கிராம மட்டத்தில் வறுமையை ஒழிப்பதே ‘பிரஜாசக்தி’யின் இலக்கு – பாராளுமன்ற உறுப்பினர் ஏ. அதம்பாவா



“மக்கள் உதவிகளைப் பெற்று வாழாமல், தங்களுக்கான வருமானத்தைத் தாங்களே உருவாக்க வேண்டும்”

சாய்ந்தமருது 02, 05, 07, 11ஆம் பிரிவுகளில் ரூ.38 இலட்சம் நிதியில் 32 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்

“மக்கள் அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்று வாழும் நிலையில் தொடர்ந்தும் இருக்காமல், வழங்கப்படும் வளங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி தங்களுக்கான வருமானத்தைத் தாங்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும். கிராம மட்டத்தில் வறுமையை ஒழிப்பதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்” என கரையோரப் பிரதேசங்களின் ஒருவங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியல் அமைப்புப் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் அதம்பாவா தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 02, 05, 07 மற்றும் 11ஆம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் ‘பிரஜாசக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட வாழ்வாதார மற்றும் உணவு உற்பத்தி மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிகழ்வு 2026.09.14 ஆம் திகதி சாய்ந்தமருது கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றபோது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிராமிய அபிவிருத்தி அமைச்சின் அனுமதியுடன் ‘Prajashakthi Project Implementation – 2026’ திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. அதம்பாவா கலந்துகொண்டு, பயனாளிகளுக்கான திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.

நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், மக்கள் தமது வாழ்வாதாரத்தை நிலையான முறையில் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், அதற்காக கிராம மட்டத்திலிருந்து பொருளாதார வலுவூட்டல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

“எந்த நாட்டில் வறுமை இருக்கிறதோ, அந்த நாட்டை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல முடியாது. எனவே, அடிமட்டத்தில் – கிராம மட்டத்தில் – வந்து வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்களை நாம் உருவாக்க வேண்டும்” என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.

கடந்த காலங்களில் கோழி, மாடு, ஆடு வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டிருந்தாலும், அவற்றை தற்காலிக உதவிகளாக மட்டுப்படுத்தாமல், மக்களின் நீடித்த வருமானத்தை உறுதிப்படுத்தும் வகையில் பயன்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குடும்பத்தின் அன்றாடச் செலவுகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படாமல், அவற்றை முதலீடாக மாற்றி புதிய வருமானத்தை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே ‘பிரஜாசக்தி’ வேலைத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மக்களின் உண்மையான தேவைகளையும் பிரச்சினைகளையும் கிராம மட்டத்திலேயே அடையாளம் காண்பதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் மக்களுடன் நேரடியாக இணைந்து பணியாற்றக்கூடிய வகையில் ‘பிரஜாசக்தி’ பொறிமுறை முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

வீடு, வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகள் தொடர்பில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவர்களிடமே சென்று கேட்டறிந்து, அவற்றை உரிய மட்டத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என அவர் தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் சென்று அவர்களின் தேவைகளை அடையாளம் கண்டு, அவர்களின் பங்களிப்புடன் அபிவிருத்தியை முன்னெடுக்கும் இந்த அணுகுமுறைதான் உண்மையான மக்கள் மைய ஆட்சிக்கான அடித்தளமாக அமையும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது–02ஆம் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள் மற்றும் உணவு உற்பத்தியில் ஈடுபடுவோருக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 08 பயனாளிகள் பயன்பெறுகின்றனர்.

சாய்ந்தமருது–05ஆம் பிரிவில் வீட்டு அடிப்படையிலான உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.06 இலட்சம் ஒதுக்கப்பட்டு, 04 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

சாய்ந்தமருது–07ஆம் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவு உற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ரூ.10 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 10 பயனாளிகள் பயன்பெறுகின்றனர்.

சாய்ந்தமருது–11ஆம் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவு உற்பத்தி சார்ந்த வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ரூ.12 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 10 பயனாளிகள் பயன்பெறுகின்றனர்.

இதன்படி, நான்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டங்களுக்காக மொத்தம் ரூ.38 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 32 பயனாளிகள் நேரடியாகப் பயனடைகின்றனர்.

குடும்பங்களின் வருமானத்தை அதிகரித்தல், சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், உள்ளூர் உணவு உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் கிராம மட்டத்தில் பொருளாதார வலுவூட்டலை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மக்களை வெறுமனே உதவிகளைப் பெறும் பயனாளிகளாகக் கருதாமல், தமது குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் பொருளாதாரப் பங்களிப்பு செய்யக்கூடிய உற்பத்தியாளர்களாக உருவாக்குவதே இத்தகைய திட்டங்களின் நீண்டகால நோக்கமாக அமைய வேண்டும் என்ற கருத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் தனது உரையில் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :