இந்த நிகழ்வில் பிரதம உரையை ஆற்றிய முஸ்லிம் மீடியா போரத்தின் ஆலோசகரும் மூத்த ஊடகவியலாளருமான என். எம். அமீன்,
“இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கல்விப் பயணத்தை தொடர்வதற்கு கணினி என்பது அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. வசதி உள்ளவர்களுக்கு கணினி வாங்குவது சிரமமல்ல. ஆனால் வசதி குறைந்த மாணவர்களுக்கு அது ஒரு பெரிய சவால். அந்தச் சவாலை நீக்குவதற்காக ஹாஷிம் உமர் அவர்கள் மேற்கொண்டு வரும் இந்தப் பணி காலத்தின் தேவையாகும்” எனக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், “இதுவரை தொண்ணூறுக்கும் மேற்பட்ட மடி கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு பொருளாதார உதவியாக மட்டுமல்ல; மாணவர்களின் வாழ்க்கைப் பயணத்தை மாற்றக்கூடிய முதலீடுமாகும். இந்த உதவி, அவர்களது கல்வி வளர்ச்சிக்கும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் உறுதியாக துணை நிற்கும்” எனத் தெரிவித்தார்.
ஹாஷிம் உமர் அவர்களின் கல்வி சேவைகள் குறித்து நினைவுகூர்ந்த என். எம். அமீன், “மாணவர்களுக்கு கணினி வழங்குவது மட்டுமல்லாது, நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களின் நூல்களை அச்சிட்டு வெளியிடுதல், கல்வி உதவித்தொகைகள் வழங்குதல் போன்ற பல பணிகளை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். பணவசதி இருந்தாலும் சமூக சேவை செய்யும் மனம் எல்லோருக்கும் இருப்பதில்லை. அந்த அரிய மனப்பான்மை ஹாஷிம் உமர் அவர்களிடம் உள்ளது” எனப் பாராட்டினார்.
மேலும், “இந்த முயற்சி நூறாவது கட்டத்தை நோக்கி நகர்கிறது. அல்லாஹ் ஹாஷிம் உமர் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும், இந்தச் சேவையைத் தொடர தேவையான வசதிகளையும் வழங்க வேண்டும்” என அவர் பிரார்த்தனை செய்தார்.
மாணவர்களை நோக்கி உரையாற்றிய அவர், “இந்த மடி கணினியை நீங்கள் ஒரு சாதனமாக அல்ல, ஒரு வாய்ப்பாகக் கருதி பயன்படுத்த வேண்டும். சிறந்த பட்டதாரிகளாக உருவெடுத்து, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனளிக்கும் நபர்களாக மாற வேண்டும். அப்போது இந்த உதவி வழங்கிய அனைவருக்கும் அது பெருமையாக அமையும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் சுயாதீன தொலைக்காட்சி தமிழ் பிரிவு செய்தியாளர் சித்தீக் ஹனீபா, தமிழன் பத்திரிகையின் இணை ஆசிரியர் ஏ.எம். ஜௌபர், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஜிப்ரியா இப்ராஹிம், சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா, அமைப்பின் பணியாளர் மரியம், ஒருங்கிணைப்பாளர் ஏ. எஸ். அர்ஹம் சுலைமான், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகர் மற்றும் புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எப். எப். ரஸ்தா (அநுராதபுரம்), நாககுமார் சைலஜா (மாத்தளை), எம். ஐ. எப். ஹம்னா (கேகாலை), ஏ. ஜுமானா (கற்பிட்டி), எச். எப். எப். முப்லிஹா (பாணந்துறை) ஆகிய மாணவர்கள் மடி கணினிகளைப் பெற்றுக்கொண்டனர்.
இதன் போது ஏறாவூர் அல்-முனீரா மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா முன்திரா தொகுத்த “முற்போக்கு கலைஞர்களின் கலைப்பாணிகளும் கருத்துகளும் (வாதங்கள்)” என்ற நூலும் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் 80,000 ரூபா வழங்கி பெற்றுக்கொண்டார்.






0 comments :
Post a Comment