் அனைவருக்குமே சாரும். வேட்டியும் சால்வையும் இன்றும் பாராளுமன்றத்தில் ஒலிக்கின்றது என்றால் அது வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரிடத்திலும் இல்லை. ஆனால் யோகேஸ்வரன் அவர்கள் அதனை மேற்கொண்டு இன்றும் ஆறுமுகநாவலரை நினைவு படுத்திக் கொண்டிருக்கின்றார். இவரது இந்த துணிவிற்கு உங்களது ஆதரவு எப்போதும் தேவை எனவே அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாவலரது சேவை ஒரு அச்சுப் பதிவு சேவை ஒரு முக்கியமான பணி அவரது பணியில் இந்து மாமன்றமானது இந்த நாவலர் நினைவு தினத்தில் இந்து ஒளி என்ற சஞ்சிகையினை வெளியிட்டு வருகின்றோம். இந்த இந்து ஒளி புத்தகத்தில் பல தொகுப்புகள் பற்பல கட்டுரைகள் வெளியிட்டிருக்கின்றோம். இன்னும் ஒரு விடயம் குறிப்பிட வேண்டும் தந்தை செல்வா அவர்கள் அரசியலுக்காக சொல்லவில்லை அவர் ஒரு கிறிஸ்தவர் இருந்தாலும் அவரும் அவர் ஆறுமுக நாவலர் பற்றி சிறப்பாக கூறியிருக்கின்றார்.
'அறிவு ஆற்றல் படைத்த தலைவர்கள் பலர் எம்மினத்தில் தோன்றியிருக்கின்றனர். ஆனால் அதில் ஒரு சிலர் தான் தம் அறிவாற்றலை தாம் பெற்ற அனுபவத்தினை தமது பிறந்த நாட்டிற்கும் தம் இனத்திற்கும் தாம் பேசும் மொழியின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய குறிப்பிடத்தக்கவர்களுள் ஆறுமுகநாவலரும் முக்கியமானவர்' என்று அவர் கூறியுள்ளார். ஏனெனில் பிற மதத்தவரின் உள்ளத்தில் கூட ஆறுமுகநாவலர் அவர்கள் எமது இனத்திற்கு செய்த சேவை எப்படிப் பதிந்து இருக்கின்றது. இதனை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
யோகேஸ்வரன் அவர்கள் கூறியது போன்று ஆறுமுக நாவலர் அவர்கள் கஞ்சித் தொட்டியின் மூலம் வறுமையில் வாடிய மக்களின் பசியினைனத் தீர்த்தார். அது போல் அத்தகு சேவை இன்னும் தேவைப்படுகின்றது. வடக்கில் ஒரு இடத்திலும், கிழக்கில் ஒரு இடத்திலும் இன்னும் அரசாங்கம் நலன்புரி நிலையங்கள் என்று சொல்லி எமது மக்களை அகதி முகாம்களில் அடைத்து வைத்திருக்கின்றார்கள். அவர்களை அவர்கள் சொந்த இடத்திற்கு அனுப்பாமல். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவு மறுக்கப்பட்டிருக்கின்றது அதனை மீண்டும் வழங்குங்கள் என்று நாம் அரசாங்கத்தினை வலியுறுத்தியிருக்கின்றோம்.
உலக உணவுத் திட்டத்தின் மூலமும் எங்களினால் இயன்ற உதவிகளையும் செய்து கொண்டிருக்கின்றோம். இப்படியான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள்.
இதுபோல் அண்மையில் கொஸ்லந்தையில் இடம்பெற்ற மலைச்சரிவினால் எமது உடன் பிறப்புகள் பாதிக்கப்பட்டார்கள் ஆனால் அந்த இடத்திற்கு முதலில் சென்று பார்த்து அந்த மக்களுக்கான உதவிகளை மேற்கொண்டவர் யோகேஸ்வரன் அவர்கள் அதற்கு அவர் எம்மிடமும் உதவிகள் கோரினார். அதன் பின்னர் தான் மற்றைய தலைவர்கள் சென்றார்கள். ஆபத்திற்கு உதவுபவன் தான் உண்மையான நண்பன் அந்த வகையில் சேவைகள் செய்தார். உண்மையில் அகில இலங்கை இந்து மாமன்றத்திலும் அவரது சேவை அளப்பரியது.
இன்று எமக்கு இப்படியானவர்கள் தேவை சிந்தித்து செயலாற்ற வேண்டும். சிந்தித்து செயற்படுவதற்கு ஒரு சிலர் தான் இருக்கின்றார்கள். அதனால் தான் எமது இனம் தாழ்ந்து போய் கொண்டிருக்கின்றது. எல்லோரும் தங்கள் சொந்த நலனைத் தான் பார்க்கின்றார்கள் வெளிநாடு சென்று எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று தான் பார்க்கின்றார்களே தவிர எங்கள் இனத்திற்கு என்ன செய்யலாம் என்பதைப் பற்றி சிந்திப்பதற்கு ஒரு சிலர் தான் இருக்கின்றார்கள் ஆன படியால் தான் நாம் இப்படி சிந்தித்து செயற்படுகின்ற தலைவர்கள் தேவை.
கிழக்கு மாகாணத்தில் இருந்து அகில இலங்கை இந்து மாமன்றத்திற்கு வருகின்ற பிரதிநிதிகள் ஆற்றுகின்ற சேவையைப் பாராட்டியே ஆக வேண்டும். இந்து மாமன்றத்தின் முகாமைப் பேரவைக் கூட்டத்தில் உபயோகமான சேவைநலன் கருத்துக்களை வெளிப்படுத்துபவர்கள் கிழக்கு மாகாணத்தவர்கள் தான். அவர்கள் எம்மிடம் ஒரு வேண்டுகோளினை விடுத்திருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்திற்கு என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பணிமனை ஒன்று இருக்க வேண்டும் என்று. அந்தவகையில் நாம் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அனைத்து இந்து அமைப்புகளையும் சேர்த்து செயற்பட வேண்டும் அந்த ஒருமை எங்களிடத்தில் போதாது. அங்குதான் நாம் பிழை விடுகின்றோம் ஓவ்வொரு மன்றமும் தனித்தனியாக இயங்காமல் எல்லோரும் சேர்ந்து இயங்க வேண்டும்.
அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் பணிமனை அமைப்பதற்கு நாங்கள் முயற்சி செய்வோம். அதற்கு மேலாக கிழக்கு மாகாணத்தில் ஆன்மீக எழுச்சிக் கருத்தரங்கு நடத்த வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த ஆண்டு யோக சுவாமிகள் ஐம்பதாவது ஆண்டு யோக சுவாமியின் சிலை உலகமெல்லாம் கொண்டு சென்று தற்போது யாழ்ப்பாணத்தில் கீரிமலையில் வைத்திருக்கின்றார்கள். அந்த விதத்தில் அந்த யோக சுவாமி சிலையையும் இலங்கை பூராகவும் கொண்டு வரப்பட வேண்டும் என்று அவா இருக்கின்றது. அந்த சிலையினை மட்டக்களப்பிற்கும் கொண்டு வரவேண்டும் அப்போது தை மாதம் அளவில் அந்த கருத்தரங்கினை நிகழ்த்த தீர்மானித்திருக்கின்றோம்.
எமது இந்து மாமன்றத்தில் பலர் பல வழிகளிலும் சேவையாற்றுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் இந்து மாமன்றத்தின் கிளையுடன் ஆதினக் கிளையும் இருந்தால் சிறப்பானதாக இருக்கும் அந்த வகையில் யோகேஸ்வரன் அவர்கள் இதனை சிறப்பாக செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்று தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment