கல்முனையில் புனரமைக்கப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகத்தின் புதிய நிர்வாகக் கட்டிடம் கல்முனை பிராந்திய நிறைவேற்று பொறியியலாளர் இசட்.ஏ.எம். அஷ்மிர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (24) இடம்பெற்ற நிகழ்வின்போது திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் பிராந்திய வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட அலுவலகப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் எச். எச். என். ஏ. ஹெட்டியாராச்சி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட அலுவலகத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (RM&M) பொறியியலாளர் ஆர். எம். பி. ரத்நாயக்க கௌரவ அதிதியாகவும், கிழக்கு–அக்கரைப்பற்று மாகாணப் பணிப்பாளர் பொறியியலாளர் எம். பி. அலியார் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இதில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், பொறியியலாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புனரமைக்கப்பட்ட அலுவலக வளாகம் பிராந்திய வீதி அபிவிருத்திப் பணிகளைச் சிறந்த முறையில் முன்னெடுப்பதற்குத் தேவையான நவீன நிர்வாகச் சூழலை ஏற்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் பணிச் சூழலை மேம்படுத்துவதுடன், வீதி அபிவிருத்தித் திட்டங்களின் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்முனை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளின் வீதி உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றிவரும் நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகத்தின் வசதிகள் மேம்படுத்தப்பட்டிருப்பது, பிராந்திய வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்நிகழ்வின்போது பிரதம அதிதி பொறியியலாளர் எச். எச். என். ஏ. ஹெட்டியாராச்சி, கௌரவ அதிதி பொறியியலாளர் ஆர். எம். பி. ரத்நாயக்க மற்றும் சிறப்பு அதிதி பொறியியலாளர் எம். பி. அலியார் ஆகியோருக்கு அலுவலக உத்தியோகத்தர்களால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
புதிய அலுவலக வசதிகள் மூலம் நிர்வாகப் பணிகள் மேலும் ஒழுங்குபடுத்தப்பட்டு, கிழக்கு மாகாணத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் வலுப்பெறும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதன் மூலம் பொதுமக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், பிராந்திய வீதி வலையமைப்பைப் பராமரித்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கான நிர்வாக அடித்தளம் வலுப்படுத்தப்பட்டுள்ளது.















0 comments :
Post a Comment