“ஏழு மாதங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தால் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளேன்; உண்மையான விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார்”
அனோஜன் தொடர்பிலும் கருத்துக்கள் முவைப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன் தொடர்புபடுத்தும் வகையில் அண்மைய நாட்களில் சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் தொடர்பில் பல்வேறு விளக்கங்களை வழங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், தாம் ஏற்கனவே நீண்டகால விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தால் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று (19.09.2026) நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் சில ஊடகங்கள் தம்மையும் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான குற்றவாளியாகக் குறிப்பிடப்படும் சஹ்ரான் ஹாஷிமையும் தொடர்புபடுத்தும் வகையில் செய்திகள் வெளியிட்டு வருவதாகவும், அவை பின்னர் சமூக ஊடகங்கள் ஊடாகவும் பரவியுள்ளதாகவும் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இதனால் தமது கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அதற்கான உண்மை நிலையைத் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே அவசரமாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம் எனக் குறிப்பிட்ட றிஷாட் பதியுதீன், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான பயங்கரவாத நடவடிக்கைக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் தொடர்பில்லை என வலியுறுத்தினார்.
அந்தத் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் வர்த்தகர்கள், வைத்தியர்கள், அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தாக்குதலுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணவும், உண்மையான குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுக்கொடுக்கவும் முஸ்லிம் சமூகம் மற்றும் அதன் பல்வேறு அமைப்புகள் விசாரணை நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் கூறினார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது தாமும் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டதாகத் தெரிவித்த றிஷாட் பதியுதீன், தமது கைது நடவடிக்கை தமது குடும்பத்திற்கும் குறிப்பாக பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தமது மகளுக்கும் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார்.
நள்ளிரவில் நூற்றுக்கணக்கான பொலிஸாரால் தாம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் தமது தொலைபேசிகள், புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட தகவல்கள் நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏழு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக தம்மை விடுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதாகவும், தாம் நிரபராதி என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அண்மையில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை சில ஊடகங்கள் வேறு விதமாக செய்தியாக்கியுள்ளதாக றிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டினார்.
தம்மை ஏழு மாதங்கள் விசாரணை செய்த பின்னர் நிரபராதி என விடுவிக்க சட்டமா அதிபர் திணைக்களமே பரிந்துரை செய்திருந்த நிலையில், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் புலனாய்வுத் துறையிடம் தெரிவித்ததாகக் கூறப்படும் தகவல் “further report” ஒன்றில் பதிவாகியிருந்ததாகவும், அந்தத் தகவல் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டதை சில ஊடகங்கள் தமக்குச் சாதகமான வகையில் வேறு திசையில் எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோன்று, வர்த்தகர் அலாவுதீனுடன் தமக்கிருந்த தொடர்பை அடிப்படையாகக் கொண்டு சஹ்ரானுடன் தொடர்பு ஏற்பட்டதாக Additional Solicitor General நீதிமன்றத்தில் தெரிவித்ததாக வெளியாகிய செய்தியையும் அவர் மறுத்தார்.
“அவர் அவ்வாறு சொல்லவில்லை. அவரது முழுமையான விளக்கத்தை நான் பார்த்துள்ளேன். அவர் கூறிய விடயம் வேறு; என்னைப் பற்றிக் கூறப்படும் விடயம் வேறு” என றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தம்மீது அரசியல் ரீதியான அனுசரணை வழங்கியதாக மட்டுமே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீண்டகால விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தம்மை மீண்டும் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்த முயற்சிப்பது சதியாக இருக்கலாம் எனத் தாம் கருதுவதாக றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
எனினும், தாம் எந்தவித அச்சத்துக்கும் உள்ளாகவில்லை என்றும், ஈஸ்டர் தாக்குதலுடன் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது தமக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.
தாம் நீண்டகாலமாக பயங்கரவாதத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை நேரடியாக அனுபவித்த ஒருவர் என்ற வகையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க தமக்கு எந்தத் தேவையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய குற்றச்சாட்டுகளின் பின்னணியில் யார் இருக்கலாம் என்பது தொடர்பில் ஊகத்தின் அடிப்படையில் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு, பாராளுமன்றத் தெரிவுக்குழு உள்ளிட்ட பல்வேறு விசாரணைகள் இடம்பெற்றுள்ளதுடன், தற்போது விசேட விசாரணைகளும் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நடவடிக்கைகளின் ஊடாக உண்மையான நிலை வெளிவரும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தற்போதைய விசாரணைகளுக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
உண்மையான குற்றவாளிகள் யார், தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பவை சட்டரீதியான விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட வேண்டும் என்றும், எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லாமல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான விடயமாக இருந்ததாகக் குறிப்பிட்ட றிஷாட் பதியுதீன், கத்தோலிக்க சமூகமும் முஸ்லிம் சமூகமும் உண்மையான தீர்ப்பொன்றை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
விசாரணைகள் எந்தவிதமான தலையீடுகளுமின்றி முன்னெடுக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறினார்.
வர்த்தகர் அலாவுதீனையும் தம்மையும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் ஒரே தொடர்பில் இணைத்துக் கூறப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் பதிலளித்த அவர், நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களைத் தாம் பார்த்துள்ளதாகவும், எந்த இடத்திலும் அலாவுதீனையும் தம்மையும் ஒரே தொடர்பில் இணைத்து குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
“அவரை ஒரு விடயத்துக்காகக் கூறியிருக்கிறார்கள்; என்னை ஒரு விடயத்துக்காகக் கூறியிருக்கிறார்கள்” என அவர் குறிப்பிட்டார்.
இலங்கை பல இனங்களும் பல மதங்களும் வாழும் நாடு எனக் குறிப்பிட்ட றிஷாட் பதியுதீன், இனவாதம் மற்றும் மதவாதம் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.
அனைவரும் சமமாக வாழக்கூடிய சட்டப்பூர்வ சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அரசாங்கம் மக்களுக்காக மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஆதரவு வழங்குவோம் என்றும், அரசாங்கம் தனது கடமைகளில் தவறும் சந்தர்ப்பங்களில் மக்களுக்காக குரல் கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
“அனோஜனின் குடும்பத்துக்கு உதவ பல கட்சிகளுடன் நடவடிக்கை”
இதே ஊடக சந்திப்பில், சவூதியில் மரண தண்டனை தொடர்பாக செய்திகளில் வெளியாகியுள்ள இலங்கைத் தமிழ் இளைஞர் அனோஜன் தொடர்பான விடயத்தையும் றிஷாட் பதியுதீன் முன்வைத்தார்.
அனோஜனின் குடும்பத்தினரைத் தாம் நேரில் சந்தித்து பேசியதாகவும், அவரது தாயார் தமது மகனை காப்பாற்ற உதவுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தம்முடன் தொடர்பு கொண்டு ஆலோசித்ததாகவும், இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் அனோஜனின் குடும்பத்துக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் கலந்துரையாடி, ஜனாதிபதியின் ஊடாகவும் சவூதி தூதரகத்தின் ஊடாகவும் சவூதி அரசிடம் கருணை கோரிக்கை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
“நீதித்துறை நியாயமாகச் செயல்பட வேண்டும்”
ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் நீதித்துறை நியாயமாகவும் சுயாதீனமாகவும் செயற்பட வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பு என றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
தம்மைச் சுற்றி தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தொடர்பில் இறுதியான முடிவுகளை ஊகத்தின் அடிப்படையில் வெளியிடாமல், நீதிமன்ற மற்றும் சட்டரீதியான விசாரணைகளின் முடிவுகளை எதிர்பார்க்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதுடன், அதேவேளை குற்றமற்ற எந்தவொரு நபரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படக்கூடாது என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
.png)
0 comments :
Post a Comment