இலங்கை அஹ்திய்யா பாடசாலைகளின் 75ஆவது ஆண்டு பவள விழா ஏற்பாடுகள் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம்



லங்கை அஹ்திய்யா பாடசாலைகளின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறவுள்ள பவள விழா தொடர்பான ஏற்பாடுகள் குறித்து அம்பாறை மாவட்ட அஹ்திய்யா பாடசாலைகளின் நிர்வாகிகளின் விசேட ஆலோசனைக் கூட்டம் 2026 ஜூன் 14ஆம் திகதி மாவட்டத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அம்பாறை மாவட்ட அஹ்திய்யா பாடசாலைகளின் தலைவர், அகில இலங்கை அஹ்திய்யா சம்மேளனத்தின் பிரதித் தலைவரும் பரீட்சை ஆணையாளருமான அஷ்ஷெய்க் யூ.எல். றிபாயுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், பிரதித் தலைவர்கள், கல்விப் பணிப்பாளர்கள், அஹ்திய்யா பாடசாலை நிர்வாகிகள் மற்றும் உலமாக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்ட அஹ்திய்யா பாடசாலைகளின் செயலாளர் எஸ்.எல். மன்சூர், பிரதித் தலைவர்களான அல் ஹாஜ் எம்.எம். ஜுனைட், ஏ.ஏ. அஸீஸ் என்போருடன் பிரதிச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றமீஸ், அம்பாறை மாவட்ட பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எம். முகம்மட் தம்பி பொருளாளர் அஷ்ஷெய்க் எம்.எம். முபீஸ் ஆகியோருடன் உறுப்பினர்களாக அஷ்ஷெய்க் எம்.எல். பைசல், எஸ். றிபாய்டீன் மற்றும் ஏ. இல்லியாஸ் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.

கூட்டம் திருக்குர்ஆன் ஓதல் மற்றும் பாதிஹா ஓதலுடன் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரவேற்புரை மற்றும் எதிர்வரும் நிகழ்வுகள் தொடர்பான விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இதன்போது உரையாற்றிய அஷ்ஷெய்க் ஏ. எம். றிபாயுதீன் அவர்கள், கடந்த 75 ஆண்டுகளாக இலங்கை முழுவதும் மார்க்கக் கல்வியை வளர்த்தெடுத்து சமூகத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் அஹ்திய்யா பாடசாலை அமைப்பின் பங்களிப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும் என்று குறிப்பிட்டார்.

அதன் நினைவாக நடைபெறவுள்ள 75ஆவது ஆண்டு பவள விழா எதிர்வரும் 2026 ஜூலை 25ஆம் திகதி கொழும்பில் சிறப்பாகவும் விமர்சையாகவும் கொண்டாடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பவள விழாவை முன்னிட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக அஹ்திய்யா பாடசாலைகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், அமைப்பின் வளர்ச்சிக்காக உழைத்து தற்போது மறைந்துபோன முன்னோடிகளை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வும் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், பவள விழாவை முன்னிட்டு சிறப்பு நினைவு மலர் வெளியிடப்படவுள்ளதாகவும், அதில் அஹ்திய்யா பாடசாலைகளின் வரலாறு, வளர்ச்சி, சேவைகள் மற்றும் மறைந்த முன்னோடிகளின் புகைப்படங்கள், வாழ்க்கை வரலாறுகள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை, அஹ்திய்யா பாடசாலைகளின் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள், ரமழான் மாத சிறப்புப் பரீட்சைகளில் சாதனை படைத்தோர் மற்றும் பல்வேறு கல்விசார் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களையும் இப்பவள விழாவில் பாராட்டி கௌரவிக்க தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய மாவட்டத் தலைவர், அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து அஹ்திய்யா பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஒவ்வொரு பிரதேசத்திலும் நிர்வாகத் திறன், ஒழுக்கம், கல்வித் தரம் மற்றும் மாணவர் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக, எதிர்வரும் பவள விழாவை அம்பாறை மாவட்டத்தின் சார்பில் சிறப்புற நடத்துவதற்கான ஏற்பாடுகள், பொறுப்புப் பகிர்வுகள் மற்றும் மாவட்ட மட்ட செயற்பாடுகள் தொடர்பாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அனைவரின் ஒத்துழைப்புடனும் விழாவை வெற்றிகரமாக நடத்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :