“பகிடிவதை ஒரு பாரம்பரியம் அல்ல; அது ஒரு நோய்” – E/24 மாணவர்கள் முன்னிலையில் உபவேந்தர் பேராசிரியர் ஜுனைடீன்.



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் E/24 மாணவர் குழுவினருக்கான கல்வி நிகழ்ச்சித் தொடக்க நிகழ்வு 2026.06.01 ஆம் திகதி பொறியியல் பீடத்தின் சிவில் பொறியியல் கலையரங்கில் இடம்பெற்றது.

நிகழ்வில் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், பதிவாளர் எம்.ஐ. நௌபர், நூலகர் எம்.எம். றிபாவுத்தீன், பேராசிரியர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

இங்கு வரவேற்புரையை மின் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியலாளர் ஏ.ஐ.எஸ். ஜுஹானியா நிகழ்த்தினார். தொடர்ந்து இயந்திரப் பொறியியல் துறையின் விரிவுரையாளர் பொறியியலாளர் எச்.பி.ஏ. ஜயமினி கல்விசார் பணியாளர்கள் சார்பில் உரை நிகழ்த்தினார்.

இறுதியாண்டு மாணவர் டபிள்யூ.எஸ். உடவத்த புதிய மாணவர்களை வரவேற்று உரையாற்றியதுடன், சிவில் பொறியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியலாளர் எம்.ஐ. இல்ஹாம் ஜெஸீல் சிரேஷ்ட கல்விசார் பணியாளர்கள் சார்பில் உரையாற்றினார்.

இங்கு பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம் புதிய மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் வழிகாட்டல்களையும் வழங்கியதுடன், பல்கலைக்கழக வாழ்க்கையில் ஒழுக்கம், கல்விசார் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தினார்.

நிகழ்வில் கலந்துகொண்ட பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், புதிய மாணவர்களை வரவேற்று உரையாற்றுகையில், பல்கலைக்கழக வாழ்க்கை என்பது பாடநெறி கற்றலுக்கு அப்பாற்பட்டு தனிநபர் மாற்றத்தையும் தலைமைத்துவ வளர்ச்சியையும் உருவாக்கும் முக்கியமான கட்டமாகும் எனக் குறிப்பிட்டார்.

குறிப்பாக பகிடிவதை தொடர்பில் அவர் மிகத் தெளிவான மற்றும் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். “பகிடிவதை என்பது ஒரு பாரம்பரியம் அல்ல; அது ஒரு நோய். சகோதரத்துவத்தை உருவாக்கும் நடைமுறையுமல்ல. அது மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு சமூகப் புற்றுநோய்” என அவர் தெரிவித்தார்.

பகிடிவதையைப் பரப்புவதற்கு இடைத்தரகர்கள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், சிலர் நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம் போன்ற பெயர்களில் புதிய மாணவர்களை தங்களது வலையமைப்புக்குள் இழுத்து, பகிடிவதை கலாசாரத்தை தொடர முயற்சிப்பதாக தெரிவித்தார். இத்தகைய முயற்சிகளுக்கு புதிய மாணவர்கள் எந்தவிதத்திலும் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், நேரடி பகிடிவதை மட்டுமன்றி சமூக ஊடகங்கள் மற்றும் இணைய வழி இடம்பெறும் “Cyber Ragging” குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இதுபோன்ற சம்பவங்களில் தொடர்புடைய மாணவர்களுக்கு ஏற்கனவே ஆறு மாத இடைநீக்கம் உள்ளிட்ட கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்திலும் பல்கலைக்கழகம் “Zero Tolerance Policy”யையே கடைப்பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.

