அட்டாளைச்சேனை பாடசாலையொன்றில் பரீட்சையில் மோசடி நடந்துள்ளமையால் மீள்பரீட்சை

Share on
(நமது செய்தியாளர்)
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மூன்றாந் தவணைப் பரீட்சை மோசடிகளை அடுத்து மேற்படி மாணவர்களுக்கு மீள்பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளன. குறித்த பாடசாலையைச் சேர்ந்த தரம் 10 மாணவர்களுக்கே இவ்வாறு மீள்பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் மூலமாக - சில பெண் மாணவியர்கள் தமக்கான பரீட்சை வினாக்களுக்குரிய விடைகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு பரீட்சைக்குத் தோற்றியமை தெரிய வந்ததையடுத்தே மீள்பரீட்சைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

கணிதம், விஞ்ஞானம், புவியியல் மற்றும் வரலாறு ஆகிய 04 பாடங்களின் பரீட்சை வினாக்களுக்கான விடைகளை முன்கூட்டியே குறித்த மாணவிகள் தெரிந்து கொண்டு பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை பாடசாலை நிருவாகத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதேவேளை, வழமையாக குறைவான புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் குறித்த பாடங்களில் அதிகூடிய புள்ளிகளையும் பெற்றிருந்தனர். 

குறித்த பாடசாலையின் பரீட்சைக் குழுவிலுள்ள ஆசிரியர் ஒருவரே - பெண் மாணவியர் சிலருக்கு குறித்த வினாத்தாள்களுக்கான விடைகளை ரகசியமாக முன்கூட்டியே வழங்கியிருந்தமை இதன்போது தெரியவந்துள்ளது. 

இது தொடர்பில் பாடசாலை நிருவாகத்தினர் விசாரணைகளை மேற்கொண்ட போது, குறித்த ஆசிரியரே பரீட்சைக்கான விடைகளை தமக்கு முன்கூட்டியே வழங்கியதாக சம்பந்தப்பட்ட மாணவியர்கள் கூறியுள்ளனர். 

இதனையடுத்து, குறிப்பிட்ட 04 பாடங்களுக்குமான பரீட்சைகள் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மீளவும் நடத்தப்பட்டன. அரசாங்கப் பாடசாலைகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று மூன்றாந் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்ட நிலையிலேயே – அன்றைய தினம் மேற்படி மாணவர்களுக்கு பரீட்சைகள் நடத்தப்பட்டன.

இதனால், இப்பாடசாலையின் தரம் 10 மாணவர்களுக்கான பெறுபேற்று அறிக்கைகள் வழங்கப்படாமலேயே மூன்றாந் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, பரீட்சை வினாக்களுக்கான விடைகளை மாணவர்களுக்கு தவறான முறையில் முன்கூட்டியே தெரியப்படுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியரை பாடசாலையின் பரீட்சைக் குழுவிலிருந்து உடனடியாக இடை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், மீள் பரீட்சைகளை நடத்திமைக்கான செலவுகளை மோசடியில் ஈடுபட்ட குறித்த ஆசிரியரே பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும், மேற்படி பரீட்சையில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து, பாடசாலை நிருவாகத்தினர் இன்று சனிக்கிழமை வரை - தமது மேலதிகாரியான அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கவில்லை என்பதும், மீள் பரீட்சை நடத்துவதற்கான எழுத்து மூல அனுமதியினை வலயக் கல்விப் பணிப்பாளரிடமிருந்து பெற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மூன்றாந் தவணைப் பரீட்சைகளுக்கான வினாப்பத்திரங்கள் வலயக் கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்படுவது வழமையாகும். ஆயினும், இம்முறை குறித்த பரீட்சைகளுக்கான வினாத்தாள்கள் பாடசாலைகளிலேயே தாயாரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே இவ்வாறானதொரு மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :