தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மேலும் ஓர் பெருமை



18ஆவது பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து நான்கு முதல்தரப் பட்டதாரிகளுக்கு சர்வதேச உயர்கல்வி புலமைப்பரிசில்கள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து, கலை மற்றும் கலாசாரப் பீடத்தைச் சேர்ந்த நான்கு முதல்தரப் பட்டதாரிகள், இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) வழங்கும் உயர்மதிப்புமிக்க சர்வதேச உயர்கல்விப் புலமைப்பரிசில்களைப் பெற்று, இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டப்படிப்புகளைத் தொடரத் தெரிவாகியுள்ளனர்.

பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து, ஒரே நேரத்தில் நான்கு முதல்தரப் பட்டதாரிகள் இவ்வாறான சர்வதேச புலமைப்பரிசில்களைப் பெற்றிருப்பது தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இது பல்கலைக்கழகத்தின் கல்வித் தரம், சர்வதேச அங்கீகாரம் மற்றும் உலகளாவிய உயர்கல்வி வாய்ப்புகளை நோக்கிய பயணத்தில் முக்கியமான சாதனையாக அமைந்துள்ளதாக கலை மற்றும் கலாசாரப் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில் தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பெற்ற பட்டதாரிகள்

• செல்வி எப். பாத்திமா ஹஸ்னா (புல்மோட்டை, திருகோணமலை)
அரசியல் விஞ்ஞானத்தில் முதல்தரச் சிறப்புப் பட்டம் பெற்ற இவர், கேரளப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலைப் பட்டப்படிப்புக்குத் தெரிவாகியுள்ளார். மேலும், பாகிஸ்தானிலுள்ள COMSATS இஸ்லாமாபாத் பல்கலைக்கழகத்தில் MS in Conflict, Peace and Development பட்டப்படிப்புக்கான புலமைப்பரிசிலும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

• செல்வி ஏ.எம். பாத்திமா சிஹானி (பள்ளிக்குடியிருப்பு, அக்கரைப்பற்று)
அரசியல் விஞ்ஞானத்தில் முதல்தரச் சிறப்புப் பட்டம் பெற்றதுடன், 18 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறந்த மாணவருக்கான எம்.எல்.ஏ. காதர் பதக்கத்தையும் வென்றுள்ளார். இவர் கேரளப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடரவுள்ளார்.

• திரு ஜே. ஹர்ஷவர்தன் (சென்ட்ரல் கேம்ப்)
இந்து நாகரிகத்தில் முதல்தரச் சிறப்புப் பட்டம் பெற்ற இவர், பட்டமளிப்பு விழாவில் சிறந்த மாணவருக்கான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஞாபகார்த்தப் பதக்கத்தையும் பெற்றுள்ளார். இவர் நாளந்தா பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத்தில் முதுகலைப் பட்டப்படிப்புக்குத் தெரிவாகியுள்ளார்.

• செல்வி தி. விதுர்ஷிகா (காரைதீவு)
இந்துநாகரிகத்தில் முதல்தரச் சிறப்புப் பட்டம் பெற்ற இவர், நாளந்தா பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடரவுள்ளார்.

பாத்திமா ஹஸ்னாவும் பாத்திமா சிஹானியும் ஜூலை 28 முதல் கேரளப் பல்கலைக்கழகத்தில் தங்களது கல்வியை ஆரம்பிக்கவுள்ளதுடன், ஹர்ஷவர்தன் மற்றும் விதுர்ஷிகா ஆகியோர் ஆகஸ்ட் 3ஆம் திகதி நாளந்தா பல்கலைக்கழகத்தில் தங்களது உயர்கல்விப் பயணத்தைத் தொடங்கவுள்ளனர்.

வரலாற்றுச் சாதனை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் கடந்த காலங்களில் உலகின் பல்வேறு நாடுகளில் முதுகலை மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றிருந்தபோதிலும், ஒரே பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து நான்கு முதல்தரப் பட்டதாரிகள் ஒரே நேரத்தில் இவ்வாறான சர்வதேச உயர்கல்விப் புலமைப்பரிசில்களைப் பெற்றிருப்பது பல்கலைக்கழக வரலாற்றில் புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.

கல்வி மறுசீரமைப்புகள்

கலை மற்றும் கலாசாரப் பீடத்தில் தற்போது விரிவான கல்வி மறுசீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக புவியியல், பொருளாதாரம், அரசியல் விஞ்ஞானம், சமூக அறிவியல், ஆங்கில மொழிக் கற்பித்தல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஆங்கில மொழி மூலமான கற்கைநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தேசிய மற்றும் சர்வதேச தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களின் உயர்கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

எதிர்காலத்தில் ஐரோப்பா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கான சர்வதேச உயர்கல்விப் புலமைப்பரிசில் வாய்ப்புகளையும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சாதனை தொடர்பாக கருத்துத் தெரிவித்த கலை மற்றும் கலாசாரப் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் தொலைநோக்குப் பார்வையையும் கல்விக்கான அர்ப்பணிப்பையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

அதேவேளை, இச்சாதனைக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த அரசியல் விஞ்ஞானத் துறையினருக்கும் மொழிகள் துறையின் இந்து நாகரிகப் பிரிவினருக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்ததுடன், பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களின் எதிர்கால உயர்கல்வி மற்றும் ஆய்வுப் பயணங்கள் மேலும் பல சர்வதேச சாதனைகளால் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :