அரச சேவையில் இன்று 17 இலட்சம் பேர் உள்ளனர். புதிதாக 52,000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது' என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டப்ளியூ.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்தார்.
கண்டி, மஹய்யாவையில் சனிக்கிழமை(19) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'இன்று நாட்டைப் பற்றியும் அரசைப் பற்றியும் எதிர்க் கட்சிகள் மிக மோசமாக விமர்சிக்கின்றன. தவறான பிரசாரத்தினூடாக நாட்டு மக்களை பிழையாக வழி நடத்துகின்றனர். எனவே அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு தெளிவுப்படுத்துவது எமது பொறுப்பாகும்.
ஒருகாலத்தில் இளைஞர்கள் தொழில் இன்றி அழைந்தனர். அரச ஊழியர்களின் எண்ணிக்கையை ஆறு இலட்சமாகக் குறைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்தது.
ஆனால் இன்று 17 இலட்சம் பேர் அரச ஊழியர்களாக உள்ளனர். தொழில் இல்லாப் பிரச்சினை ஐந்து சதவீதமாக குறைந்துள்ளது. 52,000 பட்டதாரிகளுக்கு இதுவரை எமது அரசு தொழில் வழங்கியுள்ளது.
நுரைச் சோலை அனல் மின் உற்பத்திப் பற்றி எதிர்க் கட்சிகள் தவறாகப் பிரசாரம் செய்து வருகின்றன.
ஆனால் ஆசியாவில் சிங்கப்பூர் தவிற மற்ற எல்லா நாடுகளிலும் மின்வெட்டு அமுல் படுத்தப்பட்டு வருகிறது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் காரணமாக இன்று எமக்கு 24 மணி நேரமும் மின்வெட்டு இன்றி மின்சார விநியோகிக்கப்படுகின்றது' என்றார்.

0 comments :
Post a Comment