முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க தனக்கு 100 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு முன்வந்தது யார் என்பதனை கூறவேண்டும். அதனை கூறாமல் மறைப்பது தவறாகும். இவர் 100 மில்லியன் ரூபா பெறுமதியானவரா என்று தெரியவில்லை.
இவ்வாறு வாங்க வந்தவர் யாராக இருந்தாலும் அவர் முட்டாளாக தான் இருக்க வேண்டும் என தெரிவித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, எவ்வாறெனினும் நவீன் திஸாநாயக்க அதனை கூறவேண்டும். தகவலை மறைக்கக்கூடாது. ஆனால் அரசாங்கத்தைப பொறுத்தவரை யாரையும் அவ்வாறு பணம் கொடுத்து நிறுத்தவேண்டிய அவசியம் இல்லை. யாரையும் அவ்வாறு பணம் கொடுத்து வாங்க எங்களிடம் பணமும் இல்லை எனவும் தெரிவித்தார்.
எமது கட்சி கீழ் மட்டத்தில் மிகவும் பலமாக உள்ள கட்சியாகும். இந்நிலையில் யாருக்கும் பயந்துகொண்டு நாங்கள் இருக்கவில்லை. யாருக்கு எதற்காக நாங்கள் பயப்படவேண்டும். நாங்கள் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் அங்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
எதிரணியின் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல கட்சிகளுடனும் முக்கியஸ்தர்களுடனும் உடன்படிக்கைகளை செய்துகொண்டுள்ளார். மேலும் சில தரப்புக்களுடன் பல்வேறு உடன்பாட்டுக்களுக்கும் மைத்திரிபால சிறிசேன வந்துள்ளார்.
பாரிய முரண்பாடுகள்
இந்நிலையில் எதிரணியில் அங்கம் வகிக்கின்ற தரப்புக்கள் மத்தியில் தற்போது பாரிய முரண்டுபாடுகள் தோன்றியுள்ளன. 100 நாட்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்று ஒருவர் கூறியுள்ளார். மற்றுமொருவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் திருத்தம் மட்டுமே கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் இறுதியில் மாற்றத்தையோ திருத்தத்தை பாராளுமன்றமே செய்யவேண்டும் என்பதே உண்மையாகும். இந்த விடயம் கூட தெரியாமல் எதிரணியினர் தமக்குள் பாரிய முரண்பாடுகளை தோற்றுவித்துக்கொண்டுள்ளனர். அந்தவகையில் எதிரணியினர் கூட்டு முரண்பாடுகளினால் நிறைந்துபோயுள்ளது.
வேட்புமனுவின் பின்னர்
பதாதைகள் அகற்றப்படும்
இதேவேளை ஜனாதிபதியின் பதாதைகள் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். எமது ஆளும் கூட்டணியை பொறுத்தவரை பல அமைப்புக்கள் கிராம மட்டத்தில் உள்ளன. மிகச்சிறந்த கட்டமைப்புடன் எமது கட்சி காணப்படுகின்றது. எனவே அவ்வாறான அமைப்புக்கள் எமது அனுமதியை பெறாமலேயே ஜனாதிபதியின் பிறந்த தினத்துக்கு பதாதைகளை பொருத்தியுள்ளன. இந்நிலையில் இன்னும் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் அறிவிக்கப்படாமையினால் அவற்றை தவறு என்று கூறவும் முடியாது. எனவே வேட்பு மனு தாக்கல்கள் முடிவடைந்ததும் தேர்தல் சட்டத்துக்கு அமைய பதாதைகள் அகற்றப்பட்டுவிடும். அதற்கு சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். எமது கட்சி கீழ் மட்டத்தில் மிகவும் பலமாக உள்ள கட்சியாகும். இந்நிலையில் யாருக்கும் பயந்துகொண்டு நாங்கள் இருக்கவில்லை. யாருக்கு எதற்காக நாங்கள் பயப்படவேண்டும். நாங்கள் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. எமது கட்சியினர் சிறப்பாக செயற்பட்டுவருகின்றனர்.
ஜனநாயகம் இல்லையா?
நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று எதிர்க்கட்சியினர் புதுக் கதை ஒன்றை கூறிவருகின்றனர். இதுவரை காலமும் நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று அமைச்சரவையிலோ கட்சி மட்டத்திலோ கூறாத மைத்திரிபால சிறிசேன தற்போது எதிரணியுடன் சேர்ந்துகொண்டு ஜனநாயகம் இல்லை என்று கூறிவருகின்றார். தமது மனதில் கூட ஜனநாயகம் இல்லாதவர்கள் ஜனநாயகம் பற்றிபேசுகின்றனர்.
மோசடிக்கு முடிவு கட்டினோம்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனநாயகத்துக்காக எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ள கட்சியாகும். நாங்கள் தான் இந்த நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்கினோம். தேர்தலில் கூட பாரிய மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்தினோம். அதாவது ஒரு காலத்தில் தேர்தலின்பேழ வாக்குகளை கொள்ளையடிப்பது பாரியளவில் காணப்பட்ட விவகாரமாகும். ஆனால் நாங்கள் அந்த விடயத்தை தடுத்து நிறுத்தினோம். வாக்களிப்பதற்கு அடையாள அட்டையை உறுதிபடுத்தியதன் மூலம் வாக்களிப்பில் காணப்பட்டுவந்த முறைகேடுகளை தடுத்து நிறுத்தினோம்.
இதற்கு முன்னர் அதிகளவில் கொழும்பில் இரட்டைப் பதிவுகளும் காணப்பட்டன. அவற்றை முடிவுக்கு கொண்டுவந்தோம். ஐக்கிய தேசிய கட்சியின் காலத்தி்ல் இடைத் தேர்தல்கள் எவ்வாறு நடந்தன என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த முறைக்கு நாங்கள் முடிவு கட்டினோம். ஜனநாயகத்தை நிலைநாட்டினோம்.
விஞ்ஞாபனம் வரும்
இதேவேளை தேர்தல் விஞ்ஞாபனம் தற்போது தயாரிக்கப்பட்டுவருகின்றது. அதனை வேட்பு மனுத்தாக்கலின் பின்னர் வெளியிடுவோம். மக்களின் விருப்பம் என்னவென்று அறிய எமது ஜனாதிபதி ஆர்வமாக உள்ளார். எனவே அதன்படி தேர்தல் விஞ்ஞாபனம் விரைவில் வெளியிடப்படும்.
சுயாதீன தேர்தலுக்கு
அர்ப்பணிப்போம்
மேலும் .எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை சுயாதீனமாகவும் ஜனநாயக ரீதியாகவும் நடத்துவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். நேர்மையான தேர்தல் ஒன்றுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். ஜனாதிபதி மஹிந்த எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் அவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வோம் என்று குளோபல் தமிழ் அமைப்பின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இவர் இதனை வெறுமனே கூறியதாக நாங்கள் பார்க்கவில்லை. அதன்பின்னரே பொது வேட்பாளர் முன்வந்தார். சந்திரிகா குமாரதுங்க ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் வந்தனர். இந்நிலையில் எதிரணி தரப்புக்களுடன் மைத்திரிபால சிறிசேன செய்துகொண்டுள்ள உடன்படிக்கைககளை வெளிப்படுத்தவேண்டும்.
நிலைப்பாட்டை அறிவிப்போம்
அரசியலமைப்பு மாற்றங்களை செய்வதற்காகவே பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுக்குழுவில் இடம்பெறுமாறு ஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுத்து வந்தோம். ஆனால் அவர்கள் வரவில்லை. இந்நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பான எமது நிலைப்பாட்டடை நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுவோம்.
அழுத்தம் இல்லை
இந்த அரசாங்கத்தில் அமைச்சர்கள் என்ற வகையில் எங்களுக்கு எவ்விதமான அழுத்தங்களும் இல்லை. அமைச்சர்கள் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக செயற்படவேண்டும். அவ்வாறு செயற்படும்போது எவ்விதமான அழுத்தங்களும் வராது. நான் இந்த அரசாங்கத்தில் குறிப்பிட்ட காலம் அமைச்சராக இருந்துவிட்டேன். எங்களுக்கு எந்த அழுத்தமும் வந்ததில்லை. வேலை கூடும்போது மன அழுத்தங்கள் வரலாம். அதாவது வேலையை செய்து முடிக்க முடியாமையினால் இவ்வாறு அழுத்தங்கள் வரலாம். எங்களுக்கு அழுத்தம் இருப்பதாக எங்கள் முகங்களில் தெரிகின்றதா?

0 comments :
Post a Comment