எம்.என்.எம். அப்ராஸ்-
அம்பாறை மாவட்டம், கல்முனை நகரின் மக்கள் குடியிருப்புப் பகுதியில் இன்று (25) அதிகாலை இரண்டு காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததில், வீட்டு மதில், கேற் மற்றும் களஞ்சியக் கட்டடம் என்பன சேதமடைந்துள்ளன.
கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள லங்கா சதோச (Lanka Sathosa) நிறுவனத்தின் அலியார் வீதியிலுள்ள களஞ்சியப் பகுதியிலும், அதற்கு அருகிலுள்ள வீடொன்றின் கேற் மற்றும் மதில் பகுதிகளிலும் காட்டு யானைகள் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சம்பவத்தின்போது, வீட்டில் தங்கியிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் ஆபத்திலிருந்து தப்பியுள்ளனர். எனினும், மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் காட்டு யானைகள் ஊடுருவி இவ்வாறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகக் கல்முனையை அண்மித்த வயல்வெளிகளில் காட்டு யானைகள் நடமாடி வந்ததாகவும், இரவு நேரங்களில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் அவை ஊடுருவி வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருக்கும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதால், உயிர் மற்றும் உடைமைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, கல்முனை மற்றும் அதனைச் சூழவுள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நுழைவதைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்தால், எதிர்காலத்தில் உயிரிழப்புகள் உள்ளிட்ட பாரதூரமான அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகின்றது. எனவே, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றை வழங்குவதுடன், இரவு நேரங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

0 comments :
Post a Comment