மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து நகர மக்கள் பலரும் தமது கவலையை வெளியிட்டுள்ளார்கள். மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய விகாரையின் விகாராதிபதியினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் புத்தர் சிலை வைப்பதற்கான அனுமதி நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி வாரியத்தினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பௌத்த மக்கள் வசிக்காத பகுதியில் புத்த சிலை வைக்கப்படுவது எந்த வகையிலும் நியாயம் அல்ல என்றும் இது அப்பகுதியில் வாழும் குறிப்பாக, இந்து மக்களை புண்படுத்தும் செயலாகவே தாம் கருதுவதாகவும் நகர மக்கள் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
வடக்கு பிரதான நுழைவாயிலில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள வரவேற்பு அலங்கார வளைவுக்கு அருகாமையில் எந்தவொரு மதத்தையும் பிரதிபலிக்கும் அடையாளங்கள் எதுவும் இல்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
குறித்த விவகாரம் தொடர்பாக கூடி ஆராய்ந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆட்சேபனையையும் கண்டணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மத விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதம மந்திரி தி.மு ஜயரத்னவிற்கு அனுப்பி அவைத்துள்ள அவசர கடிதமொன்றில் இதனை நிறுத்துமாறு கேட்டுள்ளார்.
அந்தப்பகுதியிலே கொத்துக்குளம் முத்து மாரியம்மன் ஆலயம் அமைந்திருப்பதையும் அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய செயற்பாடுகள் மக்களிடையே மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் செயலாகவே கருத வேண்டியுள்ளது என்றும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment