முஸ்லிம்களின் சமகாலப் பிரச்சினையான இறைச்சிக்கடை


முஸ்லிம்களின் சமகாலப் பிரச்சினைகள் என்ற தலைப்பில் சமூகத்தலைவர்களுக்கும் அதிகாரத்திலுள்ள அமைச்சர் ஒருவருக்கும் அரசியல் கட்சிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மேலும் ஓர் பிரச்சினை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.அது இறைச்சிக்கடைப்பிரச்சினை. பள்ளிவாசலில் கைவைத்தவர்கள் குர்ஆன் மத்ரஸாக்களுக்கெதிராக சுலோகம் ஏந்தியவர்கள்இ ஹலால் சான்றிதழுக்கு எதிராக கோஷமெழுப்பியவர்கள் இன்று இறைச்சிக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று உள்ளூராட்சி நிர்வாகத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து அதனையும் சாதித்து விட்டார்கள். பாணந்துறை நகர சபையின் இறைச்சிக்கடையே இவ்வாறு இழுத்து மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இவ் இறைச்சிக்கடை அரை நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு கொண்டதாகும். 1958 ஆம் ஆண்டிலிருந்து ஒரு குடும்பத்தினரே பரம்பரையாக இந்தக் கடையை நடத்தி வருகிறார்கள். பாணந்துறை ஒரு பெளத்த பிரதேசம். பெளத்த பிரதேசத்துக்குள் புனிதமான பிரதேசத்துக்குள் இறைச்சிக்கடை இருக்கக் கூடாது என்று தொடராக பெளத்த மதகுருமாரும் பெரும்பான்மை சமூக அமைப்புகளும் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தன. இறுதிக்கட்டமாக அண்மையில் பெளத்த குருமார் குழுவொன்று குறிப்பிட்ட இறைச்சிக்கடை மூடப்பட வேண்டுமென பாணந்துறை நகர சபைத் தலைவர் நந்தன குணதிலக்கவிடம் மகஜர் ஒன்றினை சமர்ப்பித்திருந்தது.சம்பவம் தொடர்பில் விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக தற்போது இறைச்சிக்கடையை நடத்திக் கொண்டிருக்கும் ஏ. ஏ. எம். ரிஸ்மியை 'விடிவெள்ளி' தொடர்பு கொண்ட போது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.


இறைச்சிக் கடையை எனது குடும்பமே பரம்பரையாக நடத்தி வருகிறது. கடை பாணந்துறை நகர சபைக்குச் சொந்தமான தாகும். கேள்விப்பத்திரம் கோரப்பட்டே இறைச்சி விற்பதற்கான அனுமதி நகர சபையினால் வழங்கப்படுகிறது. எனது கடைக்கான அனுமதிப்பத்திரம் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகின்றது. அது வரையிலுமே என்னால் இறைச்சிக் கடையை நடத்த முடியும். இக்கடைக்கு புதிதாக கேள்விப்பத்திரம் நகர சபையினால் அண்மையில் கோரப்பட்டது.

நானும் விண்ணப்பித்தேன். நான் 3 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா விலை குறித்து விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தேன். இதேவேளை இறைச்சிக் கடையை மூடி விடவேண்டும் என்று செயற்பட்டு வரும் பெளத்த பிக்கு ஒருவர் அவரது நண்பரின் பெயரில் விண்ணப்பித்திருத்தார். அவர் எனது விலையினை விடவும் 25 ஆயிரம் ரூபா கூடுதலாக குறித்து 4 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவுக்கு விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையிலேயே பாணந்துறை நகர சபை உறுப்பினர் ஒருவரினால் இறைச்சிக்கடை மூடப்பட வேண்டும் என்ற பிரேரணை முன் வைக்கப்பட்டது. இறைச்சிக்கடை மக்களின் தேவை கருதியே நடத்தப்படுகிறது. இறைச்சிக் கடையை வேண்டாம் மூடி விடுங்கள் என்று சொல்வது தவறு. இது பற்றி மக்களைத் தெளிவு படுத்த வேண்டும். இந்தக்கடை நீண்ட காலமாக இயங்கி வருகிறது என சபையின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.இறுதியில் பெளத்த குருமாரின் அழுத்தம் காரணமாக சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமை காரணமாகவும் இறைச்சிக்கடை மூடப்பட வேண்டும் என்ற பிரேரணை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார். இது தொடர்பில் பாணந்துறை நகர சபையின் உபதலைவர் றியன்ஸி பர்ணாந்துவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் பின்வருமாறு தெரிவித்தார். நகர சபைக்குச் சொந்தமான இறைச்சி கடையை மூடிவிடும்படி பெளத்த குருமார் உட்பட பொது அமைப்புக்கள் மகஜர் ஒன்றைச் சமர்ப்பித்திருந்தன. சபையில் பிரேரணை ஒன்று முன் வைக்கப்பட்டு அப்பிரேரணைக்கு ஏகமனதாக ஆதரவும் வழங்கப்பட்டு சபையில் நிறைவேறியது. 

இதேவேளை நாம் எற்கனவே இவ் இறைச்சிக்கடைக்கு கேள்விப் பத்திரமும் கோரியிருந்தோம். இந்நிலையில் இறைச்சிக் கடையை மூடுவதற்கும் சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி உள்ளூராட்சி ஆணையாளரிடம் எழுத்து மூலம் ஆலோசனை கோரியுள்ளோம் என்றார். இறைச்சிக் கடையை மூடி விடுவதற்கான பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய நகர சபை த் தலைவர் உட்பட உறுப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் நன்றி தெரிவித்து பாணந்துறை நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பாணந்துறை நகர சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் பாணந்துறை பிரதேச சபையின் உபதலைவரான எம். இபாத் நபுகானை தொடர்பு கொண்டு இறைச்சிக் கடையின் நிலைமை பற்றி வினவிய போது அவர் பின்வருமாறு தெரிவித்தார். 

பெளத்த குருமாரின் அழுத்தங்களினாலேயே குறிப்பிட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இறைச்சிக் கடைக்கான கேள்விப் பத்திர விலை மனு கோரலில் பெளத்த பிக்கு ஒருவர் தனது நண்பரின் பெயரில் கூடுதலான விலையை குறித்து விண்ணப்பித்துள்ளார். அவருக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். இந்த அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டு இறைச்சிக் கடையைத் திறக்காமல் மூடி விடுவதே அவர்களின் திட்டம். அவ்வாறு அனுமதியைப் பெற்றுக் கொண்டு கடையைத் திறக்காமலிருக்க முடியாது. அவ்வாறு திறக்காமலிருந்தால் அனுமதிப்பத்திர பட்டியலிலுள்ள அடுத்த விண்ணப்பதாரிக்கே வழங்கப்பட வேண்டும். இவ்வாறான ஒரு சிக்கல் நிலை உருவாகலாம். எனவே நகர சபைத் தலை வர் உள்ளூராட்சி ஆணையாளரிடம் இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனைகளை கோரியுள்ளார் என்றார். குறிப்பிட்ட இறைச்சிக் கடை தொடர்பாக உள்ளூராட்சி ஆணையாளரைத் தொடர்பு கொண்டு தீர்வினைப் பெற்றுத் தருமாறு இறைச்சி வர்த்தகர் ரிஸ்மி நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குர்பான் கடமைக்கும் பல சவால்கள் எதிர்ப்புகள் கெடுபிடிகள் நாட்டின் பல பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டமையும் இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கதாகும்.

ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையின் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆடு மாடுகள் அறுக்கப்படக்கூடாது என்று ஓர் பிரேரணை நிறைவேற்றப்பட்டு அப்பகுதியில் குர்பான் கடமைக்குத் தடையிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். பாணந்துறை நகரத்தில் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக இயங்கி வந்த இறைச்சிக் கடையின் தலைவிதி இதுவென்றால் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளின் எதிர்காலம் என்னவாகும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது. கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ளூராட்சிச் சபைகளின் அதிகாரம் பெரும்பான்மை சமூகத்திடமே உள்ளது. எனவே அவர்கள் தமக்குச் சாதகமாக எத்தனை பிரேரணைகளை வேண்டுமென்றாலும் கொண்டுவந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும். முஸ்லிம்களுக்கெதிரான சவால்கள் புதிது புதிதாக முளைவிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சமூகம் சார்ந்த அரசியல் தலைமைகள் மெளனம் சாதிப்பது ஆரோக்கியமானதல்ல. பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வினை பெற்றுத்தர களமிறங்க வேண்டியது அவசியமாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :