எம்.வை. அமீர்-
கடந்த கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சிப் பயணம், அதன் படைப்பாளர்களின் பங்களிப்புகள், சமூகப் பிரதிபலிப்புகள், பண்பாட்டு அனுபவங்கள், அரசியல் மற்றும் வாழ்வியல் நெருக்கடிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஆவணப்படுத்தும் “கால் நூற்றாண்டுக் கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் (2000–2025)” என்ற முக்கியமான இலக்கியத் தொகுப்பு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் 2026 செப்டெம்பர் 23ஆம் திகதி நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழா, கலை கலாசார பீடத்தின் மொழித் துறையுடன் இணைந்து “நன்னூல்” மற்றும் “முல்லை பதிப்பகம்” ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் முன்னிலையிலும், மொழித் துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி ஏ.எப்.எம். அஷ்ரப் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வியாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய விமர்சகர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
114 சிறுகதைகள் – இரண்டு தொகுதிகளில் 25 ஆண்டுகால இலக்கியப் பதிவு
2000 முதல் 2025 வரையான 25 ஆண்டுகாலப் பகுதியை மையமாகக் கொண்டு இக்களஞ்சியம் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 114 சிறுகதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் படைப்பாளர்களின் சிறுகதைகள் ஒரே தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
இத்தொகுப்பில் முன்னுரை, ஆய்வுரை, அணிந்துரைகள், பதிப்புரை உள்ளிட்ட பல்வேறு இலக்கியப் பார்வைகளும் இடம்பெற்றுள்ளன. 2000–2025 காலப்பகுதியில் சிறுகதை இலக்கியத்தில் ஏற்பட்ட பொருளடக்க மாற்றங்கள், கதை சொல்லும் உத்திகளின் மாற்றங்கள் மற்றும் மொழிநடை மாற்றங்கள் ஆகியவற்றையும் இந்நூல் அடையாளப்படுத்துகிறது.
முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல், சமூகப் பிரச்சினைகள், சமய நெறி, பிரதேச மொழிநடை, மனித உறவுகள் மற்றும் பல்வேறு சமூக அனுபவங்கள் இச்சிறுகதைகளின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு
நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய மொழித் துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி ஏ.எப்.எம். அஷ்ரப், இத்தொகுப்பில் 2000 முதல் 2025 வரையான காலப்பகுதியில் வெளிவந்த அனைத்து சிறுகதைகளும் இடம்பெறவில்லை என்றும், அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளே தொகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த முஸ்லிம் படைப்பாளர்களின் படைப்புகள் இடம்பெற்றிருப்பது இத்தொகுப்பின் குறிப்பிடத்தக்க அம்சம் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 2000ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியிலும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துக்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கிய பல படைப்பாளர்கள் இருந்துள்ள நிலையில், 1950கள் முதல் 2000ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உருவான முக்கியமான சிறுகதைகளையும் எதிர்காலத்தில் தனித்தொகுப்புகளாக ஆவணப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இலக்கிய ஆவணப்படுத்தலில் கலை கலாசார பீடத்தின் பங்களிப்பு
வாழ்த்துரை வழங்கிய தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிப் பயணத்தைப் பதிவு செய்யும் இத்தகைய ஆவணப்படுத்தல் முயற்சிகள் தமிழ் மொழி மற்றும் இலக்கிய ஆய்வுகளுக்கு முக்கிய பங்களிப்பை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் உருவான இலக்கியப் படைப்புகளைத் தொகுத்து ஆவணப்படுத்துவதன் மூலம் எதிர்கால ஆய்வுகளுக்குப் பயனுள்ள ஆதாரங்களை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் உருவான சிறுகதைகளை ஒரே களஞ்சியமாகத் தொகுப்பதன் மூலம் அந்தக் காலத்தின் சமூக, பண்பாட்டு மற்றும் மனித வாழ்வியல் அனுபவங்களை இலக்கியத்தின் ஊடாக ஆராயும் வாய்ப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமகால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதையின் மாற்றங்களைப் பதிவு செய்யும் களஞ்சியம்
நூல் அறிமுகவுரையை நிகழ்த்திய சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ், கடந்த 25 ஆண்டுகளில் சிறுகதை இலக்கியத்தில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள படைப்புகள் வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
பொருளடக்க மாற்றங்கள், கதை சொல்லும் உத்திகளில் ஏற்பட்ட மாற்றங்கள், மொழிநடை மாற்றங்கள் உள்ளிட்ட பல பரிமாணங்களை இத்தொகுப்பு அடையாளம் காணச் செய்கிறது. முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல், சமூகப் பிரச்சினைகள், சமய நெறி, பிரதேச மொழிநடை மற்றும் பல்வேறு சமூக அனுபவங்களும் கதைகளில் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, அந்தக் காலப்பகுதியில் வெளிவந்த சஞ்சிகைகள் தொடர்பான பதிவுகளும் இடம்பெற்றுள்ளமை எதிர்கால ஆய்வுகளுக்கு உதவக்கூடியதாக அமையும் என அவர் தெரிவித்தார்.
