சாய்ந்தமருதில் ‘சங்கையின் ஒலி’ கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு!



கவிதாயினி ஹாஜியானி சித்தி ஜெஸீனா நிஸ்றீனின் 86 கவிதைகள் அடங்கிய நூல் அறிமுகம்; பெண் படைப்பாளர்களின் எழுச்சி, குடும்பப் பாரம்பரியம், சமூகப் பொறுப்பு குறித்து பேராசிரியர்கள் வலியுறுத்தல்

எம்.வை. அமீர், யூ.கே. காலித்தீன்-
சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில், கவிஞரும் எழுத்தாளருமான ஹாஜியானி சித்தி ஜெஸீனா நிஸ்றீன் எழுதிய ‘சங்கையின் ஒலி’ கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 2026.10.25 ஆம் திகதி இடம்பெற்றது.

முன்னாள் அதிபரும் கோட்டக் கல்வி அதிகாரியுமான கலாபூஷணம் ஏ. பீர்முகம்மது (இரண்டாம் விசுவாமித்திரன்) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸகீலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றின்ஸான், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம். றஷ்மி மூஸா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரியும் கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தருமான ஏ.பி. நௌஷாத் மற்றும் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். தௌபீக் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

இந்நூல் வெளியீட்டு விழாவின் முக்கிய நிகழ்வாக, நூலாசிரியர் ஹாஜியானி சித்தி ஜெஸீனா நிஸ்றீன் தனது கவிதைத் தொகுப்பை ஹாஜியானி ஜெமீலா கரீம் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்தார். குடும்ப உறவுகள், நினைவுகள், இலக்கியப் பாரம்பரியம் ஆகியவற்றை மையப்படுத்திய இச்சமர்ப்பணம் நிகழ்வில் உணர்வுபூர்வமான இடத்தைப் பெற்றது.

நூலின் முதன்மைப் பிரதிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும் இளைஞர் அமைப்பாளருமான எம்.எம்.எம். பாமி, ஓய்வுபெற்ற பொறியியலாளர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். அப்துல் ஸலாம், ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் அல்ஹாஜ் சி.பி.எம். ஹனீபா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் மற்றும் முதுநிலை விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக் ஆகியோர் நூல் தொடர்பான சிறப்புரைகளை நிகழ்த்தினர். ஸ்ரீலங்கா பென் கிளப்பின் தலைவியும் கலாபூஷணமுமான சித்தி மஷுறா சுஹுர்தீன் நூலின் இலக்கியச் சிறப்புகள் தொடர்பான இரசனைக் குறிப்பை வழங்கினார். அம்பாறை மாவட்ட கலாசார அதிகாரசபையின் பிரதித் தலைவரும் மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவருமான அஸ்வான் சக்காப் மௌலானா வாழ்த்துரை வழங்கினார்.

மனிதர்களைப் பண்படுத்தும் இலக்கியங்கள் உருவாக வேண்டும் – டாக்டர் ஸகீலா இஸ்ஸதீன்

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸகீலா இஸ்ஸதீன், நூலாசிரியரின் படைப்பாற்றலையும் இலக்கிய முயற்சியையும் பாராட்டியதுடன், இலக்கியங்கள் சமூகத்தில் ஆற்ற வேண்டிய பொறுப்பு குறித்தும் வலியுறுத்தினார்.

மனிதர்களின் வாழ்க்கையில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளையும் அனுபவங்களையும் சொற்சுவையுடனும் கவித்திறனுடனும் வெளிப்படுத்தியுள்ள சித்தி ஜெஸீனா நிஸ்றீன், தனது அறிவுபூர்வமான ஆற்றலை இந்நூலின் ஊடாக நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு சிந்தனையாளர்களையும் இலக்கிய ஆர்வலர்களையும் ஒருங்கிணைத்து இத்தகைய நூல் வெளியீட்டு விழாவைச் சிறப்பாக நடத்துவது எளிதான காரியமல்ல என்றும், இம்முயற்சி பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம்கள் ஆரம்ப காலத்திலிருந்தே தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், 1938ஆம் ஆண்டு வெளிவந்ததாகக் குறிப்பிடப்படும் ‘சுனைதாவேகம்’ நூலை இலங்கையின் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் இலக்கிய வரலாற்றுடன் தொடர்புபடுத்தி நினைவுகூர்ந்தார்.

இலக்கியங்களும் கவிதைகளும் வெறும் வர்ணனைகளாகவும் உணர்வுகளை வெளிப்படுத்தும் படைப்புகளாகவும் மட்டும் அமைந்துவிடக் கூடாது. அவை மனிதர்களைப் பண்படுத்தி, சமூகத்தை நல்வழிப்படுத்தி, வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் கருவிகளாகவும் அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தற்காலத்தில் அதிகரித்து வரும் தற்கொலைச் சம்பவங்கள் கவலைக்குரிய சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மனிதர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும், வாழ்க்கையின் பெறுமதியை உணர்த்தும் வகையிலும் இலக்கியவாதிகள் தமது படைப்புகளை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

‘சங்கையின் ஒலி’யில் குடும்பம், சமயம், இயற்கை, மனித உணர்வுகள் –விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக்

தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக் தனது சிறப்புரையில், பெண்களின் கல்வி, எழுத்துரிமை மற்றும் சமூகப் பங்களிப்பு தொடர்பான மாற்றங்களை எடுத்துரைத்தார்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பெண்களின் கல்விக்கும் சமூகச் செயற்பாடுகளுக்கும் பல்வேறு தடைகள் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்காலத்தில் பெண்கள் சமூக மாற்றத்திற்கும் கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் கணிசமான பங்களிப்புகளை வழங்கி வருவது வரவேற்கத்தக்க மாற்றமாகும் என்றார்.

சித்தி ஜெஸீனா நிஸ்றீன் தனது குடும்ப அனுபவங்களையும் வாழ்க்கைச் சூழலையும் அடிப்படையாகக் கொண்டு எழுதிய 86 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றில் சமயம், இயற்கை, மனித வாழ்க்கை, குடும்ப உறவுகள் மற்றும் பாரம்பரியம் ஆகிய பல்வேறு கருப்பொருள்கள் வெளிப்படுவதாகத் தெரிவித்தார்.

நூலாசிரியர் தனது பெயருடன் ‘ஹாஜியானி’ என்ற அடையாளத்தையும் இணைத்துப் படைப்புலகில் தன்னை அறிமுகப்படுத்தியிருப்பது தனித்துவமான அம்சமாகும் எனக் குறிப்பிட்டார்.

கவிஞர் ஏ.யூ.எம்.ஏ. கரீம் அவர்களின் இலக்கியப் பாரம்பரியத்துடன் தொடர்புடைய குடும்பப் பின்னணியில் இருந்து சித்தி ஜெஸீனா நிஸ்றீன் இத்தகைய படைப்பை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.

பெண்களின் அனுபவங்கள், சிந்தனைகள் மற்றும் சமூகப் பார்வைகள் இலக்கியத்தில் அதிகளவில் இடம்பெறுவது, சமூகத்தின் பல்வேறு உண்மைகளை வெளிக்கொணர்வதற்கான முக்கியமான வாய்ப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

86 கவிதைகளில் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்கள் –
பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் தமிழ்த்துறையின் சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ்,


தனது சிறப்புரையில், ‘சங்கையின் ஒலி’ கவிதைத் தொகுப்பின் உள்ளடக்கங்கள் மற்றும் தனித்துவமான அம்சங்களை விரிவாக எடுத்துரைத்தார்.

நூலாசிரியர் தனது தந்தை மர்ஹும் ஏ.யூ.ஏம்.ஏ.கரீம் அவர்களின் நினைவுகளையும், தந்தையின் மீதான பாசத்தையும் கவிதைகளின் ஊடாக வெளிப்படுத்தியிருப்பது நூலின் முக்கியமான சிறப்பாகும் எனக் குறிப்பிட்டார். ஒரு தந்தையின் உருவத்தையும் நினைவுகளையும் மையப்படுத்தி மகள் எழுதும் கவிதைகள் குடும்ப உறவுகளின் ஆழத்தையும் உணர்வுகளின் நுட்பத்தையும் வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

பொதுவாகத் தந்தையின் பெருமையையும் குடும்பத்தின் பாரம்பரியத்தையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைவதாகக் குறிப்பிட்ட அவர், ஜெஸீனா நிஸ்றீன் தனது கவிதைகளின் ஊடாகக் குடும்பப் பெருமையையும் இலக்கிய மரபையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளதாகப் பாராட்டினார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள 86 கவிதைகளும் மனித வாழ்க்கையின் பல்வேறு உணர்வுகள், அன்றாட அனுபவங்கள், கவலைகள், அமைதி, மனிதப் பண்புகள் மற்றும் ஆன்மீகம் போன்ற பரிமாணங்களைத் தொட்டுச் செல்வதாக அவர் கூறினார். குறிப்பாகச் சமயம் மற்றும் மார்க்கம் தொடர்பான பார்வைகள் கவிதைகளில் ஆழமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தற்காலத்தில் பெண்களால் அதிகளவிலான கவிதைத் தொகுப்புகள் வெளியிடப்படுவது மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும் என்றும், இத்தகைய படைப்புகள் சமூகத்தின் சிந்தனைப் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வலுவான ஊடகமாக அமைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெண்களின் பிரச்சினைகளைப் பெண்களின் குரலே ஆழமாகப் பதிவு செய்யும் – சித்தி மஷுறா சுஹுர்தீன்

நூல் தொடர்பான இரசனைக் குறிப்பை வழங்கிய ஸ்ரீலங்கா பென் கிளப்பின் தலைவி சித்தி மஷுறா சுஹுர்தீன், பெண்களின் வாழ்வியல் அனுபவங்களையும் சமூகப் பிரச்சினைகளையும் பெண் படைப்பாளர்கள் தமது தனித்துவமான பார்வையில் இலக்கியமாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு வகையான வாழ்க்கைப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆனால் பெண்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் அவர்களின் உள்ளார்ந்த உணர்வுகளையும் பெண்களே தமது படைப்புகளின் ஊடாக ஆழமாக வெளிப்படுத்த முடியும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

தற்கால விலைவாசி உயர்வால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளையும், குடும்பத்தை நடத்துவதற்காகப் பெண்கள் இரவு பகலாக உழைக்கும் நிலையையும் ஜெஸீனா நிஸ்றீனின் கவிதைகள் துல்லியமாகப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, ஏழைத் தாய்மார்களின் துயரங்களையும் வாழ்க்கைக்கான போராட்டங்களையும் சித்தரிக்கும் கவிதை வரிகளை எடுத்துக்காட்டி, அன்றாட வாழ்வின் வேதனைகளை இலக்கியமாக மாற்றும் கவிஞரின் திறமையைப் பாராட்டினார்.

கிழக்கிலங்கையின் இயற்கை வளங்களையும் மருதநிலத்தின் செழிப்பையும் எடுத்துரைக்கும் ‘கிழக்கிலங்கை’ கவிதை, பிரதேசத்தின் நிலவளத்தையும் நீர்வளத்தையும் அழகிய சொற்களால் சித்தரிப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், நூலாசிரியர் அவரின் தந்தையான கவிஞர் ஏ. யூ.எம்.ஏ. கரீம் அவர்களின் நினைவுகளை நூலாசிரியர் கவிதைகளில் பதிவு செய்திருப்பதுடன், ஆன்மீகப் பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார். பெண்களின் வாழ்வியல் பிரச்சினைகளை இலக்கியமாக்கும் படைப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது சமூக மாற்றத்திற்கான நம்பிக்கையூட்டும் அறிகுறி என்றும் அவர் தெரிவித்தார்.

‘இரண்டாம் விசுவாமித்திரன்’ பெயரின் பின்னணி; நூலாசிரியருடனான இலக்கியத் தொடர்பு

தலைமையுரையாற்றிய கலாபூஷணம் ஏ. பீர்முகம்மது, ‘இரண்டாம் விசுவாமித்திரன்’ என்ற பெயர் தனக்கு ஏற்பட்ட பின்னணியை விளக்கினார்.

இஸ்லாமிய இலக்கியத்தில் ‘விசுவாமாணை’ என்ற பெரிய காவியத்தை எழுதிய மருதமுனை முஸம்மில் அவர்களின் இலக்கியப் பங்களிப்பையும், கம்பராமாயணத்தில் இடம்பெறும் விசுவாமித்திர முனிவரின் பெயரையும் தொடர்புபடுத்தி, இஸ்லாமிய இலக்கியப் பெயரின் தாக்கத்தினால் தாம் ‘இரண்டாம் விசுவாமித்திரன்’ என்ற பெயரைச் சூட்டிக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

நூலாசிரியர் சித்தி ஜெஸீனா நிஸ்றீனின் தந்தை, மர்ஹும் ஏ. யூ.எம்.ஏ. கரீம் தமது தமிழாசிரியர் என்றும், தான் ஸாஹிரா கல்லுாரியில் பிரதியதிபராகப் பணியாற்றிய காலத்தில் கரீம் அவர்கள் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் பிரதி அதிபாராக இருந்து இடமாற்றம் பெற்று கல்முனை ஸாஹிரா கல்லூரி க்கு சிரேஷ்ட பிரதி அதிபாராக வந்து கடமையாற்றியதாகவும் நினைவுகூர்ந்தார்.

தமிழாசிரியராகவும் கவிஞராகவும் மேடைப் பேச்சாளர் விளங்கிய ஏ. யூ.எம்.ஏ. கரீம் அவர்களின் மறைவுக்குப் பின்னர், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஜெஸீனா நிஸ்றீன் கவிதைத் தொகுப்பொன்றை வெளியிடுவது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இம்முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

‘சங்கையின் ஒலி’ என்ற நூல் தலைப்பின் பின்னணியைத் தேடியபோது, ஏ.யூ.எம்.ஏ. கரீம் அவர்கள் தனது கவிதைகளில் ‘சங்கைதாசன்’ என்ற புனைபெயரைப் பயன்படுத்தியமை நினைவுக்கு வந்ததாகவும், அந்த இலக்கியத் தொடர்பிலிருந்து இப்பெயர் பெறப்பட்டிருக்கலாம் எனத் தாம் கருதுவதாகவும் கூறினார்.

சாஹிரா கல்லூரியில் பணியாற்றிய காலத்திலும் ஓய்வுபெற்ற பின்னரும் தம்மை நினைவுகூர்ந்து மாணவர்கள் எழுதிய பாடல்கள் உள்ளிட்ட நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர், ஆசிரியப் பணியின் சிறப்பையும் மாணவர்களுடனான உறவுகளின் பெறுமதியையும் எடுத்துரைத்தார்.

தந்தையின் ஊக்கமே எழுத்தின் அடித்தளம் – நூலாசிரியர் சித்தி ஜெஸீனா நிஸ்றீன்

ஏற்புரையாற்றிய நூலாசிரியர் ஹாஜியானி சித்தி ஜெஸீனா நிஸ்றீன், தனது முதல் கவிதைத் தொகுப்பான ‘சங்கையின் ஒலி’ உருவான பின்னணியையும், தந்தையார் தமக்கு வழங்கிய இலக்கிய ஊக்கத்தையும் உணர்வுபூர்வமாக எடுத்துரைத்தார்.

தனது தந்தையும் கவிஞருமான கலாபூஷணம் ஏ.யூ..எம். கரீம் அவர்களின் பெயரிலிருந்தும் ‘சங்கை’ என்ற சொல்லிலிருந்தும் உந்துதல் பெற்று, தனது முதல் இலக்கியக் குழந்தைக்கு ‘சங்கையின் ஒலி’ எனப் பெயரிட்டதாகக் குறிப்பிட்டார்.

