மாணவர்களிடையே கலாசாரப் புரிந்துணர்வு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், பல்வேறு இன, மத மற்றும் கலாசாரப் பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் கலந்துகொண்டு மாணவர்களுடன் இணைந்து உணவுத் திருவிழாவை ரசித்தார். மாணவர்களால் தயாரிக்கப்பட்ட மற்றும் பரிமாறப்பட்ட உணவுகளை பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர்களான றமீஸ் அப்துல்லாஹ் மற்றும் எம்.ஐ.எம். கலீல் உள்ளிட்ட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சுவைத்து மகிழ்ந்தனர்.
நிகழ்வின் கலந்துகொண்ட கலை மற்றும் கலாசாரப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், நிகழ்வை ஆரம்பித்து வைத்து சிறப்புரையாற்றினார். தனது உரையில், கலை மற்றும் கலாசாரப் பீடம் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களும் பணியாளர்களும் இணைந்து கற்றலும் பணியாற்றலும் நடைபெறும் பன்முகத்தன்மை கொண்ட கல்விச் சூழலாக விளங்குவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இத்தகைய சூழலில் ஒவ்வொரு சமூகத்தினரின் மத, கலாசார மற்றும் பாரம்பரிய அடையாளங்கள் மதிக்கப்படுவதோடு, அவர்களது முக்கிய விழாக்கள் மற்றும் சமூக நிகழ்வுகளுக்கும் உரிய அங்கீகாரமும் இடமும் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். அந்த வகையில், முஸ்லிம் சமூகத்தின் முக்கியமான மதப் பண்டிகைகளில் ஒன்றான ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், நிகழ்வை வெற்றிகரமாக ஒழுங்குபடுத்திய மாணவர் ஒன்றியத்தினருக்கு தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இன்று இங்கு பல இனங்களையும் மதங்களையும் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து இந்நிகழ்வை சிறப்புற நடத்துகின்றனர். இவ்வாறான நிகழ்வுகள் சமூக நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் வலுப்படுத்துகின்றன. ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் போன்ற சமய மற்றும் கலாசார நிகழ்வுகள் சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன” என்றார்.
அத்துடன், கலை மற்றும் கலாசாரப் பீடத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த கல்விசார் பணியாளர்களும் மாணவர்களும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பெருநாள் மரபுகளையும் இஸ்லாமிய கலாசாரப் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகள், இனிப்புப் பண்டங்கள், சிற்றுண்டிகள் மற்றும் விசேட பெருநாள் உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன. பலவகை இனிப்புகள் மற்றும் பாரம்பரிய முஸ்லிம் உணவுகள் உள்ளிட்ட சுவைமிகு உணவுகள் பங்கேற்பாளர்களுக்கு பரிமாறப்பட்டது.
உணவுக் கண்காட்சியுடன் இணைந்து மாணவர்களுக்கிடையிலான நட்புறவையும் கலாசாரப் பரிமாற்றத்தையும் ஊக்குவிக்கும் வகையிலான கலந்துரையாடல்கள் மற்றும் சமூகத் தொடர்பாடல்களும் இடம்பெற்றன. இதன் மூலம் பல்கலைக்கழக சமூக உறுப்பினர்கள் ஒருவரின் கலாசாரத்தை மற்றொருவர் அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பைப் பெற்றனர்.
இந்நிகழ்வில் கலை மற்றும் கலாசாரப் பீடத்தின் திணைக்களத் தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.ரீ.எம். அஷ்ஹர், கல்விசாரா பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
பெருநாளின் மகிழ்ச்சி, சகோதரத்துவம், பகிர்வு மற்றும் ஒற்றுமை ஆகிய உயரிய விழுமியங்களைப் பிரதிபலித்த “Eid Food Festival 2026” நிகழ்வு, பல்கலைக்கழக சமூகத்தில் நல்லிணக்கத்தையும் பரஸ்பர மரியாதையையும் மேலும் வலுப்படுத்திய சிறந்த கலாசார நிகழ்வாக அமைந்ததுடன், பங்கேற்ற அனைவராலும் பாராட்டப்பட்ட மறக்கமுடியாத அனுபவமாகவும் அமைந்தது. இத்தகைய நிகழ்வுகள் மாணவர்களிடையே சமூகப் பொறுப்பு, கலாசார விழிப்புணர்வு மற்றும் தேசிய ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :
Post a Comment