முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மர்ஹும் மசூர் சின்னலெப்பையின் முதலாமாண்டு நினைவு.


மப்றூக்
கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மர்ஹும் மசூர் சின்னலெப்பையின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி இக்கட்டுரை வெளியாகிறது
கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மர்ஹும் மசூர் சின்னலெப்பையின் முதலாம் ஆண்டு நினைவு தினம் (22 மே 2013) இன்றாகும்.

மர்ஹும் மசூர் சின்னலெப்பை - அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில்தான் அவருடைய அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. ஐ.தே.கட்சியினூடாக அவர் அரசியலுக்குள் நுழைந்தார். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினராக 1994 ஆம் ஆண்டு தெரிவானதன் மூலம் - மசூர் சின்னலெப்பை முதன் முதலாக மக்கள் பிரதிநிதியானார்.

மசூர் சின்னலெப்பையின் தந்தை – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக இருந்தவர். 'சின்னலெப்பை சேர்மன்' என்றே மசூரின் தந்தையை ஊரில் அழைப்பார்கள். தன் தந்தையைப் போலவே 2006 ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக மசூர் தெரிவு செய்யப்பட்டார்.

ஐ.தே.கட்சியூடாக மசூர் சின்னலெப்பை தனது அரசியலை ஆரம்பித்த போதும், பின்னர் மு.காங்கிரசில் இணைந்து கொண்டார். மசூர் சின்னலெப்பை – மு.காங்கிரசில் இணைந்து கொண்டதன் பின்னர் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மு.காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி கண்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக மசூர் சின்னலெப்பை பதவி வகித்த காலப்பகுதியில் பல்வேறு சேவைகளை ஆற்றினார். பல இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கினார். இன்றுவரை பலருடைய குடும்ப வருமானத்துக்கான ஆதாரமாக மசூர் சின்னலெப்பை அவர்கள் வழங்கிய தொழில் இருந்து வருகின்றமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

மசூர் சின்னலெப்பை தனது பிரதேசத்தை மிகவும் நேசித்தார். ஊருக்காக நிறைய உழைத்தார். அதனால், மக்கள் - அவரை 'மண்ணின் மைந்தன்' என்று அன்போடு மேடைகளில் விழித்தனர்.

ஏழைகளுக்கு உதவுவது – மசூர் சின்னலெப்பையின் சிறப்பான குணங்களில் ஒன்றாகும். அரசியலுக்கு அப்பாலும், அரசியலைப் பயன்படுத்தியும் மக்களுக்கும், பொது நிறுவனங்களுக்கும் அவர் ஏராளமான உதவிகளைப் புரிந்தார்.

2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராக முஸ்லிம் காங்கிரஸ் மூலம் மசூர் சின்னலெப்பை தெரிவானார். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக மசூர் சின்னலெப்பை பதவி வகித்தபோது, கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் உறுப்பினராக இருந்த எம்.ரி. ஹசனலி அந்தப் பதவியினை ராஜிநாமாச் செய்தார். இதன்போது ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு அப்போது மு.காங்கிரசின் பட்டியலில் இருந்த யாரும் முன்வரவில்லை. இதனால், மு.காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க - தான் வகித்துக் கொண்டிருந்த பிரதேச சபைத் தவிசாளர் பதவியினைத் துறந்து விட்டு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியினை ஏற்றுக் கொண்டார் மசூர் சின்னலெப்பை.

கிழக்கு மாகாணசபை உறுப்பினராக மசூர் சின்னலெப்பை பதவி வகித்தபோது, பொத்துவில் முதல் மருதமுனை வரையிலான அனைத்துப் பிரதேசங்களுக்கும் தனது நிதியொதுக்கீட்டின் மூலம் உதவி புரிந்தார். இந்தப் பிரதேங்களிலுள்ள பாடசாலைகள், பள்ளிவாசல்களின் புனரமைப்புப் பணிகளுக்காக மசூர் சின்னலெப்பை தன்னாலான நிதியொதுக்கீடுகளை மேற்கொண்டார். குடிநீர் பெறுவதற்கு வசதியற்ற பல குடும்பங்களுக்கு – நீரைப் பெற்றுக் கொடுத்திருந்தார். மீனவர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கான தொழில் உபகரணங்களை வழங்கினார்.

இவ்வாறு அவர் மேற்கொண்ட சேவைகளின் பட்டியல் நீளமானது. அவரின் சேவைகளும், உதவும் குணமும் - மறக்க முடியாதவை. அதனால்தான் மசூர் சின்னலெப்பையின் மரணத்தின் பின்பும் அவரை மக்கள் அன்போடு நினைவு கூறுகின்றார்கள்.

கிழக்கு மகாணசபை உறுப்பினராகப் பதவி வகித்துக் கொண்டிருந்தபோது, மசூர் சின்னலெப்பை சில காலம் சுகயீனமுற்றிருந்தார். வைத்தியசாலையில் வைத்து அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆயினும் கடந்த வருடம் இதேபோன்றதொரு மே 22 ஆம் திகதியன்று சிகிச்சைகள் பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது.

1955 ஆம் ஆண்டு பிறந்த மர்ஹும் மசூர் சின்னலெப்பை எனும் அந்த நல்ல மனிதரின் ஜனாஸா ஆயிரக் கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்ட அந்த நாள் மறக்க முடியாதது. மக்களுக்காக உழைத்த அவரின் பெயர் வாழும்!

மர்ஹும் மசூர் சின்னலெப்பை அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினமான இன்று, அவரின் சேவைகளை நினைவு கூர்வதோடு, மேலான சுவர்க்கம் அவருக்கு கிடைக்க பிராத்திப்போம்.                                                                                                  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :