ஆறு தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனளிக்க வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்



எம்.வை. அமீர்-
று தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டிணைவு முயற்சிகள் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அமையுமானால் அதனை வரவேற்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், ஷம்சுதீன் ஆலிம் கலை, கலாசார சமூக அமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் Lacsdo Media Network Sri Lanka தனது 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்திய "திறமைக்கான தேடல் – 2026 Awards Festival" மற்றும் கலை, கலாசார விழா சாய்ந்தமருது கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

பல்துறைக் கலைஞரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான மருதூர் அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உரையாற்றுகையில் மேற்கண்ட கருத்துகளை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆறு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் சந்திப்பு தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும், சந்தேகங்களும் சமூகத்தில் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் எந்த ஒரு விடயத்திலும் ஒன்றிணைந்து செயற்படுவது மக்களின் நலனுக்காக அமையுமானால் அதனை வரவேற்பதே சரியான அணுகுமுறையாகும் என்றார்.

இந்த சந்திப்பின் மூலம் சமூகத்திற்குள் நீண்டகாலமாக இருந்து வரும் பல்வேறு பிரச்சினைகள் ஒரே மேசையில் அமர்ந்து பேசி தீர்க்கப்பட வேண்டும் என்றும், அவை தேர்தல் அரசியலை விட மக்களின் வாழ்வாதாரம், சமூக ஒற்றுமை, தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் மற்றும் சமூக முன்னேற்றம் போன்ற விடயங்களை மையப்படுத்தியதாக அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கட்சித் தலைவர்கள் தாங்களே இது தேர்தலை நோக்கமாகக் கொண்ட கூட்டமல்ல என்றும், சமூக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான கலந்துரையாடலாகும் என்றும் தெளிவுபடுத்தியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அந்த அறிவிப்பை நம்பிக்கை அளிப்பதாகக் கருதுவதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி அரசியல் நிலைப்பாடுகள் இருந்தாலும், பொதுவான மக்களின் பிரச்சினைகளில் ஒருமித்த கருத்துடன் செயற்படுவது காலத்தின் தேவையாகும் என்றும், அவ்வாறான புரிந்துணர்வு முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பலன்களை அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் வலுப்பெறவும், நாட்டின் அமைதி மற்றும் அபிவிருத்திக்கு வழிவகுக்கவும் இந்த ஒன்றிணைவு உதவ வேண்டும் எனத் தெரிவித்த அவர், ஆறு கட்சிகளின் இந்த முயற்சி உண்மையான மக்கள் நல நோக்கத்துடன் வெற்றியடைய இறைவனை வேண்டுவதாகவும் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :