யுத்தத்தின் போது வடக்கிலும் தெற்கிலும் இளைஞர்கள் ஏராளமாக இறந்ததால் அதன் காயங்கள் ஆறுவதற்கு காலமெடுக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கைக்கு முதற்தடவையாக விஜயம் மேற்கொண்டுள்ள போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பஸொஸ் கொயல்கோவுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான போர்த்துக்கல் தூதுவர் ஜோர்ஜ் றோஸா டி ஒலிவெய்ராவும், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சின் செயலாளார் ஷெனுகா செனவிரத்ன, ஜனாதிபதியின் பணியாட்தொகுதி தலைவர் காமினி செனரத், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும், ஜனாதிபதியின் இணைப்பாளருமான அருண் தம்பிமுத்து, உட்பட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். இதன் போது கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு ஜனாதிபதி தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கூட விடுதலைப்புலிகள் உட்கட்டமைப்புக்கள் அனைத்தையும் நிர்மூலமாக்கினர். மக்கள் பயத்தின் பிடியில் வாழ்ந்தார்கள். பயங்கரவாதத்தால் நாடு பேரழிவைச் சந்தித்தது. கடந்த வரும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பல தலைவர்கள் ஊடகங்களில் அறிக்கையிடுபவை நாட்டின் உண்மை நிலைவரத்திலிருந்து அதிகம் வேறுபடுவதை அறிந்து ஆச்சரியமடைந்தனர். தெற்கிலும் வடக்கிலுமிருந்து ஏராளமான இளைஞர்கள் இறந்ததன் காரணமாக போரின் காயங்கள் ஆறுவதற்கு காலமெடுக்கும் என்றார்.
இதன்போது போர்த்துக்கல் பிரதமர் கருத்து வெளியிடுகையில்,
இலங்கையுடனான உறவுகளை மேலும் முன்னேற்றிக்கொள்ள போர்த்துக்கல் விரும்புகின்றது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3வீதமாக காணப்படுகின்ற நிலையில் வடக்கு கடந்த சில வருடங்களில் 20முதல் 24 சதவீத வீச்சில் வளர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றமை மிகவும் அற்புதமான முடிவாகும். பொருளாதாரத்துறை மாத்திரமின்றி அரசியல், கலாசார துறைகளிலும் ஆழமான உறவுகளையே வேண்டிநிற்கின்றது. இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மாத்திரமின்றி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஏனைய விடயங்களையும் கலந்துரையாடுவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது என்றார்.

0 comments :
Post a Comment