மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய ஸ்தாபகரின் 7 வது ஆண்டு நினைவு தினம்

த.நவோஜ்-

ட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய ஸ்தாபகரும், ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய திருவருள் ஆண்கள், பெண்கள் சங்கங்களின் தர்மகர்த்தாவுமாகிய வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமிஜீ அவர்களது 37 வது ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 12ம் திகதி வெள்ளிக்கிழமை ஆலய தலைவர் மா.உலககேஸ்பரம் தலைமையில் ஸ்ரீ கிருஸ்ணன் ஆலயத்தின் அருகே அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமியவர்களின் நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் சுவாமிஜீ அவர்களின் திருவுருவப்படத்திற்கு பூமாலை அணிவித்து பஜனை நிகழ்வுகளும் பக்தி பூர்வமான பூஜை வழிபாடுகளும் சிறப்பாக இடம்பெறவுள்ளதுடன், திருவருள் ஆண்கள் சங்கத்தின் சிரேஸ்ர உறுப்பினர்களால் சுவாமியவர்களைப் பற்றிய நினைவுப் பேருரைகளும் நிகழ்த்தப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து அன்று பகல் ஆலயத்தில் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவிருக்கின்றது. இதனை ஆலய திருவருள் ஆண்கள் சங்க உறுப்பினர் இ.மதன்; வருடா வருடம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமிஜி அவர்கள் இந்தியாவின் காஸ்மீர் தேசத்தில் அவதரித்து இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் பல ஆலயங்களை ஸ்தாபித்து, மக்களுக்கு நல்லொழுக்கங்களையும், நற்பண்புகளையும், சமய உணர்வுகளையும், தர்ம சிந்தனைகளையும் புகட்டி சமூகம் மேன்மையுறுவதற்கு சிறந்த ஒரு வழிகாட்டியாக திகழ்ந்ததுடன், மக்களால் என்றும் போற்றப்படும் வணக்கத்திற்குரிய மகானாகவும் விளங்கினார்.

இலங்கையின் திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் செம்பிமலையில் 25.08.1935 இல் சிவலிங்க ஆலயத்தினையும், மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் ஸ்ரீ கிருஸ்ணன் ஆலயத்தினையும், இக்கிராமத்தின் அயற்கிராமமான செட்டிபாளையம் கிராமத்தில் சோமகலாநாதர் ஆலயத்தினையும் ஸ்தாபித்து மக்கள் வழிபாட்டினை மேற்கொள்வதற்கு வழியமைத்துத் தந்தவர் வணக்கத்திற்குரிய சுவாமிஜி சோமேஸ்வரானந்தகிரி ஆவார்.

இவர் 1939ம் ஆண்டு மட்டக்களப்பு மண்ணிற்கும் குருக்கள்மடம் கிராமத்திற்கும் முதன்முறையாக காலடிபதித்து தற்போது ஸ்ரீ கிருஸ்ணன் ஆலயத்தில் இயங்கி வரும் திருவருள் ஆண்கள், பெண்கள் சங்கங்களை 1940ம் ஆண்டு ஆரம்பித்து வைத்து மக்கள் மத்தியில் ஒழுக்க சிந்தனைகளை பிரசங்க உரை மூலம் நிகழ்த்தி பஞ்ச சீல ஒழுக்கங்களை வாழ்வில் கடைப்பிடிக்க வழிகாட்டியவர்.

குருக்கள்மடம் கிராமத்தின் மத்தியில் ஸ்ரீ கிருஸ்ணன் ஆலயத்தினை ஸ்தாபித்து 1952ம் ஆண்டு இவரினால் மகா கும்பாபிசேகம் நிகழ்த்தப்பட்டு அன்று முதல் இவ்வாலயம் திருவருள் சங்கங்களால் பரிபாலிக்கப்பட்டு தற்போதும் சிறப்புற்று விளங்குகின்றது. மேலும் இவ்வாலயத்தின் அருகில் சுவாமிஜி அவர்களினால் பல்வேறு வசதிகளையும் கொண்ட பிரமாண்டமான மடத்தினையும் அமைத்து 1975ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

அன்று முதல் ஆலயமும் ஆச்சிரம மடமும் இரு கண்களாக போற்றப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றன. 1976ம் ஆண்டு இக்கிராமத்திற்கு இறுதியாக வருகை தந்து இவ் ஆச்சிரம மடத்தில் தங்கியிருந்து மக்களுக்கு அருளினை வழங்கி தன்மறைவினையும் வெளிப்படுத்தி சென்றுள்ளார். தற்போது இவ்வாச்சிரமம் ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமி நினைவாலயம் என அழைக்கப்படுகிறது.

இவ்வாறான பெருமைக்குரிய குருமுனி அவர்கள் 01.09.1977ம் நாள் சமாதி அடைந்தார். அன்னாரின் சமாதி தென்னிந்தியாவிலே திண்டுக்கல் எனும் இடத்தில் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :