
மிக நீண்ட காலமாக விவசாயிகளால் விவசாயம் செய்யப்பட்டுவந்த ஏறத்தாள 4ஆயிரம் ஏக்கர் காணிகளை மேய்ச்சல் தரைக்கு தரும்படி கேட்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திலே ஒரு வழக்கு தொடரப்பட்டிருக்கின்றது இந்த வழக்கில் காலாகாலமாக விவசாயம் செய்துவந்த காணிகளை மேய்ச்சல் தரைக்காக தருமாறு கேட்டிருக்கின்றார்கள் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.
கிழக்கு மகாணசபையின் 2013ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட கல்வி, மற்றும் காணி, காணி அபிவிருத்தி அமைச்சின் விவாதம்; (12.12.2012) இடம்பெற்ற வேளையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்படி கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்- அம்பாரை மாவட்ட வட்டமடு, பொத்தானை, கொக்குளுவ, மொறானவட்டி போன்ற வயல் நிலங்கள் தொடர்பாக மீண்டும் ஒரு தமிழ் முஸ்லிம் உறவினை சீர்குலைக்கின்ற நிலவரம் வந்துவிடக்கூடாது என்பதற்காக காணி அமைச்சர் என்றவகையில் மாகாணசபையினுடைய காணி அமைச்சர் அவர்கள் உடனடியாக தலையிட்டு இந்தப் பிரச்சினையை சுமூகமான ஒரு தீர்வுக்கு கொண்டுவர முயற்சிக்கவேண்டும். அம்பாரை மாவட்டத்தில் தற்போது முறுகல் நிலையினை ஏற்படுத்தியிருக்கும் வட்டமடு, பொத்தானை,கொக்குளுவ, மொறானவட்டி போன்ற வயல் செய்யும் காணிகளை மேய்ச்சல் தரைக்காக தரும்படி கேட்கின்ற வியடம் பற்றி இங்கு இந்த சபையின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
இதில் ஒரு விடயம் என்னவென்றால் குளத்திற்கு கீழ் உள்ள பள்ளக்காணிகளை விவசாயத்திற்கு அதாவது விவசாயத்திற்கு பயன்படுத்துகின்ற காணிகளை பண்ணைக்காக கேட்கிறார்கள் ஆனால் பண்ணை வளர்ப்பு என்பது உயர்ந்த இடத்தில் இருக்கின்ற இடத்தில்தான் செய்யப்படவேண்டும் அப்படி இருந்தும்கூட காலாகாலமாக விவசாயம் செய்யப்பட்டுவருகின்ற காணிகளை பண்ணை வளர்ப்புக்காக கேட்பது நியாயமான விடயமாக படவில்லை. அதே போன்று இந்த நிலம் தொடர்பாக ஏற்கனவே முறண்பாடு வந்து 2தமிழ் சகோதரர்களும், முஸ்லிம் சகோதரர்களும் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டார்கள் இப்படியான படுகொலைகள் நிகழ்ந்து முடிந்திருக்கின்ற இந்தக்காணி விவகாரத்தை சரியான முறையில் தீர்த்துவைக்கவேண்டும்.
பல்லாயிரக்கணக்கான காடுகளும், அதே போன்று வெறும் தரைகளும் இருக்கின்ற பிரதேசத்தினை பண்ணை வளர்ப்புக்காக ஒதுக்கிக்கொடுத்து விவசாயம் செய்யப்படுகின்ற காணிகளை விவசாய செய்வதற்கு தொடர்ந்தும் அனுமதிக்கவேண்டும் என்று இந்த சபையினை நான் வேண்டிக்கொள்கிறேன் அதே போன்று இவ்வாறான பிரச்சினைகள் நிறைய இருக்கின்றது அவை தொடர்பாக பேசுவதற்குரிய காலமும் நேரமும் போதாத காரணத்தினால் இந்த விடயத்தினை மாத்திரம் நான் அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
ஆகவே இந்த மேய்ச்சல்தரை விடயத்தில் விவசாயக்காணிகள் தொடர்பிலும் சுமூகமான தீர்வுக்கு கொண்டுவர வேண்டுமெனவும், விவசாய அமைச்சரும், காணி அமைச்சரும் உடனடியாக தலையிட்டு இதனை தங்களுடைய கவனத்தில் எடுத்து இவற்றுக்கு தீர்வு வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
0 comments :
Post a Comment