பிரபாகரனால் செய்ய முடியாமல் போன, பௌத்தர்களைத் தனிமைப்படுத்தும் செயலை அரசாங்கம் செய்ய ஆரம்பித்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் கம்பளை தொகுதி ஆதரவாளர்களின் கூட்டம் சனிக்கிழமை(19) கம்பளை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'இந்நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தபோது சகல இனங்களும் ஐக்கியமாக இருந்தன. அன்று பௌத்தர்களும் இந்துக்களும் முஸ்லிம்களும் கிருஸ்த்தவர்களும் கைகோர்த்து நின்று சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டனர். ஆனால் இன்றைய மஹிந்த அரசாங்கம் இனங்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றது.
பௌத்தர்களை மற்றைய இனங்களில் இருந்து வேறுபடுத்தவும் தனிமைப்படுத்தவும் முடியாமல் போனதே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தோல்வியடைய காரணமாக அமைந்தது. தனி ஈழம் கேட்டு விடுதலைப் புலிகள் போராடியபோது மலையக தமிழர்கள், கிழக்குத் தமிழர்கள், வடக்கு தமிழர்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் அதனை ஆதரிக்கவில்லை.
இவர்கள் நாடு பிளவுபடுவதை விரும்பவில்லை. இதனால் 2009 ஆண்டு பிரபாகரன் தனது போராட்டத்தில் தோல்வியைத் தழுவும் நிலை ஏற்பட்டது. ஆனால் பிரபாகரனால் முடியாமல் போன சிங்கள பௌத்தர்களை தனிமைப்படுத்தும் செயலை அரசாங்கம் செய்து வருகின்றது.
இன்று இந்நாட்டில் பௌத்தர்கள் தனியாகவும் இந்துக்கள் தனியாகவும் முஸ்லிம்கள் தனியாகவும் நிற்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
தமிழ், முஸ்லிம் மக்கள் பிரச்சினைகளால் அச்சமடைந்துள்ளனர். அவர்கள் தூர இருந்து என்ன நடைபெறுகின்றது என்று நோக்குகின்றனர். வெளிநாட்டு தூதுவர்கள் அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிலர் செய்யும் நடவடிக்கைகளால் முழு பௌத்தர்களுக்கும் பாதிப்பு எற்படுகின்றது. அரசாங்கம் பௌத்த சமயத்தைப் பாதுகாப்பதாகக் கூறுகின்றது. ஆனால் கண்டியில் தலதா மாளிகைக்கு அருகில் கார் ஓட்டப்போட்டியை நடத்துகின்றது. இதனால் எம்மை சர்வதேச நாடுகள் தவறாக நோக்கும் நிலை ஏற்படடுள்ளது.
அரசாங்கம் இனங்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துவதில் அக்கறை கொள்ளவில்லை. நாடு முன்னேற்றம் காண இனங்கள் ஒன்றுபட வேண்டும் என்பதை உணர்ந்து அன்று டி.எஸ்.சேனாநாயக்க சகல இனங்களையும் ஒற்றுமைப்படுத்தினார்' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment