“பல்கலைக்கழக வளங்கள் அனைவருக்கும் உரியவை; பொறுப்புடன் பயன்படுத்துங்கள்!” – தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர்



வெளிவாரி வணிகமாணி (B.Com) பட்டப்படிப்பு மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு பல்கலைக்கழகத்தின் முழுமையான ஒத்துழைப்பு; குறுக்கு வழிகளைத் தவிர்த்து நேர்மையுடனும் கடின உழைப்புடனும் பட்டத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தல்!

எம்.வை. அமீர்-
இலங்கையின் உயர் கல்வி வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், பல்கலைக்கழகங்களின் கல்வி வளங்கள் உள்வாரி மாணவர்களுக்கு மாத்திரமன்றி வெளிவாரி மாணவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அந்த வகையில், வெளிவாரி மாணவர்களும் பல்கலைக்கழகத்தின் முக்கிய பங்காளிகளே என தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் தெரிவித்தார்.

வெளிவாரி மாணவர்கள் உள்வாரி மாணவர்களுக்குக் கிடைக்கும் அதே கல்விசார் அடைவுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், அவர்கள் மேலதிக நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணிக்க வேண்டும் என்றும், பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக முறைமைகளைப் பின்பற்றி எவ்வித குறுக்கு வழிகளையும் நாடாமல் நேர்மையுடன் கல்வியைத் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையத்தின் (Centre for External Degrees and Professional Learning – CEDPL) ஏற்பாட்டில், 2023/2024 கல்வியாண்டுக்கான வெளிவாரி பொதுப் பிரிவின் வணிகமாணி (Bachelor of Commerce – B.Com) பட்டப்படிப்பின் ஆரம்ப நிகழ்வும் புதிய மாணவர்களுக்கான அறிமுக மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சியும் 2026 நவம்பர் 01ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் பணியாளர் மேம்பாட்டு நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

“Together for Your Future” (உங்கள் எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்) என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

 தனது உரையில் உபவேந்தர் மேலும் தெரிவிக்கையில்,

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பல்வேறு கல்விசார் சிறப்புகளைக் கொண்ட உயர்கல்வி நிறுவனமாகத் திகழ்வதுடன், அண்மையில் தனது 30ஆவது ஆண்டு நிறைவான முத்து விழாவையும் கொண்டாடியுள்ளது. இவ்வாறான கல்வி நிறுவனத்தின் வளங்களையும் வாய்ப்புகளையும் பரந்தளவிலான மாணவர் சமூகத்திற்குப் பயனளிக்கும் வகையில் பயன்படுத்துவது அவசியமாகும்.

இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. உயர்தரப் பரீட்சையில் தகுதி பெற்றிருந்தாலும், பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இவ்வாறான மாணவர்களுக்கும் உயர்கல்வியைத் தொடர்வதற்கும் பட்டதாரிகளாக உருவாவதற்கும் வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே வெளிவாரிப் பட்டப்படிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் நாட்டின் சில பல்கலைக்கழகங்கள் ஆயிரக்கணக்கான வெளிவாரி மாணவர்களை அனுமதித்ததன் காரணமாகப் பல்வேறு நிர்வாக மற்றும் வள முகாமைத்துவச் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. எனினும், அரசாங்கத்தின் உள்ளடக்கக் கல்விக் கொள்கைக்கு (Inclusive Education Policy) அமைவாக, தகைமை பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது பல்கலைக்கழகங்களின் முக்கிய பொறுப்பாகும்.

பல்கலைக்கழகத்தின் முதலாவது பங்காளிகளாக உள்வாரி மாணவர்கள் விளங்கினாலும், வெளிவாரி மாணவர்களும் அதன் கல்விசார் சமூகத்தின் முக்கிய அங்கத்தவர்களே. எனவே, பல்கலைக்கழக வளங்கள் மற்றும் வசதிகளை அவர்களும் உரிய முறையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்றார்.

உள்வாரி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ச்சியாகக் கல்வி கற்கும் சூழலைப் பெற்றிருக்கின்றனர். ஆனால், வெளிவாரி மாணவர்கள் தமது தொழில், குடும்பம் மற்றும் ஏனைய சமூகப் பொறுப்புகளுக்கு மத்தியில் கல்வியைத் தொடர வேண்டிய நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், உள்வாரி மாணவர்களுக்குக் கிடைக்கும் அதே கல்வி வெளியீடுகளையும் (Programme Outcomes), அறிவையும் திறன்களையும் வெளிவாரி மாணவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், அவர்கள் மேலதிக நேரத்தையும் முயற்சியையும் செலவிட வேண்டியது அவசியமாகும்.

கல்வி என்பது விரிவுரைகளில் பங்கேற்பதுடன் மாத்திரம் முடிவடைவதில்லை. சுயகற்றல், பாடநூல்களை வாசித்தல், ஒப்படைகள், பயிற்சிகள் மற்றும் தொடர்ச்சியான கல்விசார் ஈடுபாடு ஆகியவற்றின் மூலமே எதிர்பார்க்கப்படும் கல்வி அடைவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைத் தகைமைகள் கட்டமைப்பின் (Sri Lanka Qualifications Framework – SLQF) அடிப்படையில் பல்கலைக்கழகக் கற்கைநெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, ஒவ்வொரு கிரெடிட்டிற்கும் ஒதுக்கப்பட்டுள்ள கற்பித்தல் மற்றும் சுயகற்றல் நேரங்களை மாணவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

உதாரணமாக, மூன்று கிரெடிட்களைக் கொண்ட ஒரு பாடநெறிக்காக சுமார் 150 நொதிய மணித்தியாலங்களை (Notional Hours) மாணவர்கள் செலவிட வேண்டியிருக்கும் என அவர் விளக்கினார்.

எனவே, கிரெடிட் முறைமை என்பது வெறுமனே பாடநெறியின் மதிப்பீட்டு அலகு அல்ல. அதற்குரிய கற்றல் நேரம், சுயகற்றல் மற்றும் கல்விசார் ஈடுபாடு ஆகியவற்றையும் உள்ளடக்கியது என்பதை மாணவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.

பல்கலைக்கழகத்தின் சொத்துக்கள், உபகரணங்கள், விரிவுரைக் கூடங்கள் மற்றும் ஏனைய கற்றல் வசதிகள் அனைத்தும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

அவற்றைப் பயன்படுத்தும் ஒவ்வொரு மாணவரும் உரிய பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, விரிவுரைக் கூடங்களையும் ஏனைய பொதுவசதிகளையும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

தற்போதைய மாணவர்கள் பயன்படுத்தும் வளங்களை எதிர்காலத்தில் இணைந்துகொள்ளவுள்ள மாணவர்களும் பயன்படுத்த வேண்டியிருப்பதால், அவற்றைச் சேதப்படுத்தாமல் பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும் என உபவேந்தர் வலியுறுத்தினார்.

பல்கலைக்கழகக் கல்வியில் பரீட்சை ஒழுங்குமுறைகளையும் ஒழுக்க விதிகளையும் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானதாகும்.

பரீட்சை மண்டபங்களில் கண்காணிப்பாளர்கள் மற்றும் பரிசோதகர்களின் அறிவுறுத்தல்களை மாணவர்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும். பரீட்சை முறைகேடுகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் குறுக்கு வழிகளில் வெற்றிபெற முயற்சிப்பது மாணவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கக்கூடும்.

இவ்வாறான தவறுகளில் ஈடுபட்டு பின்னர் அறியாமையைக் காரணமாகக் கூறி பாதிக்கப்படும் நிலைக்கு மாணவர்கள் செல்லக்கூடாது. பல்கலைக்கழகத்தின் ஒழுக்க விதிகள் மற்றும் தண்டனை அட்டவணைகளுக்கு அமைவாக முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளை மாணவர்கள் அறிந்துகொள்வதும் அவசியமாகும். பல்கலைக்கழகத்தின் உயர் கல்விசார் தீர்மானங்களை எடுக்கும் அமைப்பாக செனட் (Senate) விளங்குவதுடன், நிர்வாகத் தீர்மானங்களை மேற்கொள்ளும் அமைப்பாகப் பல்கலைக்கழகச் சபை (Council) செயற்படுகின்றது. இவற்றின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான அடிப்படை அறிவு மாணவர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையமான CEDPL கடந்த காலங்களில் பல்வேறு புதிய கற்கைநெறிகளை அறிமுகப்படுத்தி, வெளிவாரிக் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தி வருவதாக உபவேந்தர் பாராட்டினார்.

குறிப்பாக, நிலையத்தின் தற்போதைய பணிப்பாளர் பேராசிரியர் எம்.சி.ஏ. நாசர், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.எச். நபார் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் அர்ப்பணிப்பான பங்களிப்புடன் வெளிவாரிக் கல்வி நடவடிக்கைகள் மேலும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன், வெளிவாரிக் கல்வி நிர்வாக நடவடிக்கைகளைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் முழுமையான தன்னியக்கமயமாக்கலுக்கு (Automation) உட்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது மாணவர்களுக்கான சேவைகளை மேலும் வினைத்திறனுடனும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் வழங்குவதற்கு உதவும் என அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக, “Together for Your Future” என்ற தொனிப்பொருளை நினைவுபடுத்திய உபவேந்தர், மாணவர்கள் தமது இலட்சியங்களை அடைவதற்காகப் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக முறைமைகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும், கடின உழைப்பு, நேர்மை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் தமது பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

நிகழ்வில் வரவேற்புரையாற்றிய CEDPL பணிப்பாளர் பேராசிரியர் எம்.சி.ஏ. நாசர், வெளிவாரிப் பட்டப்படிப்புகள் என்பது பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர முடியாத அல்லது அதற்கான வாய்ப்பை இழந்தவர்களுக்கும் பட்டதாரிகளாக உருவாகும் வாய்ப்பை வழங்கும் முக்கியமான கல்வித் திட்டம் எனக் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகத்திற்கு உள்வாரி அனுமதி கிடைக்காத நிலையிலும், தமது விடாமுயற்சியால் வெளிவாரிப் பட்டப்படிப்பில் இணைந்துள்ள மாணவர்களை அவர் அன்புடன் வரவேற்றார்.

வெளிவாரி மாணவர்களில் பலர் தொழில், குடும்பப் பொறுப்புகள், பொருளாதாரச் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளுக்கு மத்தியில் கல்வியைத் தொடர்வதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய சவால்களை வெற்றிகொள்ள நேர முகாமைத்துவம் மிகவும் அவசியமானது என்றார்.

தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், தனது 51ஆவது வயதில் திறந்த பல்கலைக்கழகத்தில் இணைந்து, நான்கு ஆண்டுகளில் சட்டமாணி (LL.B) பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்காகத் தினசரி நேரத்தைத் திட்டமிட்டு நிர்வகித்ததாகத் தெரிவித்தார். வயது அல்லது தற்போதைய சூழ்நிலைகள் கல்வி இலட்சியங்களுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும் என்றும் குறிப்பிட்டார்.

கல்வியின் மகத்துவத்தை விளக்குவதற்காகப் புனித அல்குர்ஆன் மற்றும் பகவத் கீதை ஆகியவற்றிலிருந்தும் அவர் மேற்கோள்களை முன்வைத்தார்.

புனித அல்குர்ஆனின் ஸூரத்துஸ் ஸுமர் 39:9 வசனத்தில், “அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?” என்ற கருத்து வலியுறுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், அறிவைப் பெறுவது மனிதனை உயர்த்துவதுடன், நற்பண்புகளையும் ஒழுக்கத்தையும் வளர்க்க வேண்டும் என்றார்.

அதேபோன்று, பகவத் கீதையின் நான்காவது அத்தியாயம், 38ஆவது சுலோகத்தில் அறிவைப் போன்ற தூய்மையானது உலகில் வேறொன்றுமில்லை என்ற கருத்து எடுத்துரைக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

எனவே, கல்வி என்பது வெறுமனே பட்டம் பெறுவதற்கான பயணமாக அமையாமல், மனிதனை அறிவிலும் பண்பாட்டிலும் ஒழுக்கத்திலும் உயர்த்தும் செயல்முறையாக அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

உள்வாரி, வெளிவாரி என்ற வேறுபாடுகளைக் கடந்து, ஒழுக்கத்துடனும் அறநெறியுடனும் கல்வி கற்கும் ஒவ்வொருவரும் தமது பெற்றோருக்கும், பாடசாலைக்கும், பல்கலைக்கழகத்திற்கும் பெருமை சேர்ப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பீடம், கலை மற்றும் கலாசார பீடம், முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடம் உள்ளிட்ட பீடங்களின் ஊடாக வெளிவாரிப் பட்டப்படிப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும், உபவேந்தரின் வழிகாட்டலின் கீழ் பீடாதிபதிகள் மற்றும் நிர்வாகத்தினர் வெளிவாரி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்றும் உறுதியளித்தார்.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, இப்பீடம் ஆரம்பிக்கப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், CEDPL ஊடாக கடந்த 23 ஆண்டுகளாக வெளிவாரிப் பட்டப்படிப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

2023/2024 கல்வியாண்டுக்கான வணிகமாணி பட்டப்படிப்பில் இணைந்துள்ள புதிய மாணவர்கள், இப்பீடத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்பில் இணையும் 15ஆவது தொகுதியினர் எனவும் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடம் பல்வேறு துறைசார் பட்டப்படிப்புகளை வழங்கி வருகின்றது. இதில் நான்கு வருட சிறப்புப் பட்டப்படிப்புகளான BBA, B.Com மற்றும் சந்தைப்படுத்தல், கணக்கியல், நிதி, தகவல் தொழில்நுட்பம், மனிதவள முகாமைத்துவம் உள்ளிட்ட துறைசார் கற்கைநெறிகளும் உள்ளடங்குகின்றன.

மேலும், மூன்று வருட வெளிவாரிப் பட்டப்படிப்புகளும் முன்னெடுக்கப்படுகின்றன. உள்வாரி மற்றும் வெளிவாரி மாணவர்களுக்கான பட்டங்களும் பரீட்சைகளும் பொதுவான கல்வித் தரநிலைகளுக்கு அமைவாகவே இடம்பெறுவதாக அவர் விளக்கினார்.

வெளிவாரி மாணவர்களின் சுயகற்றலை இலகுபடுத்தும் நோக்கில், 90 கிரெடிட் புள்ளிகளைக் கொண்ட மூன்று வருடக் கற்கைநெறிக்காக 32 பாடநெறி கையேடுகள் (Course Manuals) பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி மாணவர்கள் தமது சுயகற்றலைத் திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாலும், மாணவர்கள் தமது சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் பரீட்சைகளில் சித்தியடைந்து பட்டங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.

வணிகமாணி பட்டப்படிப்பின் நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எல்.எம். அயூப்கான் உரையாற்றுகையில், மாணவர்களின் கல்விப் பின்னணிகள் மற்றும் அனுபவங்கள் வேறுபட்டிருந்தாலும், தமது எதிர்காலத்திற்காகக் கல்வியில் முதலீடு செய்ய அவர்கள் எடுத்துள்ள தீர்மானம் பாராட்டுக்குரியது என்றார்.

வணிகமாணிப் பட்டப்படிப்பானது கணக்கியல், நிதி, முகாமைத்துவம், பொருளாதாரம், சந்தைப்படுத்தல் மற்றும் வணிக நிர்வாகம் போன்ற துறைகளில் வலுவான அடித்தளத்தை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய வணிகச் சூழல் தொழில்நுட்ப மாற்றங்களால் வேகமாகப் பரிணமித்து வருவதால், செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் வங்கிச் சேவைகள் மற்றும் மின்னணு வணிகம் (E-Commerce) போன்ற புதிய துறைகள் உருவாக்கும் வாய்ப்புகளையும் சவால்களையும் மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

பட்டப்படிப்பின் போது பாட அறிவுடன் மட்டுப்படாமல், நடைமுறைத் திறன்கள், தொடர்பாடல் திறன், ஆய்வுசார் சிந்தனை மற்றும் டிஜிட்டல் திறன்களையும் வளர்த்துக்கொள்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், பரீட்சைக் காலம் நெருங்கும் வரை காத்திருக்காமல் ஆரம்பத்திலிருந்தே கற்றலைத் திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும். பல்கலைக்கழகம் வழங்கும் பாடநெறி வளங்கள், பரீட்சை வழிகாட்டல்கள் மற்றும் கற்றல் முகாமைத்துவ முறைமைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கல்விசார் சிரமங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உரிய அதிகாரிகளையும் விரிவுரையாளர்களையும் தொடர்புகொண்டு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

வாழ்க்கையில் எதையும் சாதிப்பதற்கு ஒருபோதும் காலம் கடந்துவிடுவதில்லை. தற்போதைய சூழ்நிலைகள் எதிர்கால இலட்சியங்களுக்குத் தடையாக அமையக்கூடாது. கடின உழைப்பும் நேர முகாமைத்துவமும் அர்ப்பணிப்பும் ஒருவரை வெற்றியாளராக மாற்றுவதுடன், அவரது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வின் இரண்டாவது அமர்வில், புதிய மாணவர்களுக்கான விரிவான அறிமுகம் மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சி இடம்பெற்றது.

இதன்போது, வணிகமாணி பட்டப்படிப்பின் கற்கைநெறிக் கட்டமைப்பு மற்றும் பாடத்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களை நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எல்.எம். அயூப்கான் வழங்கினார்.

பரீட்சை நடத்தும் நடைமுறைகள் தொடர்பாக நிதித்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும் பதிவுப் பிரிவு மற்றும் பரீட்சைகள் பிரதி பணிப்பாளருமான ஏ.எல். சரிபுதீன் விளக்கமளித்தார்.

கற்றல் வளங்களைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து முகாமைத்துவத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும் கற்றல் வளங்கள் பிரதி பணிப்பாளருமான கலாநிதி சரீனா உம்மா கபூர் வழிகாட்டினார்.

கருத்தரங்குகளை நடத்தும் முறைமை மற்றும் அதனுடன் தொடர்புடைய கல்விசார் விடயங்கள் குறித்து பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பிரதி பணிப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம்.ஐ.எம். றியாத் விளக்கமளித்தார்.

நிர்வாக நடைமுறைகள் தொடர்பான விளக்கங்களை CEDPL சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.எச். நபார் வழங்கியதுடன், கற்றல் முகாமைத்துவ முறைமை (Learning Management System – LMS) தொடர்பான அறிமுகமும் நடைமுறைப் பயிற்சியும் Moodle ஒருங்கிணைப்பாளர் ஏ.ஜே.எம். ஹஸ்மியினால் முன்னெடுக்கப்பட்டன.

இதன் மூலம் மாணவர்கள் தமது பாடநெறிக் கட்டமைப்பு, பரீட்சை நடைமுறைகள், கற்றல் வளங்கள், கருத்தரங்குகள் மற்றும் இணையவழிக் கற்றல் வசதிகள் தொடர்பான தெளிவான புரிதலைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் CEDPL பணிப்பாளர் பேராசிரியர் எம்.சி.ஏ. நாசர் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம். அயூப்கான், கணக்கியல் மற்றும் நிதித் துறையின் தலைவரும் வணிகமாணி பட்டப்படிப்பு கற்கைநெறிச் சபையின் தலைவருமான எம்.ஏ.சி.என். ஷபானா ஆகியோர் உரையாற்றினர். நன்றியுரையை CEDPL சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.எச். நபார் நிகழ்த்தினார்.

வெளிவாரிக் கல்வி வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்துவதோடு, பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு நவீன கற்றல் வளங்களையும் வழிகாட்டல்களையும் வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, புதிய வணிகமாணி மாணவர்களின் பல்கலைக்கழகக் கல்விப் பயணத்திற்கான முக்கிய ஆரம்பமாக அமைந்தது.




















 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :