இலங்கை மீதான ஐ.நா விசாரணைக்கு 3 நாடுகள் தெரிவு

யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவினால், ஜெனீவா, பாங்கொக் மற்றும் நியூயோர்க் ஆகிய 3 நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்று ஐ.நா தகவல்கள் தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 
இம்மூன்று நாடுகளிலிருந்து விசாரணைகளை நடத்தும் மேற்படி விசாரணைக் குழுவிடம்ஈ இலங்கையில் வாழும் தமிழர்கள், தொலைபேசி, ஸ்கைப், வீடியோ கொன்ஃபரன்ஸ் ஊடாக சாட்சியமளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

யுத்த காலத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளாலும் இலங்கை இராணுவத்தினராலும் மனித உரிமைகள் மற்றும் போர்ச் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இதற்கான விசாரணைகளை மேற்கொள்வதற்கென ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் நியமிக்கப்பட்ட குழு, இலங்கையில் விசாரணையை நடத்த அனுமதி கோரிய போதிலும், எந்தவொரு சர்வதேச விசாரணையையும் நிராகரித்துள்ள இலங்கை அரசாங்கம், அதற்கான அனுமதியை வழங்கவில்லை. 

இந்நிலையில், நியூயோர்க், ஜெனீவா, பாங்கொக்கில் இருந்து செயற்படவுள்ள ஐ.நா விசாரணைக் குழுவின் முன்னிலையில், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர்த் தமிழர்களும் தமிழர் உரிமைகள் குழுக்களும் சாட்சியமளிக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன், இலங்கையிலுள்ள மனித உரிமைகள் குழுக்களும் வெளிநாடுகளுக்கு சென்று சாட்சியமளிக்க தயாராகவுள்ளன என்று கூறப்படுகின்றது. 

ஐ.நா. விசாரணைக் குழுவின் முன்னால் சாட்சியமளிப்பதென்பது இலங்கையில் சட்டவிரோதமானது அல்ல. ஆயினும், ஐ.நா. விசாரணையின் போது இலங்கைக்கு எதிராக சாட்சியம் அளிப்பவர்களுக்கு சில அமைச்சர்கள், பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. 

சாட்சிக்கு பாதுகாப்பு என்ற சட்ட நடைமுறை இல்லாத நிலைமையில் இலங்கையில் வழமை போல சாட்சியங்கள் மிரட்டலுக்கு உள்ளாகலாம். ஆயினும் அரசாங்கத்தின் காணாமல் போனோர் குழுவின் செயன்முறையின் போது, சாட்சியங்கள் மிரட்டலுக்கு அஞ்சாமல் சாட்சியமளித்துள்ளனர். 

அரச ஆதரவு குழுக்களின் அச்சுறுத்தல்களில் இருந்து சாட்சியங்களைப் பாதுகாப்பதற்காக, முன்னர் தருஸ்மன் குழுவினர் செய்தது போன்றே ஐ.நா விசாரணைக் குழுவும் தனது சாட்சியங்களின் ஆளடையாளத்தை 20 வருடங்களுக்கு இரகசியமாக வைத்திருக்க முடியும்.

ஆனால் சாட்சியத்தின் பெறுமதியை கேள்விக்குட்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கம் சாட்சிகளின் ஆளடையாளத்தை வெளிக்காட்டாததை சுட்டிக்காட்டலாம். இதையே அரசாங்கம் முன்னைய தருஸ்மன் அறிக்கையிலும் செய்துள்ளது. 

ஐ.நா.வின் விசாரணையை எதிர்க்கும் வகையில் இலங்கை அரசாங்கம் தனது சொந்த விசாரணையை தொடங்கியுள்ளது. இதற்காக அரசாங்கம், காணாமல் போனோர் ஆணைக்குழுவின் பணியதிகாரத்தை விரிவாக்கியுள்ளது. இதற்கமைவாக, ஐ.நா மற்றும் இலங்கை ஆணைக்குழுக்கள் சமகாலத்தில் செயற்படவுள்ளன.

ஆனால், ஐ.நா ஆணைக்குழு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிப்போர் பலரை சாட்சியங்களாக பெறமுடியாது. இருப்பினும், இலங்கைக் குழுவின் முன்னிலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து பலர் சாட்சியமளிப்பர். இதனால் இலங்கைக் குழுவின் அறிக்கைக்கு கூடுதல் நம்பகத்தன்மை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இதை வைத்துக்கொண்டு இலங்கை அரசாங்கம், ஐ.நா. விசாரணையை குறை கூறலாம். 

டெஸ்மன்ட் சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு ஆலோசகர்கள், இலங்கை அரசாங்கத்துக்கு சார்பான ஆலோசனைகளை வழங்க கூடுமா? என்ற கேள்விக்கு, ஐ.நா விசாரணை குழு கேட்கும் போது மட்டுமே இந்த குழுவினால் ஆலோசனை வழங்க முடியும் என தகவலறிந்த ஒருவர் கூறியுள்ளார்.

ஐ.நா விசாரணைக் குழு, தனது பணியை முன்னெடுப்பதற்கு சொற்ப காலமே உள்ளது. அக்காலப்பகுதிக்குள் புதிய சாட்சிகளை பல்வேறு இடங்களிலிருந்தம் பெறவேண்டும், அறிக்கை எழுத வேண்டும். இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்காக அதை அனுப்ப வேண்டும். ஜனவரி மாதமளவில் இறுதி அறிக்கையை கொடுக்க வேண்டும். அப்போது தான் அதனை 2015 மார்ச் மாதத்தில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்கலாம்.

மறுபுறம் இலங்கைக்குழு சிக்கல் இல்லாத குறைந்த கால செய்முறை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :