கலை மற்றும் கலாசார செயற்பாடுகள் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முக்கிய கருவியாகும். இன, மத வேறுபாடுகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் பணியில் கலை மன்றங்கள் தொடர்ந்தும் முன்னிலை வகிக்க வேண்டும் என்று அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளரும் சட்டத்தரணியுமான எம்.வை. ராஷிக் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் ஏற்பாடு செய்திருந்த, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் தேசகீர்த்தி ஏ.எல். தௌஃபீக் (JP) அவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் விழாவும் கலை நிகழ்ச்சியும் கடந்த 17ஆம் திகதி நடைபெற்றது.
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.சி.எம். ஜுவைஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றத்தின் போசகர் முக்கலாம் அப்துல் ஸமத் ஆலிம் அப்துல் மஜீத் (மக்கத்தார் ரஹ்) மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் எம்.வை. ராஷிக், "கலை என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சமல்ல; அது சமூக ஒற்றுமையையும் மனிதநேய விழுமியங்களையும் வலுப்படுத்தும் சக்திவாய்ந்த கருவியாகும்" என்று குறிப்பிட்டார்.
மேலும், தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதில் கலை அமைப்புகள் முக்கிய பங்காற்றி வருவதாகவும், அவற்றின் செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது காலத்தின் தேவையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
கலைஞர்களின் திறமைகளை இனங்கண்டு அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதுடன், புதிய கலைஞர்களை உருவாக்குவதற்கான மேடைகளை ஏற்படுத்துவதும் இன்றியமையாத பணியாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கலாசார அமைப்புகள் எதிர்நோக்கும் நிதி மற்றும் நிர்வாகச் சவால்களை ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் சமாளிக்க முடியும் என்றும், அதற்காக அரச அதிகாரிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசுப் பணிகளுக்கு அப்பாற்பட்ட நேரங்களிலும் சமூக மற்றும் கலாசார மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும் என்றும், கலை மற்றும் பண்பாட்டு மரபுகளைப் பாதுகாத்து அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
விசேட உரையாற்றிய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மொழித்துறை விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக், அக்கரைப்பற்றின் கலை, இலக்கிய மற்றும் பண்பாட்டு மரபுகளின் வரலாற்றுப் பெருமையை எடுத்துரைத்ததுடன், அவற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
நிகழ்வின் நிறைவில், தேசகீர்த்தி ஏ.எல். தௌஃபீக் (JP) அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த மூத்த கலைஞர்களால் பொன்னாடை போர்த்தி சிறப்பு கௌரவமும் வழங்கப்பட்டது. அதேபோல், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் அவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இசை, இலக்கிய மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அரங்கேறி, நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்த்தன.









0 comments :
Post a Comment