இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் வரவேற்புரையாற்றினார். தனது உரையில், இலங்கையின் நீடித்த பொருளாதார மீட்பு மற்றும் மாற்றமுறை வளர்ச்சியை முன்னெடுக்க பல்கலைக்கழகங்கள் அறிவியல் ஆய்வு, ஆதாரபூர்வமான கொள்கை உரையாடல் மற்றும் சமூக ஈடுபாட்டின் மையங்களாக செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
ODI Global மற்றும் CEPA ஆகிய உலகளாவிய மற்றும் தேசிய ஆய்வு நிறுவனங்கள் இணைந்து இந்நிகழ்வை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடத்தத் தேர்ந்தெடுத்தமை பல்கலைக்கழகத்திற்கு கிடைத்துள்ள ஒரு பெருமை எனக் குறிப்பிட்ட அவர், சர்வதேச அனுபவங்களையும் உள்ளூர் ஆய்வு அறிவையும் ஒருங்கிணைக்கும் இத்தகைய கலந்துரையாடல்கள் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூகத்திற்கு பெரும் பயனை அளிக்கும் என்றார்.
மேலும், இலங்கை தற்போது பொருளாதார மீட்பை நோக்கி பயணிக்கும் முக்கியமான கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட உபவேந்தர், ஆதாரபூர்வமான கொள்கை வடிவமைப்பு, அறிவியல் ஆய்வுகள், புத்தாக்கம், விமர்சன சிந்தனை மற்றும் தேசிய அபிவிருத்தியில் கல்வி நிறுவனங்களின் செயற்பாட்டு பங்களிப்பு காலத்தின் தேவையாக இருப்பதாக தெரிவித்தார்.
குறிப்பாக கிழக்கு மாகாணம் வளமான விவசாய வளங்கள், மீன்பிடித் தொழில், கடலோர சுற்றுலா வாய்ப்புகள் மற்றும் இளைஞர் மனிதவளத்தை கொண்டிருந்தாலும், குறைந்த தனிநபர் வருமானம், வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் முதலீட்டு பற்றாக்குறை போன்ற சவால்களை இன்னும் எதிர்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். இவ்வளங்களை நிலையான அபிவிருத்தியாக மாற்றுவதற்கு சிறந்த அரசுக் கொள்கைகள், தொழில்முனைவோர் உருவாக்கம், முதலீடு, புத்தாக்கம் மற்றும் திறன்மிக்க மனித வள மேம்பாடு அவசியம் என வலியுறுத்தினார்.
அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக நடைபெற்ற Youth Enterprise Development Programme (YEDP) Symposium நிகழ்வையும் நினைவுகூர்ந்த அவர், இளைஞர் தொழில்முனைவுத்திறனை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு இன்றைய கொள்கை கலந்துரையாடல் மேலும் வலுசேர்க்கும் என்றும், நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார மாற்றத்திற்குத் தேவையான சீர்திருத்தங்கள் குறித்து ஆழமான புரிதலை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, ODI Global நிறுவனத்தின் வருகைதரு சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி கணேசன் விக்னராஜா, “Sustaining Transformative Growth in Sri Lanka 2025–2030” என்ற தலைப்பில் விரிவான விளக்கவுரையாற்றினார். பொருளாதார மீட்பு, ஏற்றுமதி விரிவாக்கம், முதலீட்டு ஊக்கம், ஆளுகைச் சீர்திருத்தங்கள் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான கொள்கைத் திட்டங்கள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து CEPA நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன, கிழக்கு மாகாணத்தின் பிராந்திய அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி தொடர்பான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து கருத்துரையாற்றினார். பின்னர் CEPA-வின் லக்ஸ்மன் சிறிவர்தன, கொள்கை அமுலாக்கத்தில் காணப்படும் இடைவெளிகள், நடைமுறைச் சவால்கள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளித்தார்.
அமர்வின் முக்கிய அம்சமாக நடைபெற்ற கேள்வி–பதில் நிகழ்வில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவற்றிற்கு வளவாளர்கள் ஆதாரபூர்வமான பதில்களை வழங்கியதுடன், இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்காக ஆய்வு, புத்தாக்கம், கொள்கை ஒருங்கிணைப்பு மற்றும் பல்துறை ஒத்துழைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
நிகழ்வின் நிறைவில், “Sustaining Transformative Growth in Sri Lanka 2025–2030” நூலின் அச்சுப் பிரதிகள் தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இதற்காக ODI Global மற்றும் CEPA நிறுவனங்களுக்கு உபவேந்தர் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், நிகழ்வை வெற்றிகரமாக ஒருங்கிணைத்த முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்திற்கும் அதன் ஏற்பாட்டுக் குழுவிற்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
தொடர்ந்து, முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் நிதித்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.ஆர். பாத்திமா தபானி நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வு, ODI Global மற்றும் CEPA ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக நாட்டின் பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் அறிவியல் பரவல் நிகழ்ச்சித் தொடரின் ஒரு பகுதியாகும். அரசு, தனியார் துறை மற்றும் ஆய்வாளர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள “Sustaining Transformative Growth in Sri Lanka 2025–2030” வெளியீடு, 2025–2030 காலப்பகுதிக்கான இலங்கையின் மாற்றமுறை, உள்ளடக்கிய மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய கொள்கைப் பரிந்துரைகளை முன்வைக்கும் சிறப்புமிக்க ஆய்வு வெளியீடாகக் கருதப்படுகிறது.
நிகழ்வைத் தொடர்ந்து, ODI Global மற்றும் Centre for Poverty Analysis (CEPA) நிறுவனங்களின் பிரதிநிதிகள் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீனை அவரது அலுவலகத்தில் சந்தித்து மரியாதை நிமித்தமாக கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது “Sustaining Transformative Growth in Sri Lanka 2025–2030” வெளியீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள பொருளாதார மாற்றம், வறுமை ஒழிப்பு, பிராந்திய அபிவிருத்தி, ஆதாரபூர்வமான கொள்கை வடிவமைப்பு, உயர்கல்வி நிறுவனங்களின் ஆய்வுப் பங்களிப்பு மற்றும் எதிர்காலத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளக்கூடிய ஆய்வு, அறிவுப் பரிமாற்றம் மற்றும் கல்விசார் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக “Sustaining Transformative Growth in Sri Lanka 2025–2030” நூலின் பிரதிகளும் பல்கலைக்கழக நூலகத்திற்கு உத்தியோகபூர்வமாக அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








































0 comments :
Post a Comment