இலங்கையில் பௌத்தர்களை காப்பாற்ற சிறந்த தலைவர் இல்லாது போய்விட்டார். முஸ்லிம் தீவிரவாதிகள் கிளர்ச்சிகளை மேற்கொண்டாலும் சிங்கள பெளத்தர்கள் தான் அடக்குமுறைகளை கையாள்கின்றனர் என சர்வதேச அளவில் கருத்து பரப்பப்படுகின்றது என தெரிவிக்கும் ஓமல்பே சோபித தேரர் இலங்கை விடயத்தில் தலையிட தலாய்லாமாவிற்கு உரிமை இல்லை. அவர் பௌத்தமத்திற்கு தலைவர் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் நேற்று இடம்பெற்ற பெளத்த மத நிகழ்வில் உரைநிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
இலங்கையில் பௌத்த மதம் அழிந்துக் கொண்டு செல்கின்றது. பௌத்த கொள்கைகளையும் சிங்கள பெளத்த மக்களையும் காப்பாற்ற யாரும் இல்லை. இன்று சர்வதேச அளவில் இலங்கை குற்றவாளி நாடாக சித்திரிக்கப்பட்டுவருகின்றது. இலங்கையில் முஸ்லிம் குழுக்களின் மோதல்களையும் சிங்கள மக்களுக்கெதிரான முஸ்லிம் பிரிவினைவாதக் குழுக்களின் அடாவடித்தனங்களையும் சர்வதேசம் கண்டுகொள்ள வில்லை. மாறாக நாட்டில் பௌத்த பேரினவாத சக்தி சிறுபான்மை மக்களை அடங்குகின்றது என்ற கருத்தினையே சர்வதேச அரங்கில் முன்வைக்கின்றனர்.
அதை எதிர்த்து கருத்து வெளியிட நாட்டில் சிறந்த மதத் தலைவர்கள் இல்லாது போய்விட்டார்கள். பௌத்த மதத்தின் பாதையில் நாட்டை இட்டுச் செல்ல நல்லதொரு தலைவர் இல்லாது போய்விட்டார்.
அரசியல் ரீதியில் பேசும் தலைவர்கள் மதம் சார்ந்தும் பௌத்தத்தை பாதுகாக்கும் நோக்கிலும் இந்த நாட்டின் உண்மை நிலைமையினை சர்வதேச அளவில் கொண்டு செல்ல முடியாது போயுள்ளது. எமது நாட்டின் மீது குற்றம் கூற இன்று சர்வதேச அளவில் தலைவர்கள் உருவாகிவிட்டார்கள். திபெத்திய பௌத்த மதத்தலைவர் தலாய்லாமா கூட இலங்கையில் பௌத்த தீவிரவாதம் தலை தூக்கியுள்ளதென அறிக்கைவிடுத்துள்ளார்.
இங்கு முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் தெரிவித்தார். இவரின் கருத்தை பௌத்த மதத்தின் கருத்தாகவும் பௌத்த மத தலைவரின் கருத்தாகவும் எண்ணி சர்வதேச ஊடகங்கள் இலங்கையின் மீது தவறான கோணத்தில் கருத்து வெளியிடுகின்றன. உண்மையிலேயே தலாய்லாமா என்பவர் பௌத்த மதத்தில் உள்ள பிரிவுகளில் ஒரு பிரிவின் தலைவர் மட்டுமே அவரைப்போல் பலர் இருக்கின்றார்கள். எனவே அவரின் கருத்தை முக்கிய கருத்தாக கருதுவது அர்த்தமற்றது.
அதே போல் இலங்கையின் உண்மை நிலைமை புரியாது இலங்கையில் என்ன நடக்கின்றது என்று தெரியாது அவர் கருத்து வெளியிடுவது தவறானது. மேலும் இந்த நாட்டில் பௌத்த கொள்கையை பாதுகாக்க, சிங்கள மக்களை பாதுகாக்க சிறந்த பௌத்த மத தலைவர் ஒருவர் உருவாக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment