(எம்.பைஷல் இஸ்மாயில்)பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டு பயிலுநர்களாக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான திறன் விருத்திப் பயிற்சி நெறி நாளை வியாழக்கிழமை நிறைவடையுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலிருந்து பயிற்சி பெறச் சென்று பயிற்சியை பெற்றுவரும் பட்டதாரி எம்.ஐ.சியாத் தெரிவித்தார்.
கடந்த 09 ஆம் திகதி தொடக்கம் பொலன்னறுவை - மின்னேரியா, பதுளை - மாதுறுஓயா, திருகோணமலை - சீனக்குடா ஆகிய படைத்தளங்களில் இடம்பெற்று வரும் இந்தப் பயிற்சி நெறிகள் எதிர்வரும் வியாழக்கிழமையோடு முடிவடைகின்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பொறுப்புக்கள், அந்த அமைச்சினால் அமுலாக்கப்படும் செயற்திட்டங்கள், திவிநெகும அபிவிருத்தி செயற்திட்டம், தலைமைத்துவம், தியானம் உடல் உள நல அப்பியாசங்கள், மனைப்பொருளாதார அபிவிருத்தி, சட்டமும் ஒருமைப்பாடும், சமூக அபிவிருத்தி, நிதிப் பிரமாணங்கள், வங்கிகளின் கடமைகளும் பொறுப்புக்களும், அமைச்சுக்களின் செயற்திட்டங்கள் போன்றவற்றுக்கான உள்ளக மற்றும் வெளிக்களப் பயிற்சிகள் இந்த இராணுவத் தளங்களில் இடம்பெற்றுவருகின்றன.
இதேவேளை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மின்னேரியாவிலுள்ள இராணுவத் தளத்துக்கு விஜயம் செய்து அங்கு பயிற்சி பெற்றுவரும் பட்டதாரி உத்தியோகத்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments :
Post a Comment