மண்ணின் வாசத்தைக் கவிதையாக்கிய சோலைக்கிளி! தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கவியரங்கம்



எம். வை. அமீர்-
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் பேரவையின் கீழ் இயங்கும் 'நறுமுகை' கலை இலக்கியக் குழு, தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சிரேஷ்ட கவிஞர் சோலைக்கிளி பங்கேற்ற சிறப்புக் கவியரங்கம் இன்று (20.08.2026) கலை கலாசார பீட கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்களிடையே தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கவிதை மீதான ஆர்வத்தை வளர்ப்பதுடன், இளம் படைப்பாளர்களின் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் இலக்கிய ஈடுபாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வுக்கு நறுமுகை கலை இலக்கிய மேம்பாட்டுக் குழுவின் தலைவர் ஆர். எம். மனாஸ் தலைமை தாங்கியதுடன், அவரது வரவேற்புரையும் தலைமையுரையும் ஆரம்ப நிகழ்வுகளாக இடம்பெற்றன.

இதன்போது மொழித்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக், சிரேஷ்ட கவிஞர் சோலைக்கிளியை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவரது இலக்கியப் பங்களிப்புகள், படைப்புலகப் பயணம் மற்றும் கவிதை மரபு தொடர்பான விரிவான அறிமுகவுரையை வழங்கினார்.

“ஒரு கவிஞனை அவரது கவிதையின் ஊடாகவே அணுக வேண்டும்” எனக் கூறிய எம். அப்துல் றஸாக், சோலைக்கிளியின் கவிதை உலகைப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கவிஞர் சோலைக்கிளியின் புறநிலை அடையாளங்களைக் குறிப்பிட்ட அவர், கவிஞரின் இயற்பெயர் உதுமாலப்பை அத்தீக் என்றும், அவர் கல்முனையைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார். 1980களில் கவிதை எழுதத் தொடங்கிய சோலைக்கிளி, 500க்கும் மேற்பட்ட கவிதைகளையும் 12க்கும் மேற்பட்ட கவிதை நூல்களையும் எழுதியுள்ளார் எனவும் குறிப்பிட்டார். ‘பனியில் மொழி எழுதி’, ‘என்ன செப்பங்கா நீ’, ‘பகல் தண்டவாளத்தில் ரயில்’, ‘பாம்பு நரம்பு மனிதன்’ போன்ற தனித்துவமான தலைப்புகளில் வெளிவந்த அவரது படைப்புகள் தொகுக்கப்பட்டு, ‘அவனம்’ என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கவிதைகளுக்கு அப்பால் சிறுகதைகள், பத்தி எழுத்துகளிலும் சோலைக்கிளி ஈடுபட்டுள்ளார் என்றும், குறிப்பாகக் கிழக்கிலங்கையின் கிராமிய வாழ்வியல் அனுபவங்களைத் தனது பத்தி எழுத்துகளில் பதிவு செய்துள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அண்மைக்காலமாகக் காணொளிகள் மற்றும் சமூக ஊடகங்களின் ஊடாகவும் தனது அனுபவங்களையும் பாரம்பரிய அறிவையும் புதிய தலைமுறையினரிடம் சோலைக்கிளி கொண்டு சேர்த்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

கிழக்கிலங்கையில் ஆழமான வாய்மொழி மற்றும் கவிதை மரபு காணப்படுவதாகக் குறிப்பிட்ட எம். அப்துல் றஸாக், “இப்பிராந்தியத்தில் பலர் கவிதை எழுதுவது இயல்பானதுதான். அனைவரும் கவிஞர்களாக இருப்பதில் ஆச்சரியமில்லை; ஆனால், ஒரு சிறந்த கவிஞராக உருவெடுப்பதுதான் மிகப்பெரிய சவால். அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு தனித்துவமான கவிஞராக உருவெடுத்தவராகச் சோலைக்கிளியைப் பார்க்க முடியும்” எனக் குறிப்பிட்டார்.

சோலைக்கிளியின் கவிதைகளில் காணப்படும் முக்கியமான புதுமைகளில் ஒன்று, கிழக்கிலங்கையின் மண்வழக்குச் சொற்களையும் பிராந்தியப் பேச்சுவழக்குச் சொற்களையும் கவிதை மொழியாக மாற்றியமைத்தமையாகும்.

ஒரு காலத்தில் பிராந்தியப் பேச்சுவழக்குச் சொற்கள் இலக்கியத்திற்குத் தகுதியற்றவை எனக் கருதப்பட்ட நிலையில், அந்த மரபை உடைத்து, மக்கள் அன்றாடம் பயன்படுத்திய சொற்களுக்குக் கவிதையின் ஊடாக உயிரும் இலக்கிய அந்தஸ்தும் வழங்கியவராகச் சோலைக்கிளி விளங்குகிறார் என்றும் அவர் கூறினார்.

“மழைப் பழம்”, “காற்றுக் கட்டி”, “பேய் நெல்லுக் காயவைக்கும் வெயில்”, “பீ உருட்டி வண்டு” போன்ற பிராந்திய வழக்குச் சொற்களையும் சொற்றொடர்களையும் அவர் கவிதைகளில் பயன்படுத்திய விதத்தை எடுத்துக்காட்டிய எம். அப்துல் றஸாக்; முஸ்லிம் வழக்குச் சொற்கள், இந்து வழக்குச் சொற்கள் மற்றும் பிராந்திய மண்வழக்குச் சொற்கள் எனப் பல்வேறு மொழியியல் கூறுகளைச் சோலைக்கிளியின் கவிதைகள் தன்னகத்தே கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே பிராந்திய இலக்கியங்கள் முனைப்புப் பெறுவதில் சோலைக்கிளி முக்கியமான அடையாளமாகத் திகழ்கிறார் என்றும் தெரிவித்தார்.

சோலைக்கிளியின் கவிதைகள் வெறுமனே கற்பனையின் வெளிப்பாடாக இல்லாமல், சமூகத்தின் அவலங்களையும் மக்களின் வாழ்வியல் உண்மைகளையும் பதிவு செய்துள்ளன. கிராம சேவகராகப் பணியாற்றிய காலத்தில், இளைஞர் ஒருவர் கையொப்பமிடத் தெரியாமல் கைநாட்டிட்ட சம்பவத்தைப் பதிவு செய்த அவரது கவிதையை எடுத்துக்காட்டிய அப்துல் றஸாக், கல்வி மற்றும் சமூக அவலங்களைக் கவிதையின் ஊடாக வெளிப்படுத்திய படைப்பாளியாகச் சோலைக்கிளி திகழ்கிறார் என்றார்.

மேலும், சோலைக்கிளியின் கவிதைகளில் ஆழமான படிமங்களும் குறியீடுகளும் காணப்படுவதாக விளக்கமளித்த அவர், கவிதையில் அனைத்தையும் நேரடியாகக் கூறிவிட முடியாது என்றும், ஒரு நல்ல கவிதை வாசகனின் மனதில் காட்சிகளையும் பல்வேறு சிந்தனைகளையும் உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.

சோலைக்கிளி அதிர்ச்சியூட்டும் காட்சிப் படிமங்களைத் தனது கவிதைகளில் கையாண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், யுத்தக் காலத்தைப் பிரதிபலிக்கும் ‘தொப்பி சப்பாத்து சிசு’ கவிதையை இதற்குச் சான்றாகக் குறிப்பிட்டார். குழந்தைகள் தொப்பி மற்றும் சப்பாத்துடன் பிறப்பது போன்றும், தென்னை மரங்களில் தேங்காய்களுக்குப் பதிலாகக் கன்னிவெடிகள் காய்ப்பது போன்றும் உருவாக்கப்பட்டுள்ள படிமங்கள் யுத்தத்தின் கொடூரத்தை அதிர்ச்சியூட்டும் வகையில் வெளிப்படுத்துகின்றன என்றார்.

அதேபோன்று ‘வெல்வெட்டுப் பறவை’, ‘வெயில் மழை புழுதி’ போன்ற கவிதைகளிலும் தனித்துவமான படிமங்களைச் சோலைக்கிளி உருவாக்கியுள்ளார்.

‘வெயில் மழை புழுதி’ கவிதையில் மழை, புழுதி, வெயில் ஆகிய இயற்கைக் கூறுகளுக்கு மனித உணர்வுகளை இணைத்து உருவாக்கப்பட்ட படிமங்கள் சோலைக்கிளியின் கவித்துவ ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.

சோலைக்கிளி குறியீடுகளைக் கையாள்வதிலும் சிறந்து விளங்குவதாகக் குறிப்பிட்ட எம். அப்துல் றஸாக், அவரது கவிதைகளில் வெளிப்படையாகச் சொல்ல முடியாத வாழ்க்கை அனுபவங்களும் சமூக நினைவுகளும் குறியீடுகளின் ஊடாக வெளிப்படுவதாகத் தெரிவித்தார்.

அதேபோன்று, தொன்மங்களைச் சமகால வாழ்வியலோடு இணைத்துக் கவிதையாக்கும் தனித்துவமும் அவரிடம் காணப்படுகிறது. ‘நவீன இலங்காபுரி’ கவிதையில், இராமாயணத் தொன்மத்தைச் சமகால இலங்கையின் சமூக யதார்த்தத்துடன் இணைத்து, பெண்களின் அவலங்களையும் சிறைப்பட்ட வாழ்வையும் கவிதை வழியாக வெளிப்படுத்தியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சோலைக்கிளியின் உவமைகளும் உருவகங்களும் அவரது கவிதைகளுக்குத் தனித்துவமான அழகை வழங்குகின்றன. மேகத்தை ஒரு மூதாட்டியின் தோற்றத்துடன் ஒப்பிடுவது, வானத்தைப் பழைய கோட்டையுடன் ஒப்பிடுவது, பெண்களின் வளர்ச்சியை யாழ்ப்பாண முருங்கையுடன் ஒப்பிடுவது போன்ற அவரது உவமைகள் வாசகர்களின் மனதில் தனித்துவமான காட்சிகளை உருவாக்குகின்றன. அதேபோன்று, சந்திரனையும் இரவு பூத்த வெள்ளிகளையும் ஒருவரது முகத்தில் சுமந்து சிரிப்பதாக உருவகப்படுத்தியிருப்பதும், ‘என் வேப்பமர பொண்டாட்டி’ போன்ற கவிதைகளில் உருவகங்களைப் பயன்படுத்தியிருப்பதும் அவரது படைப்பாற்றலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

சோலைக்கிளியின் கவிதைகளில் காணப்படும் கவித்துவத்தை விளக்கும்போது, ‘நான் ரோஜாவில் ஒரு பூ ஆய்ந்த போது’ என்ற கவிதையை எம். அப்துல் றஸாக் எடுத்துக்காட்டினார். ஒரு ரோஜாப் பூவைப் பறிப்பதனால் ஒரு காதலனின் காதல் பாதிக்கப்படுவது, ஒரு பெண்ணின் புன்னகை பறிக்கப்படுவது, அந்தப் பூத்த முற்றம் சபிப்பது, பூவிலிருந்து பன்னீர் பெறும் சிறுபூச்சியின் வாழ்வு பாதிக்கப்படுவது என ஒரு சிறிய செயலுக்குள் பல்வேறு உயிர்களின் உணர்வுகளையும் இழப்புகளையும் கவிஞர் வெளிப்படுத்தியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். “ஒரு பூ உதிர்ந்தாலும் நொந்துவிடுகின்ற கவித்துவ மனம்தான் கவிஞனுடையது. மனிதர்களை இன, சாதி, அடையாளங்களின் அடிப்படையில் ஒதுக்கும் சூழலில், ஒரு பூ உதிர்வதைக்கூடத் தாங்காத மனிதநேயக் கவித்துவத்தைச் சோலைக்கிளி முன்வைப்பது முக்கியமானது” என்றார்.

நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த்துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எம். ஏ. எம். றமீஸ், கவிஞர் சோலைக்கிளியின் கவிதைப் பங்களிப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். தமிழ் நவீனக் கவிதையின் முன்னோடியாக பாரதியாரையும், அவருக்குப் பின்னர் புதுக்கவிதை மரபை முன்னெடுத்த நா. பிச்சமூர்த்தியையும், ஈழத்துத் தமிழ்க் கவிதையில் மகாகவி நீலாவணனையும் குறிப்பிட்ட அவர், அந்தத் தொடர்ச்சியில் தமிழ் கவிதையின் ஒரு தனித்துவமான கிளையாகக் கவிஞர் சோலைக்கிளியைத் தாம் பார்ப்பதாகத் தெரிவித்தார்.

“ஒரு தமிழ் கவிதையின் கிளையிலேதான் நாங்கள் இன்று ஊஞ்சல் ஆட வந்திருக்கின்றோம்” எனக் குறிப்பிட்ட பேராசிரியர் றமீஸ், சோலைக்கிளியுடன் நேரடியாக உரையாடவும், அவரது கவிதைகள் குறித்துக் கேள்விகளை முன்வைக்கவும் மாணவர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு மிகவும் முக்கியமானது என்றார். கவிஞரின் உரை, கவிதைகள் மற்றும் தங்களுக்குள் எழுகின்ற சந்தேகங்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் கேள்விகளைத் தொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், இக்காலகட்டத்தில் இலக்கியத்திற்கும் சமூக உறவுகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்துச் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் றமீஸ் சுட்டிக்காட்டினார்.

வடக்கு–கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கிடையிலான ஒற்றுமை, அடையாளம் மற்றும் இணைந்து வாழ்தல் தொடர்பான சிந்தனைகள் பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் மீளாய்வு செய்யப்படும் நிலையில், சமூகங்களுக்கிடையே ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, மதித்து, தமக்குள்ளேயே உரையாடலை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார். “நாங்கள் எங்களுக்குள்ளே பேச வேண்டியதும், ஒருவரையொருவர் மதிக்க வேண்டியதும் மிக முக்கியமானது” என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில, கவிஞர் மனாஸ் வாசித்த கவிதையொன்றின் வரிகளை மேற்கோள்காட்டிய பேராசிரியர் றமீஸ், “நட்சத்திரங்களைப் பிரித்துப் பங்கு போடுங்கள்; வானத்தை அளந்து பிரியுங்கள்; கடலை அளந்து பிரியுங்கள்” என்ற கவிதை வரிகளை நினைவுபடுத்தினார்.

வானத்தையும் கடலையும் பிரிக்க முடியாததைப் போலவே மனித உறவுகளையும் செயற்கையாகப் பிரிப்பது சாத்தியமற்றது என்பதை இக்கவிதை உணர்த்துவதாகக் குறிப்பிட்ட அவர், சமூகங்களுக்கிடையிலான உறவு, ஒற்றுமை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் கவிதை செயற்பட வேண்டும் என்றார். இவ்வாறான மனிதநேயச் சிந்தனைகளுக்குக் கவிஞர் சோலைக்கிளி ஓர் உதாரணமாகத் திகழ்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாகக் கிழக்கிலங்கையின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவரான சோலைக்கிளி கலந்துகொண்டு, கவிதை, இலக்கியம் மற்றும் படைப்புலகம் தொடர்பான தனது நீண்டகால அனுபவங்களையும் சிந்தனைகளையும் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

தனது சிறப்புரையில் கவிஞர் சோலைக்கிளி பேசுகையில்:


“என்னை மூத்த கவிஞன் என்று தயவுசெய்து சொல்லாதீர்கள். நான் என்றும் இளைய கவிஞன்தான். கவிஞர்களுக்கு வயது போவதில்லை” எனக் குறிப்பிட்டார். கவிஞர்கள் தங்களது வயதைப் பற்றிச் சிந்திப்பதில்லை என்றும், புதிது புதிதாக இளமையைத் தேடிக்கொண்டிருப்பார்கள் என்றும் குறிப்பிட்ட அவர், சிறுவர்களுடன் கூட்டாளிகளாகவும் மூத்தோர்களுடன் மரியாதையுடனும் பழகுவதே தமது இயல்பு எனத் தெரிவித்தார்.

தனது கவிதைப் பயணம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், தனது பல கவிதைகள் நித்திரையில் பூத்தவை எனக் குறிப்பிட்டதுடன், எழுதுவது தனக்குச் சுவாசிப்பதைப் போன்றது என்றும், உயிர்வாழ்வதற்கே எழுதுதல் அவசியமானதாக மாறிவிட்டது என்றும் தெரிவித்தார். “என்னை யாரும் கவிஞனாக்கவில்லை. நான் ஒரு தான்படுவான் பூக்கன்று. காலம் கொட்டை போட்டு முளைத்த தான்படுவான் பூக்கன்று. நானே எனது சுயம். எனது சுயமே நான்தான்” என அவர் தனது படைப்புலகப் பயணத்தை விளக்கிப் பேசினார்.

தமது பிரதேசத்தின் வாழ்வியல் அனுபவங்களே தனது கவிதைகளின் முக்கிய மூலாதாரம் எனக் குறிப்பிட்ட அவர், ஊரின் கதைகளைக் கேட்டு உள்வாங்கிக்கொண்டதாகவும், அந்த அனுபவங்களே தனது தொழிலான கவிதைக்கு வலுசேர்த்ததாகவும் கூறினார். எங்கள் மண், பசுமை, மக்களின் வாழ்வியல் மற்றும் பிரதேசத்தின் தனித்துவமான பண்பாடுகளைத் தனது கவிதைகளில் பதிவு செய்து வருவதாகக் குறிப்பிட்ட சோலைக்கிளி, “ஒரு கவிஞனின் கடமை தனது மண்ணின் வாசத்தை வேறு இடங்களுக்குச் சுமந்து சென்று காட்டி மகிழ்விப்பதுதான்” எனத் தெரிவித்தார். மேலும், தாம் பிறந்த மண்ணின் மணத்தையும் மக்களின் வாழ்வியலையும் தனது படைப்புகளால் பொதிசெய்து வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

படைப்பாளர்கள் தங்களது சொந்த மண்ணை உற்றுநோக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்திய அவர், அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றிப் பரந்துகிடக்கும் எண்ணற்ற பாடுபொருள்களைக் கவனித்து அவற்றைப் படைப்புகளாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். “வயலில் பொன்னாங்கண்ணி நோண்டுபவள் அதன் பூவை ரசிப்பதில்லை. அந்தப் பூவை ரசிப்பவனே அதை எழுத வேண்டும்” எனக் குறிப்பிட்ட அவர், படைப்பாளி தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை வேறுபட்ட பார்வையுடன் அணுக வேண்டும் என்றார்.

கவிஞராக விரும்புபவர்கள் தங்களுக்குள் இருக்கும் தேவையற்ற தடைகள், போலித்தனங்கள் மற்றும் சுய வரம்புகளை அகற்றி, தங்களைத் தாங்களே செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தான் எவ்வளவு வயது சென்றாலும் தன்னைப் பூப்பறித்து விளையாடும் சிறுவனாகவே நினைத்துக்கொள்வதாகக் குறிப்பிட்ட சோலைக்கிளி, அந்தச் சிறுவன் ஒவ்வொருவருக்குள்ளும் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பான் என்றும் தெரிவித்தார்.

அதிகாலையில் எழுந்து வாழ்க்கையின் ஆழத்தையும் அகலத்தையும் தேடுவது குறித்துத் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், சேவலுடன் தனக்கிருக்கும் உறவை நகைச்சுவையுடன் எடுத்துரைத்தார். “நானும் சேவலும் நல்ல நண்பர்கள்... மொத்தத்தில் நாங்கள் இருவருமே சேவல்கள்” என அவர் கூறியபோது, மாணவர்கள் மத்தியில் சிரிப்பலையும் வரவேற்பும் எழுந்தன. அதிகாலையில் விழிப்பவன் வாழ்க்கையின் ஆழத்தையும் அகலத்தையும் அறிந்துகொள்வான் என்றும், ஒவ்வொரு நாளும் மனிதன் புதிதாகப் பிறப்பதுடன் புதிய சிந்தனைகளும் அவனுடன் பிறக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனக்குக் குரு என்று யாரும் இல்லை என்றும், தானும் எவருக்கும் குரு அல்ல என்றும் தெரிவித்த சோலைக்கிளி, “எனது வாழ்க்கையை எனக்குக் காட்டியது எனது கவிதைகள்தான். நான் முகம் பார்க்கும் கண்ணாடி எனது கவிதை” எனக் கூறினார். தனது கவிதையைப் படிக்கும் ஒருவரின் மனதில் பல கவிதைகள் மலர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், தனது தேகமும் தலைமுடியும்கூடக் கவிதைகளாக அமைய வேண்டும் என விரும்புவதாகவும் அவர் கூறினார்.
சோலைக்கிளியின் உரையைத் தொடர்ந்து கவிதை வாசிப்பு இடம்பெற்றதுடன், மாணவர்களும் தமது கவிதைகள் மற்றும் படைப்புகளை அரங்கேற்றித் தமது இலக்கியத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

மாணவர்களின் படைப்புகளைக் கேட்டறிந்த கவிஞர் சோலைக்கிளி, அவற்றின் தனித்துவம் குறித்துக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதுடன், இளம் படைப்பாளர்கள் தங்களது சொந்தக் குரலை உருவாக்கிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், கவிதை உருவாக்கம், படைப்பாளியின் சமூகப் பொறுப்பு, கவிதையின் மொழிநடை, சமகாலத் தமிழ் இலக்கியத்தின் போக்குகள் மற்றும் இளம் தலைமுறையினரிடையே இலக்கிய ஆர்வத்தை வளர்ப்பதன் அவசியம் தொடர்பாகவும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மாணவர்களின் வினா-விடை அங்கமானது நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தது. மாணவர்கள் கவிதை எழுதுதல், படைப்பாளியாக உருவாகுதல், இலக்கியத்தின் சமூகப் பங்கு மற்றும் தமது படைப்புகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பில் பல்வேறு வினாக்களை முன்வைத்தனர். அவற்றுக்குக் கவிஞர் சோலைக்கிளி அனுபவபூர்வமான விளக்கங்களையும் கருத்துகளையும் வழங்கினார்.

நிகழ்வில் சமூகவியல் துறையின் தலைவர் கலாநிதி எம். றிஸ்வான், பேராசிரியர் எஸ். எம். ஐயூப், அரசியல் விஞ்ஞானத் துறையின் பேராசிரியர் எம். ஏ. எம். பௌசர், இந்து நாகரிகவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் என். சுபராஜ், ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. ஆர். பாத்திமா ஷீபா உள்ளிட்ட கல்வியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அத்துடன், கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், நறுமுகை கலை இலக்கியக் குழு உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கல்விசார் சமூகத்தினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்நிகழ்வு மாணவர்களுக்கும் சிரேஷ்ட இலக்கிய ஆளுமைக்கும் இடையிலான நேரடியான கருத்துப் பரிமாற்றத்திற்கான சிறந்த தளமாக அமைந்ததுடன், மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் மீதான அவர்களது ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தவும் வாய்ப்பளித்தது.

மேலும், இலக்கியம் வெறுமனே ரசனைக்கான கருவியாக மட்டுமன்றி, சமூகங்களுக்கிடையே உரையாடலையும் புரிந்துணர்வையும் உருவாக்கும் சக்தியாகவும் செயற்பட முடியும் என்பதையும் இந்நிகழ்வு வெளிப்படுத்தியது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியச் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கும், புதிய தலைமுறை இளம் படைப்பாளர்களை உருவாக்குவதற்கும் இத்தகைய கவியரங்கங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்பதும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

கவிஞர் சோலைக்கிளியின் உரையின்போது அவர் பகிர்ந்துகொண்ட கவித்துவ வரிகள்:

நான் என்றும்

இளைய கவிஞன்தான்.

கவிஞர்களுக்கு

வயது போவதில்லை.

நாங்கள்

புதிது புதிதாக

இளமையைத் தேடிக்கொண்டிருப்போம்.

சின்னச் சின்னப் பிள்ளைகளுடன்

கூட்டாளிகளாக இருப்போம்;

மூத்தோர்களோடு

மரியாதையாகப் பழகுவோம்.

எனது கவிதைகள் பல

நித்திரையில்தான் பூத்திருக்கின்றன.

எனது கவிதைகள் பலவற்றிற்கும்

தாய்வீடு

நித்திரைதான்.

நான் எப்போதும்

தூங்கிக்கொண்டிருக்கிறேன்;

எப்போதும்

விழித்துக்கொண்டுமிருக்கிறேன்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும்

எழுதிக்கொண்டுமிருக்கிறேன்.

நான் சோற்றை மட்டுமல்ல,

ஊரையே

பிறரிடம் கதை கேட்டு, கேட்டு

கரைத்துக் குடித்திருக்கிறேன்.

அந்தக் கரைத்துக் குடித்த பலன்தான்

என் தொழிலைச் சிறப்பாகச் செய்ய

எனக்கு உதவியிருக்கிறது.

எனது தொழில்

கவிதைதான்.

நான்

எனது ஊரில் வீசுகின்ற

இன்னுமொரு காற்று.

காற்று

பாடம் கற்றுப்

பாடித் திரிவதில்லை.

ஊரைச் சுற்ற

அதற்குப் பாட்டு முளைக்கிறது.

காற்றுக்கும் கவிஞனுக்கும்

வேலை ஒன்றுதான்—

தன் ஊரின் வாசத்தைப்

பிற இடங்களுக்குச் சுமந்து சென்று

காட்டி மகிழ்வது.

நானும்

இந்த வேலையைத்தான் செய்கிறேன்.

நாம்

அந்த விளக்கை நோக்கிச்

செல்லச் செல்ல—

அந்த விளக்கு எது?

அது எங்கு இருக்கிறது?

அதைக் கண்டுபிடிப்பதுதான்

வாழ்க்கைப் போராட்டம்.

இதற்கு

எனது கவிதைகள் உதவுகின்றன.

அந்த விளக்கில்

நிழலாவது

நமக்குக் கிடைக்குமா?

என்று பார்க்கலாமா

என்று ஆசைப்படுகிறேன்.

அதிகாலையில்

நான் எழும்புகிறேன்.

அந்த விளக்கைத் தேடுகிறேன்.

நானும் சேவலும்

நல்ல நண்பர்கள்.

சேவலும்

அந்த விளக்கைத் தேடுகிறது—

கூவி... கூவி...

நான் எழும்பத் தாமதமானால்

சேவல்

தன் சிறகுகளால்

என் தோளில் தட்டி எழுப்புகிறது.

சேவல் எழும்பத் தாமதமானால்

நான்

சேவலை எழுப்புவேன்.

மொத்தத்தில்

நாங்கள் இருவருமே

சேவல்கள்.

எனது கண்ணாடி

எனது வாழ்க்கையை

எனக்குக் காட்டியது

எனது கவிதைகள்தான்.

நான் முகம் பார்க்கும் கண்ணாடி

எனது கவிதை.

இந்தக் கண்ணாடி

ரசம் பறந்துவிடக் கூடாது.

எனது கவிதை

மலர் மலர்களாகப் பூத்துக் குலுங்கும்

ஒரு தோட்டமாக இருக்க வேண்டும்.

என் தேகமும்,

என் தலைமுடியும்

கவிதைகளாகத்தான்

அமைய வேண்டும்.

சாப்பிட்டுவிட்டு

நாக்கில் தொட்டு வைக்கும்

உப்பாகவும்

கவிதை ஆகிப்போனால்

நல்லதுதானே?






























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :