நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஏ. நஸீர் அஹமட் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விவசாய விஞ்ஞானத்தில் சிறப்புப் பட்டத்தையும், பிலிப்பைன்ஸ் லோஸ் பானியோஸ் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றிருந்தார். தனது கல்வி, ஆராய்ச்சி மற்றும் நிர்வாக அனுபவங்களின் ஊடாக நாட்டின் உயர்கல்வித் துறைக்கு பெறுமதியான பங்களிப்புகளை வழங்கிய சிறந்த கல்வியாளராவார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விப் பணியை ஆற்றிய பின்னர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த அவர், உயிரியல் விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், துறைத் தலைவராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாக தனது சேவையை ஆரம்பித்த அவர், பீடத்தின் கல்வி மற்றும் நிர்வாக வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முன்னோடி தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, சுற்றுச்சூழல் பொருளாதாரம், உயிரினப் பல்வகைமை பாதுகாப்பு, சூழலியல் மற்றும் இயற்கை வள முகாமைத்துவம் போன்ற துறைகளில் அவர் ஆற்றிய கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பங்களிப்புகள் பல மாணவர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளன. பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் அவர் வழங்கிய பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும்.
அன்னாரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமன்றி, தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகத்திற்கும், அவரது மாணவர்களுக்கும், நண்பர்களுக்கும், உயர்கல்வித் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிரார்த்திப்பதுடன், துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் சக ஊழியர்கள் அனைவருக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ஊடகப் பிரிவு
தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

0 comments :
Post a Comment