காத்தான்குடியின் எதிர்காலத்திற்கு உலமாக்களும் புத்திஜீவிகளும் இணைந்து வழிகாட்ட வேண்டும்
காத்தான்குடியின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உலமாக்களின் மார்க்க அறிவும், புத்திஜீவிகளின் அறிவும், இளைஞர்களின் ஆற்றலும், பெற்றோரின் அர்ப்பணிப்பும், சமூக நிறுவனங்களின் ஒத்துழைப்பும் ஒன்றிணைய வேண்டுமென இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் வலியுறுத்தியுள்ளார்.
காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற காத்தான்குடி ஐக்கிய மீலாத் விழா, அமைப்பின் பத்தாண்டு நிறைவு எழுச்சி விழா மற்றும் பரிசளிப்பு–கௌரவிப்பு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் பாஸில், மீலாத் விழா என்பது வெறுமனே ஒரு கொண்டாட்டமாக அமையக் கூடாது எனவும், இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் உண்மை, நேர்மை, பொறுமை, கருணை, நீதி, சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு போன்ற உயரிய பண்புகளை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிமொழியை மேற்கொள்ளும் சந்தர்ப்பமாக அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
காத்தான்குடி கடந்த காலங்களில் பல்வேறு சவால்களையும் போரினால் ஏற்பட்ட வடுக்களையும் எதிர்கொண்ட போதிலும், சமூக ஒருமைப்பாடு மற்றும் வர்த்தகத் திறமை ஆகியவற்றின் மூலம் மீண்டும் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, கடந்த காலங்களில் ஏற்பட்ட மத ரீதியான முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் மற்றும் கசப்பான அனுபவங்களிலிருந்து ஆக்கபூர்வமான பாடங்களை கற்றுக்கொண்டு, எதிர்கால சமூகப் பயணத்தை திட்டமிட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
உலமாக்களின் சமூகப் பொறுப்பு
உலமாக்கள் வெறுமனே மார்க்கச் சடங்குகளுக்கு வழிகாட்டுபவர்களாக தமது பணிகளை மட்டுப்படுத்திக் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்ட பேராசிரியர் பாஸில், சவால்கள் நிறைந்த இக்காலகட்டத்தில் சமூகத்தை சரியான பாதையில் வழிநடத்தும் பாரிய பொறுப்பு அவர்களுக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.
மார்க்க அறிவும் உலகியல் அறிவும் ஒன்றிணைந்த வழிகாட்டலே ஒரு சமூகத்தை நேர்வழிப்படுத்தும் எனக் குறிப்பிட்ட அவர், ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளாக முன்னெடுத்து வரும் சமூகப் பணிகள் பாராட்டுக்குரியவை என்றும் தெரிவித்தார்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு முன்னுரிமை
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் ஆன்மீக, ஒழுக்க வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பள்ளிவாயல்கள் வெறுமனே தொழுகைக்கான இடங்களாக மட்டுமன்றி, அறிவு, ஆன்மீகம், சமூக விழிப்புணர்வு மற்றும் இளைஞர் மேம்பாட்டுக்கான மையங்களாகவும் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், குடும்பப் பிரச்சினைகள், அதிகரித்துவரும் விவாகரத்துகள், இளைஞர்களின் உளவியல் சவால்கள், சமூக அழுத்தங்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை போன்ற பிரச்சினைகளை வெறுமனே கண்டிப்பதன் மூலம் தீர்க்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், உலமாக்கள், உளவியலாளர்கள், கல்வியியலாளர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் இணைந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டல் சேவைகளை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
நல்லிணக்கமும் சகிப்புத்தன்மையும் அவசியம்
கடந்த கால கசப்பான அனுபவங்களிலிருந்து ஆக்கபூர்வமான பாடங்களை கற்றுக்கொண்டு, மார்க்கத்தின் பெயரில் உருவாகும் தீவிரப்போக்குகள், தேவையற்ற முரண்பாடுகள் மற்றும் சமூகப் பிரிவினைகளை தவிர்க்க வேண்டும் எனவும் பேராசிரியர் பாஸில் வலியுறுத்தினார்.
இஸ்லாத்தின் மிதமான பாதையான ‘வாஸதிய்யா’ அணுகுமுறையை சமூகத்தில் வலுப்படுத்துவதுடன், இலங்கையின் பன்மைத்துவ சமூக சூழலை கருத்திற்கொண்டு ஏனைய சமூகங்களுடன் பரஸ்பர மரியாதை, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதிலும் உலமாக்களும் புத்திஜீவிகளும் பங்காற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கல்வி, தொழில் மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம்
காத்தான்குடி இளைஞர்களை மாறிவரும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப அறிவு, திறன், தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைப்பு ஆகிய துறைகளில் வலுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆண், பெண் இருபாலாருக்கும் உயர்கல்வி, தொழில் வழிகாட்டல், தொழில் முனைப்பு, திறன் விருத்தி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகளுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கல்வியிலும் ஆன்மீகத்திலும் தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்ட காத்தான்குடி, கடந்த கால சவால்களை ஆக்கபூர்வமான அனுபவங்களாக மாற்றி, எதிர்காலத்தில் இலங்கைக்கு ஒரு முன்மாதிரியான சமூகமாக மிளிர வேண்டும் என பேராசிரியர் பாஸில் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த அவர், அவர்களின் திறமைகளை அடையாளங்கண்டு ஊக்குவித்து, எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதில் பங்களிக்கும் அமைப்பின் நிர்வாகிகள், உலமாக்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
அறிவு, ஆன்மீகம், ஒற்றுமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் புதிய தொடக்கமாக இம்முப்பெரும் விழா அமைய வேண்டும் எனவும் அவர் பிரார்த்தனை தெரிவித்தார்.






0 comments :
Post a Comment