“இஸ்லாமியத் தமிழ் சிறுகதை என்றால் என்ன?” – உமா வரதராஜனின் விரிவான ஆய்வுரை
நிகழ்வின் முக்கியமான அறிவுசார் அம்சமாக பிரபல எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான உமா வரதராஜன் நிகழ்த்திய விரிவான ஆய்வுரை அமைந்தது.
“இஸ்லாமியத் தமிழ் சிறுகதை” எனக் குறிப்பிடும்போது அது இஸ்லாமிய மதத்தைப் பற்றிப் பேசும் கதையா, முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய கதையா அல்லது இஸ்லாமிய வாழ்வுணர்வுக்குள் இருந்து பிறக்கும் கதையா என்ற அடிப்படைக் கேள்வியை அவர் முன்வைத்தார்.
ஒரு படைப்பில் முஸ்லிம் பாத்திரம் இடம்பெறுவதாலோ அல்லது முஸ்லிம்களின் வாழ்விடம் இடம்பெறுவதாலோ மாத்திரம் அது இஸ்லாமியத் தமிழ் இலக்கியமாகிவிடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, தமிழ்நாடு, இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்புகளை ஒரே தொகுப்பில் இணைத்திருப்பது இந்நூலின் முக்கிய அம்சம் எனவும் அவர் தெரிவித்தார்.
வரலாற்றுப் பின்னணியும் இலக்கியத்தின் பரந்த பொருளும்
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைத்த உமா வரதராஜன், அதன் தொடக்கத்தை பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காண முடிவதாகக் குறிப்பிட்டார். “பல் சந்தமாலை”, “ஆயிரம் மசாலா”, “மிஹ்ராஜ் மாலை”, “சீறாப்புராணம்” போன்ற படைப்புகள் அதன் வளர்ச்சியில் முக்கிய இடம் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் தனித்துவம் மதத்தைப் புகழ்வதில் மட்டும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல், மத நம்பிக்கைகள், குடும்ப அமைப்பு, உறவுமுறைகள், திருமண மரபுகள், மதக்கல்வி மற்றும் பண்டிகைகள் போன்ற அனுபவங்களும் படைப்புகளில் பிரதிபலிப்பதாகக் கூறினார்.
மேலும், மதம் மற்றும் தனிமனித சுதந்திரம், மரபுவாதம் மற்றும் நவீன சிந்தனை, குடும்ப அமைப்பு மற்றும் தனிமனித விருப்பங்கள், ஆண்–பெண் ஏற்றத்தாழ்வுகள், மதக்கோட்பாடுகள் மற்றும் மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கிடையிலான முரண்பாடுகளும் கதைகளில் வெளிப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
114 கதைகளில் வெளிப்படும் பன்முகமான மனித வாழ்க்கை
இக்களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ள 114 கதைகளும் ஒரே பாணியில் அமைந்தவை அல்ல எனக் குறிப்பிட்ட உமா வரதராஜன், கற்பனாவாதம் நிறைந்த கதைகளிலிருந்து யதார்த்தத்துக்கு மிக நெருக்கமான கதைகள் வரை பல்வேறு படைப்புகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
வறுமையில் வாழ்பவர்கள், வறுமையிலும் தன்மானத்தைப் பேணுபவர்கள், பிற இனத்தவரை நேசிக்கும் மனிதநேயப் பண்புடையவர்கள், இனக்குரோதத்தின் கொடூரத்தை எதிர்கொள்பவர்கள், பொருளாதார காரணங்களால் இடம்பெயர்ந்தவர்கள், யுத்தத்தினால் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டவர்கள் எனப் பல்வேறு சமூகப் பின்னணியுடைய மனிதர்கள் இக்கதைகளில் இடம்பெறுகின்றனர்.
பூடகமாகக் கூறுதல், உருவகம், உரையாடல் மூலம் கதையை நகர்த்துதல், மொழியின் புதிய எல்லைகளைத் தொடுதல் மற்றும் சம்பிரதாயமான சிறுகதை வடிவத்திலிருந்து வேறுபட்ட உத்திகளைப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு கதை சொல்லல் முறைகளும் தொகுப்பில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கைச் சிறுகதைகளில் உள்நாட்டுப் போரின் நிழல்
இலங்கை மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்புகளில் உள்ளடக்க ரீதியாக வேறுபாடுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்ட உமா வரதராஜன், இலங்கையின் கடந்த கால் நூற்றாண்டு சிறுகதைப் படைப்புகளில் உள்நாட்டுப் போரின் தாக்கம் பெருமளவில் வெளிப்படுவதாகத் தெரிவித்தார்.
இத்தொகுப்பிலுள்ள இலங்கைச் சிறுகதைகளிலும் இந்தப் பின்னணி காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
முல்லை முஸ்ரிபாவின் “துயருருதல்”, அம்ரிதா ஏ.எம்.ன் “புலங்கள்”, ஓட்டமாவடி அரபாத்தின் “ரயில்வே ஸ்டேஷன்”, எம். அப்துல் றஸாக்கின் “நிழல்களின் வடு”, சபீர் ஹாபிஸின் “வேதனை ஊட்டும் அறிக்கை”, எஸ்.எல்.எம். ஹனீபாவின் “மச்சி”, இளைய அப்துல்லாவின் “நிராகரிக்கப்பட்டவன்”, எம்.கே.எம். ஷக்கீப்பின் “மூன்றாவது இனம்”, பகிமா ஜஹானின் “கொரில்லா”, ஜே.எம். ஜெஸாரின் “கருநிழலில் கரைந்து”, எஸ். நளீமின் “ஆறாவது பாங்கு”, ஆர்.எம். நௌஷாத்தின் “மீழ்த்தகவு”, கேதாந்தியின் “நயிமாக்களின் பெருமூச்சுகள்” உள்ளிட்ட 13 கதைகளில் போரின் நிழல் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
பெண்களின் வாழ்வியலும் முக்கிய கருப்பொருளாக
நான்கு நாடுகளின் கதைகளையும் இணைக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக பெண்கள் மீதான பரிவுணர்வும் அக்கறையும் காணப்படுவதாக உமா வரதராஜன் தெரிவித்தார்.
வறுமையினால் வயதான செல்வந்தரின் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்ட பெண்கள், நோயுற்ற கணவனைப் பராமரித்து வாழ்பவர்கள், குடும்பத்தில் வேலைக்காரியைப் போன்று நடத்தப்படுபவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்ற கணவர்களை எதிர்பார்த்து தனிமையில் வாழ்பவர்கள், கணவனால் கைவிடப்பட்ட பின்னரும் மன உறுதியுடன் வாழ்பவர்கள் எனப் பல்வேறு பெண்களின் அனுபவங்கள் கதைகளில் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, பெண்கள் துயரத்தில் சிக்கியவர்களாக மட்டுமன்றி, குடும்பத்தின் அச்சாணியாகவும் தன்னம்பிக்கையுடன் வாழும் மனிதர்களாகவும் சில கதைகளில் சித்தரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பிடத்தக்க படைப்புகள் மற்றும் தொகுப்பின் விடுபாடுகள்
114 கதைகளில் தம்மை நீண்ட நேரம் தாக்கம் ஏற்படுத்திய சில படைப்புகளையும் உமா வரதராஜன் சுட்டிக்காட்டினார். இன்குலாப்பின் “செடிக்கும் கொஞ்சம் பூக்கள்”, மதுரை அனீஸின் “ம. குட்டி”, குளைச்சல் யூசுப்பின் “ஒரு ரமளான் இரவு”, நசீமா பர்வீனின் “ஜமீலா தாத்தா”, ரபீக் ராஜாவின் “மைவட்டங்கள்”, எஸ். ஆர்ஷியாவின் “உப்புக்குழி”, ஜிப்ரி ஹாசனின் “ஒத்தியைக்கான இடம்”, ஏ. நஸ்புள்ளாவின் “சோக்ரே”, லரீனா ஏ. ஹக்கின் “தஜ்ஜாலின் சொர்க்கம்” உள்ளிட்ட படைப்புகளை அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, இலங்கையைச் சேர்ந்த 39 எழுத்தாளர்களின் கதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருந்தாலும், கடந்த கால் நூற்றாண்டில் கவனம் பெற்ற சில படைப்பாளர்கள் இடம்பெறாதிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எம். நௌஷத், சப்னாஷ் காசிம், பைசல், உமையாழ், ஷர்மிலா செய்யித், மாஜிதா, அனார் உள்ளிட்ட சில படைப்பாளர்களும் இடம்பெற்றிருந்தால் ஈழத்து சிறுகதை இலக்கியத்தின் பரந்த வீச்சை மேலும் புரிந்துகொள்ள முடிந்திருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், நூலில் காணப்படும் சில எழுத்துப்பிழைகள், வாக்கியப் பிழைகள் மற்றும் பந்தி அமைப்புப் பிழைகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஒரு சமூகத்தின் கால் நூற்றாண்டு நினைவகம்”
தமது ஆய்வுரையின் இறுதியில், “இஸ்லாமியத் தமிழ் சிறுகதை என்பது என்ன?” என்ற ஆரம்பக் கேள்விக்கான விடை இத்தொகுப்பை முழுமையாக வாசித்த பின்னர் ஓரளவு தெளிவாகிறது என உமா வரதராஜன் தெரிவித்தார்.
இஸ்லாமியத் தமிழ் சிறுகதை என்பது மதத்தை மாத்திரம் பேசும் கதை அல்ல என்றும், ஒரு சமூகத்தின் வாழ்வுணர்வு, நினைவு, நம்பிக்கை, முரண்பாடு, துயரம், மகிழ்ச்சி ஆகியவை தமிழ்க் கதையாக உருமாறும் இடமே அதன் முக்கியமான அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த வகையில், இக்களஞ்சியம் கடந்த கால் நூற்றாண்டின் சிறுகதைகளை மட்டும் சேகரித்துத் தரவில்லை; அந்தக் கதைகளுக்குள் ஒரு சமூகம் எவ்வாறு வாழ்ந்தது என்பதையும் பதிவு செய்ய முயன்றுள்ளது. எனவே, இது வெறுமனே ஒரு சிறுகதைக் களஞ்சியம் அல்ல; “ஒரு சமூகத்தின் கால் நூற்றாண்டு கால நினைவகம்” என அவர் குறிப்பிட்டார்.
“இது ஒரு முக்கியமான இலக்கிய ஆவணம்” – முகமது பிலால்
நூலின் முதற் பிரதியைப் பெற்றுக்கொண்ட எழுத்தாளரும் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவருமான முகமது பிலால், இந்தக் களஞ்சியம் தற்போதைய காலச் சூழலில் ஒரு சாதனை என்றும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் இளம் படைப்பாளர்களின் சிறுகதைகள் ஒரே தொகுப்பில் இடம்பெற்றிருப்பது இதன் சிறப்பம்சம் என்றும் தெரிவித்தார்.
இலங்கை, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த படைப்பாளர்களின் கதைகள் ஒரே களஞ்சியத்தில் இடம்பெற்றிருப்பதன் மூலம் வெவ்வேறு நிலப்பரப்புகளையும் தலைமுறைகளையும் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளை ஒரே தளத்தில் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு கால் நூற்றாண்டுக் காலகட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு இத்தகைய இலக்கியக் களஞ்சியங்களைத் தொடர்ந்து ஆவணப்படுத்த வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
சிறுகதை மனித வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்த இலக்கிய வடிவம் எனக் குறிப்பிட்ட அவர், கதைகளின் ஊடாக முன்வைக்கப்படும் கருத்துகள் வாசகர்களின் உள்ளத்திலும் நினைவிலும் ஆழமாகப் பதியும் என்றார்.
மேலும், தமிழ் மொழி இலங்கை, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படைப்பாளர்களை ஒருங்கிணைக்கும் பொதுத் தளமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய படைப்புகள் சிங்களம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அரசியல், சமூக நெருக்கடிகளையும் பதிவு செய்யும் இலக்கியம்
கதை எழுத்தாளர்கள் சார்பில் கருத்துரை வழங்கிய எழுத்தாளரும் விமர்சகருமான ஜிப்ரிஹாஸன், கால் நூற்றாண்டு காலப்பகுதியில் பரந்த அளவில் எழுதப்பட்ட சிறுகதைகளை ஒரே தொகுப்பில் ஒன்றிணைத்திருப்பது முக்கியமான இலக்கியச் செயற்பாடு எனக் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு, இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வாழும் முஸ்லிம் சமூகங்களின் பண்பாட்டு அடையாளங்கள், வாழ்வியல் அனுபவங்கள், மரபுகள் மற்றும் தொன்மங்கள் கதைகளில் வெளிப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கைச் சூழலைப் பிரதிபலிக்கும் கதைகளில் அரசியல், அரசியல் நெருக்கடிகள் மற்றும் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள் அதிகளவில் பேசப்படுவதாகவும், தமிழகச் சூழலில் சமூக ஏற்றத்தாழ்வுகள், சமூக உறவுகள் மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் உள்ளிட்ட கருப்பொருள்கள் அதிகம் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஓட்டமாவடி அரபாத்தின் “ரயில்வே ஸ்டேஷன்”, முல்லை முஸ்ரிபாவின் “துயருருதல்” போன்ற கதைகளை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட அவர், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட அனுபவம் உள்ளிட்ட அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகள் பல கதைகளில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். அப்துல் றஸாக்கின் “நிழல்களின் வடு” சிறுகதையையும் அவர் குறிப்பிட்டுப் பாராட்டினார்.
அதேவேளை, சமகால இஸ்லாமியத் தமிழ் சிறுகதைகளில் அன்றாடப் பிரச்சினைகள், அரசியல் சார்ந்த சிக்கல்கள், குடும்ப உறவுகள் மற்றும் சமூக நெருக்கடிகள் முக்கிய கருப்பொருள்களாகக் காணப்படுவதாகவும், தொன்மங்கள், வரலாற்றுப் பார்வைகள் மற்றும் தத்துவார்த்த நோக்குகள் ஒப்பீட்டளவில் குறைவாக ஊடுருவியிருப்பதாகவும் அவர் அவதானித்தார்.
சிறுகதைகள் – சமூக நினைவுகளையும் வரலாற்றையும் தாங்கிய ஆவணங்கள்
வாசகர்கள் சார்பில் கருத்துரை வழங்கிய சட்டத்தரணியும் எழுத்தாளருமான சர்ஜூன் ஜமால்தீன், சிறுகதைகள் வெறுமனே கற்பனைப் படைப்புகள் அல்ல; ஒரு சமூகத்தின் அனுபவங்கள், வலிகள், நினைவுகள் மற்றும் வரலாற்றுச் சூழல்களைப் பதிவு செய்யும் ஆவணங்களாகவும் அமைகின்றன என வலியுறுத்தினார்.
இதற்கு எடுத்துக்காட்டாக “நயிமாக்களின் பெருமூச்சுகள்” என்ற சிறுகதையை அவர் சுட்டிக்காட்டினார். 1990ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட வரலாற்றுச் சம்பவத்தின் பின்னணியில் அமைந்துள்ள இக்கதை, முஸ்லிம் குடும்பங்கள் எதிர்கொண்ட பிரிவு, இழப்பு, அநாதரவுணர்வு மற்றும் மனவேதனையை பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார்.
தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்துடனான முஸ்லிம் சமூகத்தின் வரலாற்று நெருக்கத்தையும் அவர் சுட்டிக்காட்டியதுடன், தமிழ்–முஸ்லிம் மக்களுக்கிடையே காணப்பட்ட மனிதநேய உறவுகளின் பல்வேறு பரிமாணங்களும் வரலாற்றுச் சம்பவங்களின் ஊடாகப் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஒரு சமூகத்தின் மாற்றங்களையும் நினைவுகளையும் தாங்கிய தொகுப்பு
இக்களஞ்சியத்திலுள்ள சிறுகதைகள் தனிமனித வாழ்க்கை, குடும்ப உறவுகள், பெண்களின் அனுபவங்கள், சமூக மாற்றங்கள், அரசியல் நெருக்கடிகள், இடம்பெயர்வு மற்றும் வரலாற்று நினைவுகள் எனப் பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கியுள்ளன.
குறிப்பாக, இலங்கைச் சிறுகதைகளில் உள்நாட்டுப் போரின் தாக்கமும் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் போன்ற சமூக அனுபவங்களும் இலக்கியத்தின் ஊடாகப் பதிவாகியுள்ளமை, இக்கதைகள் எதிர்காலத்தில் வரலாற்று மற்றும் சமூக ஆய்வுகளுக்கும் பயன்படக்கூடிய ஆவணங்களாக அமையக்கூடியதைக் காட்டுகிறது.
சுமார் ஓராண்டு கால உழைப்பில் உருவான களஞ்சியம்
நூலின் தொகுப்பாளரும் வெளியீட்டாளருமான மணலி அப்துல்காதர், இக்களஞ்சியத்தை உருவாக்கும் பணியில் சுமார் ஓராண்டு காலம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டதாகத் தெரிவித்தார்.
சிறுகதைகளைத் தொடர்ந்து வாசித்தபோது அவை வெறுமனே இலக்கியப் படைப்புகளாகத் தோன்றவில்லை என்றும், ஒரு நீண்ட காலப்பகுதியில் வாழ்ந்த ஒரு சமூகத்தின் வாழ்வியல், அனுபவங்கள், வலிகள், சிந்தனைகள் மற்றும் பண்பாட்டு பதிவுகளாகவே அவற்றைப் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியப் பெருங்கடலை மையமாகக் கொண்டு வர்த்தகம் மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முஸ்லிம் சமூகத்தினர் பின்னர் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்ற பின்னரும் மேற்கொண்ட கலாசார மற்றும் பண்பாட்டுப் பணிகளைப் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இத்தொகுப்புப் பணிக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.
எதிர்காலப் பதிப்புகளுக்கும் வாய்ப்பு
2000–2025 காலப்பகுதியில் வெளிவந்த சிறுகதைகளை ஆவணப்படுத்துவதே ஆரம்ப நோக்கமாக இருந்தபோதிலும், தொகுப்புப் பணியின்போது 2000ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் உருவான சில முக்கியமான படைப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக மணலி அப்துல்காதர் தெரிவித்தார்.
அதேவேளை, 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் எழுதப்பட்டு இத்தொகுப்பில் இடம்பெறாத சில படைப்புகள் மற்றும் படைப்பாளர்களையும் எதிர்காலத்தில் உள்ளடக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், அவ்வாறான கதைகள் மூன்றாவது பதிப்பில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இஸ்லாமியத் தமிழ் சிறுகதை” – மத எல்லையைத் தாண்டிய இலக்கியப் பார்வை
இத்தொகுப்பில் இடம்பெறும் படைப்புகளைத் தேர்ந்தெடுக்கும்போது அவை கட்டாயமாக இஸ்லாமிய மதம், மதக் கோட்பாடுகள் அல்லது சமய நெறிகள் குறித்து பேச வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படவில்லை என மணலி அப்துல்காதர் தெரிவித்தார்.
தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வாழ்ந்த முஸ்லிம் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட படைப்புகள் என்பதுடன், அவற்றின் இலக்கியத் தன்மை, சமூக அனுபவம், மனித வாழ்வியல் மற்றும் சிந்தனைப் பரப்பு ஆகியவையே முக்கியமாகக் கருத்திற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கினார்.
சில சிறுகதைகள் குறிப்பிட்ட அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளைப் பதிவு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, “நயிமாக்களின் பெருமூச்சுகள்” போன்ற படைப்புகள் வரலாற்று மற்றும் சமூக வலிகளை இலக்கியத்தின் வழியாகப் பதிவு செய்வதாகவும், “உண்டியல் பாத்தியம்” போன்ற கதைகள் குறிப்பிட்ட சமூகச் செயல்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளை விமர்சன ரீதியில் அணுகுவதாகவும் அவர் தெரிவித்தார்.
உணர்வுபூர்வமான சில படைப்புகளை வெளியிடுவதில் சில சந்தர்ப்பங்களில் தயக்கங்களும் அழுத்தங்களும் எதிர்கொள்ளப்பட்ட போதிலும், சமூகத்தின் பல்வேறு அனுபவங்களைப் பதிவு செய்யும் இலக்கியப் படைப்புகளுக்கு இடமளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொகுப்புப் பணியைத் தொடர்ந்ததாகவும் அவர் கூறினார்.
சிறுகதைப் படைப்பாளர்களுக்கு கௌரவிப்பு
நிகழ்வின் மற்றுமொரு முக்கிய அம்சமாக, இக்களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ள சிறுகதை எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
கடந்த 25 ஆண்டுகளாக ஈழத் தமிழ்ச் சிறுகதைத் துறைக்கு தமது படைப்புகளின் ஊடாகப் பங்களிப்பு செய்த எழுத்தாளர்களை ஒரே மேடையில் நினைவுகூர்ந்து கௌரவித்தமை, தமிழ் இலக்கியப் படைப்பாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
நூலின் தொகுப்பாளரும் வெளியீட்டாளருமான மணலி அப்துல்காதர் ஏற்புரையாற்றியதுடன், களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ள கதாசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
நிகழ்வில் பங்கேற்ற இலக்கிய ஆளுமைகள்
நிகழ்வில் மொழித் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக் வரவேற்புரையாற்றினார்.
சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் நூல் அறிமுகவுரையை நிகழ்த்தியதுடன், முல்லை முஸ்ரிபா வெளியீட்டுரையை வழங்கினார்.
நூலின் முதற் பிரதியை எழுத்தாளரும் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவருமான முகமது பிலால் பெற்றுக்கொண்டார்.
நூல் தொடர்பான விரிவான ஆய்வுரையை பிரபல எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான உமா வரதராஜன் வழங்கினார்.
கதை எழுத்தாளர்கள் சார்பில் எழுத்தாளரும் விமர்சகருமான ஜிப்ரிஹாஸன் கருத்துரை வழங்கியதுடன், வாசகர்கள் சார்பில் சட்டத்தரணியும் எழுத்தாளருமான சர்ஜூன் ஜமால்தீன் கருத்துரையாற்றினார்.
எதிர்காலத் தலைமுறைக்கான இலக்கியச் செல்வம்
தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தில் தமிழ் மொழி மற்றும் இலக்கியக் கல்விக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் தொடர்ச்சியாகவும் இந்நூல் வெளியீட்டு நிகழ்வு அமைந்தது.
பல்கலைக்கழகத்தின் தமிழ் பாடத்திட்டத்தில் தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சி, இலங்கையின் தமிழ் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு இலக்கியத் துறைகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஈழத் தமிழ்ச் சிறுகதையின் 25 ஆண்டுகாலப் பயணத்தை ஒருங்கிணைத்துள்ள இந்நூல் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு முக்கியமான துணை வளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த கால் நூற்றாண்டில் ஈழத் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் பல்வேறு சமூக, பண்பாட்டு மற்றும் மனித வாழ்வியல் அனுபவங்களை உள்வாங்கி வளர்ச்சியடைந்துள்ள நிலையில், அந்தப் படைப்புப் பயணத்தை ஒரே தொகுப்பில் பதிவு செய்வதன் மூலம் ஒரு தலைமுறையின் இலக்கியச் சிந்தனைகளையும் சமூக அனுபவங்களையும் எதிர்கால தலைமுறைகளிடம் எடுத்துச் செல்லும் பணியை இக்களஞ்சியம் மேற்கொள்கிறது.
வரலாற்றுப் பதிவாக நிலைக்கும் வெளியீடு
மொத்தத்தில், “கால் நூற்றாண்டுக் கால ஈழத்தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் (2000–2025)” என்பது 114 சிறுகதைகளை ஒருங்கிணைத்த இலக்கியத் தொகுப்பு என்ற வரையறைக்குள் மட்டும் அடங்கிவிடாத ஒரு ஆவணமாக இந்நிகழ்வில் முன்வைக்கப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட 25 ஆண்டுகாலப் பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், சமூக மாற்றங்கள், குடும்ப உறவுகள், பெண்களின் அனுபவங்கள், பண்பாட்டு நினைவுகள், அரசியல் நெருக்கடிகள், இடம்பெயர்வு, போர் அனுபவங்கள், மனித வலிகள், நம்பிக்கைகள் மற்றும் சிந்தனை மாற்றங்கள் எவ்வாறு சிறுகதை இலக்கியமாக உருமாறின என்பதற்கான பதிவாகவும் இக்களஞ்சியம் அமைந்துள்ளது.
தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த முஸ்லிம் படைப்பாளர்களின் படைப்புகளை ஒரே இலக்கியத் தளத்தில் இணைத்துள்ள இத்தொகுப்பு, தமிழ் மொழியின் ஊடாக பல்வேறு நிலப்பரப்புகளையும் சமூக அனுபவங்களையும் இணைக்கும் முயற்சியாகவும் அமைந்துள்ளது.
எனவே, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2026 செப்டெம்பர் 23ஆம் திகதி இடம்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழா, ஒரு நூலை வெளியிடும் சாதாரண நிகழ்வாக மட்டுமன்றி, 2000–2025 காலப்பகுதியின் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைப் படைப்புப் பயணத்தை ஒருங்கிணைத்து, அதன் படைப்பாளர்களை கௌரவித்து, ஒரு சமூகத்தின் இலக்கிய நினைவுகளை எதிர்காலத்துக்காகப் பாதுகாக்கும் குறிப்பிடத்தக்க வரலாற்று–இலக்கிய நிகழ்வாகவும் அமைந்தது.
இக்களஞ்சியம் எதிர்கால ஆய்வாளர்கள், மாணவர்கள், இலக்கியவாதிகள் மற்றும் வாசகர்களுக்கு கடந்த கால் நூற்றாண்டின் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் இலக்கிய வெளிப்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கான முக்கிய ஆதாரமாக அமையும் என்பதுடன், இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கால் நூற்றாண்டுக் காலப்பகுதியையும் ஆவணப்படுத்தும் புதிய இலக்கியத் தொகுப்புகளுக்கான அடித்தளமாகவும் அமையக்கூடியதாகும்.

0 comments :
Post a Comment