பரீட்சை முறைகேடுகள் தொடர்பிலும் அவர் மாணவர்களுக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கினார். சிறிய குறிப்பேடு அல்லது சூத்திரத் தாளைக் கூட பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவது மாணவரின் கல்வி எதிர்காலத்தையே பாதிக்கக்கூடிய குற்றமாகக் கருதப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். கல்விப் பயணத்தில் நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் சொந்த முயற்சியே வெற்றிக்கான அடிப்படை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பொறியியல் கல்வி என்பது விமர்சன சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை வளர்க்கும் துறையாகும் என்றும், எதிர்காலத்தில் நாட்டின் அபிவிருத்திக்கும் உலகளாவிய சவால்களுக்கும் தீர்வு காணும் பொறியியலாளர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் பொறியியல் பீடத்தில் இணைந்திருப்பதை சுட்டிக்காட்டிய உபவேந்தர், பல்கலைக்கழக வாழ்க்கை மாணவர்களை தங்களது ஆறுதல் வட்டத்திலிருந்து வெளியே கொண்டு வந்து சுயமாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர்களாக மாற்றும் எனக் குறிப்பிட்டார். சவால்கள் மற்றும் சிரமங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவையே மனிதர்களை வலிமையானவர்களாக உருவாக்குகின்றன என்றும் அவர் கூறினார்.

மாணவர்கள் தங்களது கல்வி இலக்குகளில் உறுதியாக இருந்து, நேரத்தை திறம்பட முகாமைத்துவம் செய்து, விரிவுரைகளில் தொடர்ச்சியாக பங்கேற்று, கேள்விகள் கேட்டு அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இங்கு உரையாற்றிய பீடாதிபதி பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம், E/24 மாணவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் இணையும் 14ஆவது மாணவர் குழுவாக இருப்பதைக் குறிப்பிட்டார்.

கல்விச் செயற்பாடுகளில் ஒழுங்கான பங்கேற்பும் குறைந்தபட்சம் 80 சதவீத வருகைப் பதிவும் கட்டாயமானவை என வலியுறுத்திய அவர், மாணவர்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கல்வி ஆலோசகர்களுடன் தொடர்ச்சியான தொடர்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

மேலும், ஆய்வுகூடங்கள், நூலகம், விளையாட்டு வசதிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் தொழில்முறை சங்கங்களின் வாயிலாக தமது திறன்களையும் ஆளுமையையும் மேம்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்களை ஊக்குவித்ததுடன், கல்வியில் மட்டுமன்றி தலைமைத்துவம், குழு ஒருங்கிணைப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு போன்ற பண்புகளிலும் முன்னேறி திறமையான பொறியியலாளர்களாக உருவாக வாழ்த்துத் தெரிவித்தார்.

சிரேஷ்ட கல்விசார் பணியாளர்கள் சார்பில் உரையாற்றிய சிவில் பொறியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியலாளர் எம்.ஐ. இல்ஹாம் ஜெஸீல், தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இணைந்துள்ள E/24 மாணவர்கள் இனி ஒரு கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் மட்டுமல்லாது, எதிர்கால பொறியாளர்களாக உருவாக்கப்படும் சமூகத்தின் அங்கங்களாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

உரையின்போது, 2013 ஆம் ஆண்டு பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் குறைந்த வளங்களுடன் பயணம் தொடங்கியிருந்த போதிலும், இன்று நவீன ஆய்வகங்கள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் தரமான கற்றல் சூழலுடன் நாட்டின் முன்னணி பொறியியல் கல்வி மையங்களில் ஒன்றாக வளர்ந்திருப்பதை அவர் எடுத்துரைத்தார். தற்போது சிவில், மின்சார மற்றும் மின்னணு, இயந்திரப் பொறியியல் துறைகளில் நவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வகங்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், வகுப்பறைக் கல்வியுடன் மட்டுப்படாமல் தொழிற்பயிற்சி, களப்பயணங்கள், தொழில்துறை இணைப்புகள், தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் மூலம் மாணவர்கள் தொழில்முறை உலகிற்குத் தயார்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். ஆறு மாத தொழிற்பயிற்சி வாயிலாக தொழில்துறை அனுபவம் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழக வாழ்க்கையில் கல்விச் சாதனைகளுடன் உடல் மற்றும் மனநல சமநிலையையும் பேணுதல், விளையாட்டு, சமூக மற்றும் மாணவர் அமைப்புகளின் செயற்பாடுகளில் ஈடுபடுதல் ஆகியவை அவசியம் என வலியுறுத்திய அவர், பல இனங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் கல்வி கற்கும் சூழல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக, பெற்றோர், பல்கலைக்கழகம் மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் பொறியாளர்களாக உருவாக வேண்டும் என புதிய மாணவர்களை ஊக்குவித்த அவர், உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்தல், தொடர்ந்து அறிவைப் பெருக்கிக் கொள்ளுதல், அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்தல் மற்றும் வெற்றி பெறும் வரை விடாமுயற்சியுடன் செயல்படுதல் ஆகிய நான்கு அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார்.

அதேவேளை, மாணவர் கையேட்டில் உள்ள ஒழுக்க விதிமுறைகள், குறிப்பாக பகிடிவதை மற்றும் பரீட்சை முறைகேடுகள் தொடர்பான கட்டுப்பாடுகளை முழுமையாக அறிந்து கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் நினைவூட்டினார்.

இந்த நிகழ்வில் கல்விசார் பணியாளர்கள் சார்பில் உரையாற்றிய இயந்திரப் பொறியியல் துறை விரிவுரையாளர் பொறியியலாளர் எச்.பி.ஏ. ஜயமினி, E/24 மாணவர்களை வரவேற்று உரையாற்றுகையில், அவர்கள் கடுமையான போட்டி நிலையைத் தாண்டி பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியுள்ள திறமையாளர்கள் என்பதை நினைவூட்டினார்.

பாடசாலைக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகக் கல்விக்கான மாற்றம் வெறும் மதிப்பெண்களைப் பெறுவதற்கான பயணமல்ல என்றும், சமூகத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைத் தீர்வாளர்கள், புதுமையாளர்கள் மற்றும் தலைவர்களாக உருவாகும் வாய்ப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.

சுயகற்றல், ஆர்வம், விடாமுயற்சி, குழுப்பணி, ஒழுக்கம் மற்றும் தொழில்முறை பொறுப்புணர்வு ஆகியவை வெற்றிகரமான பொறியியலாளராக உருவாகுவதற்கான அடிப்படை அம்சங்களாகும் என வலியுறுத்திய அவர், பல்கலைக்கழக வாழ்க்கையில் கல்விச் சாதனைகளுடன் மனநலன், நட்புறவு மற்றும் தனிநபர் வளர்ச்சிக்கும் சம அளவு முக்கியத்துவம் வழங்குமாறு புதிய மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், எதிர்கால உலகின் தேவைகளுக்கேற்ப செயற்கை நுண்ணறிவு, தன்னியக்கமயமாக்கல், பசுமை ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் தங்களைத் தயார்படுத்திக்கொண்டு, உலகளாவிய அரங்கில் சிறந்து விளங்கக்கூடிய பொறியியலாளர்களாக உருவாக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக, பொதுக் கருப்பொருள் நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளரும் இயந்திரப் பொறியியல் துறை விரிவுரையாளருமான பொறியியலாளர் எஸ்.எம். சாஹிப் நன்றியுரையாற்றினார்.

இங்கு கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

புதிய கல்விப் பயணத்தை ஆரம்பிக்கும் E/24 மாணவர் குழுவினருக்கு கல்வியாளர்கள், சிரேஷ்ட மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், பகிடிவதை மற்றும் பரீட்சை முறைகேடுகளற்ற ஒழுக்கமான பல்கலைக்கழகச் சூழலை உருவாக்கும் உறுதியுடன் நிகழ்வு வெற்றிகரமாக நிறைவுற்றது.






























 















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :