தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாகப் பதியப்படுமா என்பதை அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெளிவுபடுத்துவார் என யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிறப்பு மாநாட்டில் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தச் சிறப்பு மாநாட்டில் அவர் சிறப்புரையாற்றுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும் என திருகோணமலையில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது.
ஆனால் அதற்கான நடவடிக்கைகள் மந்தகதியிலேயே நடைபெற்று வருவதாகவும் இப்பதிவு விடயத்தை விரைவுபடுத்த வேண்டும் எனவும் அதற்காக தமிழ்த் தேசிய சபை ஒன்றை உருவாக்க வேண்டுமெனவும் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து அங்கு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், உருவாக்கப்பட வேண்டியது தமிழ்த் தேசிய சபையா அல்லது தமிழ் பேசுபவர்கள் சபையா அல்லது தமிழ் மக்கள் ஐக்கிய சபையா என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். அதன் பின்னரே எமது இறுதி இலக்கை நாம் அடைய முடியும் எனத் தெரிவித்தார்.
இறுதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றுகையில்,
கூட்டமைப்பு பல்வேறு கட்சிகளினால் உருவாக்கப்பட்ட அமைப்பு. இங்கு கருத்து வேறுபாடு இல்லையென நான் கூறமாட்டேன். இருப்பினும் எமக்குள் அதனைப் பேசித்தீர்த்து ஒற்றுமையுடன் செயற்பட்டு வருகின்றோம்.
இந்த ஒற்றுமையின் வெளிப்பாட்டால் தான் சர்வதேச சமூகம் அரசாங்கத்தை எம்முடன் பேசுமாறு கூறியுள்ளது. இவை ஒற்றுமையின் அடிப்படையிலும் தமிழ் மக்கள் விசுவாசம் வைக்கின்ற அமைப்பு இதுதான் என ஜனநாயக ரீதியில் அடையாளம் காட்டியபடியால் கிடைத்த வெற்றி. இதனைப் பலப்படுத்த வேண்டியது எமது கடமையாகும் எனத் தெரிவித்தார்.vk

0 comments :
Post a Comment