எழுத்து என்பது தனக்குக் குடும்பச் சொத்தாகவும் இரத்தத்தோடு கலந்த ஒன்றாகவும் அமைந்திருப்பதற்குத் தந்தையார் வழங்கிய ஊக்கமும் இலக்கியப் பின்னணியும் முக்கியக் காரணங்கள் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
முதலில் இறைவனுக்கு நன்றி கூறி எனக்கு உந்து சக்தியாக ஊக்கமொழிகள் கூறி இந்நூல் வடிவம் பெற உற்ற துணையாக நின்ற என் இனிய துணைவர் அல்ஹாஜ் தேசமாணிய ஏ.எம். நிஸ்றீன் முன்னாள் கிராம உத்தியோகத்தர் அவர்களுக்கும் முப்பெரும் செல்வங்களுக்கும் முதற்கண் நன்றி கூறுவது கடமையாகும்
தனது ஆக்கங்கள் சிதைவடைந்து இருநத்தனை ஆவனப்படுத்த இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் ஊக்குவித்த மருதூர் லக்ஸ்டோ மீடியாவின் ஏ.எல். அன்சார் அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றிகளைத் தெரிவித்த அவர், சிறப்புரையாற்றிய பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் மற்றும் முதுநிலை விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக் ஆகியோருக்கும் நன்றிகளை உரித்தாக்கினார்.

நூல் தொடர்பான இரசனைக் குறிப்பை வழங்கிய சித்தி மஷுறா சுஹுர்தீன், வாழ்த்துரை வழங்கிய அஸ்வான் சக்காப் மௌலானா,

வாழ்த்துக் கவிதை வழங்கிய பாசக் கவி பாயிஸ் கரீம்
விழாவிற்குத் தலைமை தாங்கிய ஏ. பீர்முகம்மது மற்றும் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட டாக்டர் ஸகீலா இஸ்ஸதீன் ஆகியோருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
நிகழ்வைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் ரின்சான் மற்றும் ஊடகவியலாளர்கள், விழாவில் கலந்துகொண்ட இலக்கிய ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து ஏற்புரையை நிறைவு செய்தார்.

பெண் படைப்பாற்றலுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் புதிய பங்களிப்பு

‘சங்கையின் ஒலி’ கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு, ஒரு நூலின் அறிமுக நிகழ்வாக மட்டுமன்றி, குடும்ப இலக்கியப் பாரம்பரியத்தின் தொடர்ச்சி, பெண் எழுத்தாளர்களின் படைப்பாற்றல், மனித வாழ்வின் உணர்வுகள் மற்றும் சமூகப் பொறுப்புமிக்க இலக்கியத்தின் அவசியம் ஆகியவற்றை முன்னிறுத்திய நிகழ்வாகவும் அமைந்தது.

தனிப்பட்ட நினைவுகள், குடும்ப உறவுகள், ஆன்மீகம், இயற்கை, பெண்களின் வாழ்வியல் சவால்கள் மற்றும் சமூகப் பார்வைகளை உள்ளடக்கிய கவிதைகள் மூலம் வாசகர்களுடன் உரையாடும் முயற்சியாக இந்நூல் அமைந்துள்ளது.

இலக்கியம் மனிதர்களின் உள்ளங்களைத் தொடுவதுடன், சமூகத்தின் நலனுக்கான சிந்தனைகளையும் உருவாக்க வேண்டும் என்ற கருத்து விழாவில் இடம்பெற்ற உரைகளின் பொதுவான மையமாக அமைந்தது.

இலக்கிய ஆர்வலர்கள், பல்கலைக்கழகக் கல்வியாளர்கள், கலாசாரத் துறைப் பிரதிநிதிகள் மற்றும் சமூகப் பிரமுகர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழா, கிழக்கிலங்கையின் தமிழ் இலக்கியச் சூழலில் பெண் படைப்பாளர்களின் பங்களிப்பை எடுத்துக்காட்டும் நிகழ்வாகச் சிறப்பாக நிறைவுபெற்றது.

















































































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :