ஆராய்ச்சி, புத்தாக்கம், நிலையான எதிர்காலம்: தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் ஆய்வரங்கு!



இறுதியாண்டு மாணவர்களின் 29 ஆய்வுச் சுருக்கங்கள் வெளியீடு; சிறந்த 2% உலக ஆராய்ச்சியாளர்களுள் இடம்பெற்ற கலாநிதி அஜித் தம்பூவுக்குப் பாராட்டு

எம்.வை. அமீர்-

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Research Colloquium – 2026 ஆராய்ச்சி ஆய்வரங்கு, “Research | Innovation | Sustainable Future” (ஆராய்ச்சி | புத்தாக்கம் | நிலையான எதிர்காலம்) என்ற தொனிப்பொருளில் 2026.10.26 ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிவில் பொறியியல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பொறியியல் துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை வெளிப்படுத்துதல், மாணவர்களின் புத்தாக்கத் திறன்களை ஊக்குவித்தல், ஆராய்ச்சிகளை நடைமுறைத் தேவைகளுடன் இணைத்தல் மற்றும் பல்கலைக்கழகத்திற்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களை முன்னிறுத்தி இவ்வாய்வரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி அஜ்மல் ஹினாஸ் வரவேற்புரையை நிகழ்த்தியதுடன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடாதிபதி பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம் சிறப்புரையாற்றினார். நிகழ்வின் செயலாளர் பொறியியலாளர் எஸ்.ஜே. ஜெஸ்மின் நன்றியுரையை நிகழ்த்தினார்.

நிகழ்வின்போது பீடாதிபதிகளான பேராசிரியர் எம்.எம். பாஸில், பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல் மற்றும் ஆர்.கே. அகமட் றிபாய் காரியப்பர் மற்றும் நூலகர் எம்.எம். றிபாவுத்தீன் உள்ளிட்டோருடன் திணைக்களங்களின் தலைவர்கள் பேராசிரியர்கள் அழைக்கப்பட்டார், மாணவர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.

பீடாதிபதி தமது உரையில், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தின் முக்கியத்துவம், பொறியியல் கல்வியின் வளர்ச்சி, மாணவர்களின் ஆய்வுத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் தொழில்துறையுடனான கூட்டிணைப்பின் அவசியம் ஆகிய விடயங்களை வலியுறுத்தினார்.

சிவில் பொறியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஜித் தம்பூ, 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான உலகின் சிறந்த 2% ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றமை தொடர்பில் பேராசிரியர் ஹலீம் தனது மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

இச்சாதனை பொறியியல் பீடத்திற்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் பெருமை சேர்க்கும் முக்கியமான அடைவாகும் எனக் குறிப்பிட்ட அவர், ஆராய்ச்சித் துறையில் கல்வியாளர்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் முயற்சிகள் பல்கலைக்கழகத்தின் கல்விசார் நற்பெயரையும் சர்வதேச அங்கீகாரத்தையும் மேம்படுத்த உதவுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு மற்றும் கல்விசார் வளர்ச்சி குறித்தும் பீடாதிபதி விளக்கமளித்தார். ஒலுவில் பிரதான வளாகம் சுமார் 220 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதுடன், சம்மாந்துறை மற்றும் மல்வத்தை வளாகங்களிலும் பல்கலைக்கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனக் குறிப்பிட்டார்.

2012 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆரம்பிக்கப்பட்ட பொறியியல் பீடம், சிவில் பொறியியல், இயந்திரவியல் பொறியியல், மின்சார மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், பல்துறைக் கற்கைகள் ஆகிய ஐந்து துறைகளின் ஊடாக மாணவர்களுக்குப் பொறியியல் கல்வியை வழங்கி வருகின்றது.

இத்துறைகளின் ஊடாக நவீன தொழில்நுட்ப அறிவையும் நடைமுறைத் திறன்களையும் கொண்ட பட்டதாரிகளை உருவாக்குவதுடன், நாட்டின் அபிவிருத்தித் தேவைகளுக்குப் பங்களிக்கக்கூடிய பொறியியல் வல்லுநர்களை உருவாக்குவதிலும் பீடம் கவனம் செலுத்தி வருகின்றது.

ஆய்வரங்கின் பிரதான அம்சமாக இறுதியாண்டு பொறியியல் மாணவர்களின் ஆய்வுத் திட்டக் கண்காட்சி இடம்பெற்றது. அழைக்கப்பட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் நடுவர் குழுவினர் மாணவர்களின் ஆய்வுகளைப் பார்வையிட்டு மதிப்பீடு செய்தனர்.

நான்கு ஆண்டு பட்டப்படிப்பின் போது மாணவர்கள் பெற்றுக்கொண்ட கல்விசார் அறிவு, தொழில்நுட்பத் திறன், பிரச்சினைகளைப் பகுப்பாய்வு செய்யும் ஆற்றல் மற்றும் நடைமுறைச் சவால்களுக்குப் புத்தாக்கமான தீர்வுகளை முன்வைக்கும் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளமாக இக்கண்காட்சி அமைந்திருந்தது.

பொதுவாக இரண்டு முதல் மூன்று மாணவர்கள் கொண்ட குழுக்களாக இணைந்து, இரண்டு செமஸ்டர்கள் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் இறுதியாண்டு ஆய்வுத் திட்டங்கள், மாணவர்களின் சுயாதீன சிந்தனை, குழுப்பணி, தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் ஆராய்ச்சி அணுகுமுறைகளை மதிப்பிடுவதற்கான முக்கிய வாய்ப்பாக அமைகின்றன.

இவ்வாறான ஆய்வுகள் மாணவர்களைப் பட்டப்படிப்பு மதிப்பீட்டிற்குத் தயார்படுத்துவதுடன், எதிர்காலத்தில் தொழில்துறை மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களுக்குத் தயாரானவர்களாகவும் உருவாக்குகின்றன.

ஆய்வரங்கின் மற்றுமொரு முக்கிய அம்சமாக, தொழில்துறை ஒத்துழைப்பாளர்களின் பங்கேற்புடன் பொறியியல் பணிமனை பார்வையிடும் நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பொறியியல் பீடத்தின் கல்வியாளர்களுக்கும் தொழில்துறைப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான வட்டமேசைக் கலந்துரையாடலும் நடைபெற்றது.

தொழில்துறையின் தற்போதைய தேவைகள், எதிர்காலப் பொறியியல் சவால்கள், பட்டதாரிகளிடம் எதிர்பார்க்கப்படும் தொழில்முறைத் திறன்கள் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகளை நடைமுறைப் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் போன்ற விடயங்களில் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கு இந்நிகழ்வு களமமைத்தது.

பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்படும் ஆய்வுத் தீர்வுகள் தொழில்துறையின் தேவைகளுடன் இணைக்கப்படும்போது, புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு, உற்பத்தித்திறன் மேம்பாடு மற்றும் நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஆகியவற்றில் பயனுள்ள முன்னேற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதும் இத்தகைய முயற்சிகளின் முக்கியத்துவமாகும்.

மாணவர்களின் ஆராய்ச்சி முயற்சிகளை ஆவணப்படுத்தி அவற்றைப் பரந்த கல்விச் சமூகத்திற்கும் தொழில்துறையினருக்கும் அறிமுகப்படுத்தும் நோக்கில், இறுதியாண்டு மாணவர்களின் 29 ஆய்வுச் சுருக்கங்கள் அடங்கிய புத்தகம் மற்றும் ஆய்வுச் சுவரொட்டிகள் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டன.

இவ்வெளியீடுகள் மாணவர்களின் ஆய்வுப் பணிகளைப் பதிவு செய்வதுடன், அவர்களது கண்டுபிடிப்புகள், ஆய்வு அணுகுமுறைகள் மற்றும் முன்மொழியப்படும் தொழில்நுட்பத் தீர்வுகளைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதற்கும் வாய்ப்பளிக்கின்றன.

நவீன உலகம் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திசார் சவால்களுக்கு நிலையான தீர்வுகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியும் புத்தாக்கமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், பல்கலைக்கழகங்கள் அறிவைப் போதிக்கும் நிலையங்களாக மட்டுமன்றி, புதிய அறிவை உருவாக்கி அதனைச் சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தும் ஆராய்ச்சி மையங்களாகவும் திகழ வேண்டும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தின் Research Colloquium – 2026 நிகழ்வு, மாணவர்களின் ஆய்வுகளை வெளிப்படுத்துதல், கல்வியாளர்களின் ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் தொழில்துறையுடனான தொடர்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முக்கிய கல்விசார் முன்னெடுப்பாக அமைந்தது.

இத்தகைய ஆய்வரங்குகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதன் மூலம் மாணவர்களிடையே ஆராய்ச்சி ஆர்வத்தை வளர்த்தல், புத்தாக்கச் சிந்தனையை ஊக்குவித்தல், தொழில்நுட்ப அறிவைப் நடைமுறைப் பயன்பாட்டுடன் இணைத்தல் மற்றும் நிலையான அபிவிருத்திக்குப் பங்களிக்கும் புதிய தீர்வுகளை உருவாக்குதல் ஆகிய இலக்குகளை வலுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.





































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :