
(சலீம் றமீஸ்)
கிழக்கு மாகாணத்தில் இன உறவை கட்டியெழுப்புவதற்கு கிழக்கு மாகாண சபை செயல்படுவது போன்று சாரணர்களும் மூவின சமூகத்தின் குறிப்பாக இளைஞர்கள்; மத்தியில் இன உறவு, ஒற்றுமை ஏற்படுத்துவதற்கு உழைக்க வேண்டும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சரும், அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அக்கரைப்பற்று-கல்முனை சாரணர் குழுவின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை பிரதேச மாணவர்களுக்கான 3 நாள் சாரணர் பயிற்சி பட்டறை முகாம் இறுதி நிகழ்வு அட்டாளைச்சேனை ஆலம்குளம் றகுமானியா வித்தியாலத்தில் அதன் அதிபர் ஏ.சி.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறுகையில்,கடந்த 30 வருடங்களாக பிரிக்கப்பட்டிருந்த இன உறவு இன்று இணைக்கப்பட்டிருக்கின்றது. இது போன்றுதான் சாரணர் ஒன்றுகூடல்கள் மூலம் மூவின சமூகங்களுக்கிடையே சமாதானம், ஒற்றுமை, உறவு ஏற்படுத்தப்படல் வேண்டும்.
சாரணர் குழுவில் செயல்பட்டவர்கள்தான் சிறந்த தலைவர்களாகவும், அரசியல் வாதிகளாகவும், திணைக்களங்களின் தலைவர்களாகும் திகழ்கின்றனர். எமது நாட்டின் சமாதானத்திற்காக குரல் கொடுத்தவரும், ஒரு கட்சியின் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்து வருகின்ற அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களும் ஒரு சிறந்த சாரணத்தலைவராக செயல்பட்டவர்தான்.எதிர்கால சந்ததினர்களான நீங்களும் சாரணர் பயிற்சி மூலம் ஒவ்வொரு துறைகளிலும் சிறந்தவர்களாக வரவேண்டும்.
பின்தங்கிய கிராமங்களில் இவ்வாரான சாரணர் முகாம்களை அமைத்து பயிற்சிகள், தலைமைத்துவ வழிகாட்டல்களை வழங்குகின்ற போது அக்கிரமத்தின் இளைஞர்கள் மத்தியில் நற்பண்புகளும், உறவுகளும் வளர்வதுடன், இக்கிராமம் அபிவிருத்தி அடைவதற்கும் சந்தர்ப்பம் அமைகின்றது.
சாரணர் அபிவிருத்திக்காக என்னால் முடிந்த உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்குவேன் எனவும் அமைச்சர் உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் இளைஞர் பாராளுமன்ற சபை முதல்வருமான யூ.எல்.முஹம்மட் சபீர், மாவட்ட சாரணர் முகாம் பிரதம கண்கானிப்பாளரும், ஆணையாளருமான எம்.ஐ.எம்.முஸ்தபா, மாவட்ட ஆணையாளர் ஐ.எல்.எம்.மஜீட், மாவட்ட உதவி ஆணையாளர்களான பிரதேச சபை உறுப்பினரும், தேசிய சாரணசங்க செய்தியாளருமான எஸ்.எல்.முனாஸ், ஊடகவியலாளர் எம்.எப்.றிபாஸ், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.சரிப், கிராம நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எல்.ஏ.சமட், ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்களான யூ.எம்.வாஹிட், எஸ்.எல்.ஏ.றஸாக், சகுர்டீன் ஐ.எஸ்.ஏ, பிரதி அதிபர் ஜபீர் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி பட்டறையின் போது திறமைகளை வெளிக்காட்டிய சாரணர்கள் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.









0 comments :
Post a Comment