தேசிய வாசிப்பு மாதம் – ஒக்டோபர் 2026ஐ முன்னிட்டு, மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், “வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன்” எனும் தொனிப்பொருளிலான சிறப்புக் கருத்தரங்கு கடந்த வெள்ளிக்கிழமை (30.10.2026) சம்மாந்துறையில் நடைபெற்றது.
U.L.M. முஹீதின் பொது நூலகம் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில், கமு/சது/அல் மர்ஜான் தேசிய பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் தரம் 10 மாணவிகளுக்காக இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நூலகர் I.L.M. நஸீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகர் S.L.M. சஜீர் வளவாளராகக் கலந்துகொண்டு, வாசிப்பின் முக்கியத்துவம், அதன் மூலம் கிடைக்கும் அறிவுசார் நன்மைகள் மற்றும் மாணவர்களின் ஆளுமை விருத்தியில் வாசிப்பு ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக விளக்கமளித்தார்.
இதன்போது, வாசிப்பு என்பது பாடநூல்களுடன் மட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதையும், இலக்கியம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு அறிவுசார் நூல்களைத் தொடர்ந்து வாசிப்பதன் மூலம் மாணவர்களின் மொழியாற்றல், சொல்வளம், எழுத்தாற்றல், பகுத்தறியும் திறன் மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனை ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.
மேலும், டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மத்தியில் நேரத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி, நூலகங்களை அறிவுத் தேடலுக்கான மையங்களாக அணுகுவதுடன், வாசிப்பை அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், உதவி அதிபர், ஆசிரிய நூலகர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் மத்தியில் வாசிப்பின் மீதான ஆர்வத்தை வளர்த்து, நூலகப் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் அறிவார்ந்த வாசிப்பு சமூகமொன்றை உருவாக்குவதற்கான பயனுள்ள முன்னெடுப்பாக இக்கருத்தரங்கு அமைந்தது.

0 comments :
Post a Comment