கல்முனை நூரானியா ஜும்ஆ பள்ளிவாசலின் புதிய குவிமாடம் மற்றும் மினாரா பிரம்மாண்டமாக திறந்து வைப்பு



எம்.வை. அமீர்-
ல்முனை நூரானியா ஜும்ஆ பள்ளிவாசலின் புதிய குவிமாடம் (Dome) மற்றும் மினாரா (Minaret) ஆகியவற்றின் பிரம்மாண்ட திறப்பு விழா இன்று (19.07.2026) பள்ளிவாசலின் தலைவர் எம். எஸ். உதுமா லெப்பை தலைமையில் ஆன்மீக எழுச்சியுடன் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ரஹ்மத் பவுண்டேஷனின் நிறுவனரும் தலைவரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதித் முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் மற்றும் சிறப்பு கௌரவ அதிதியாக கலந்து கொண்ட ஸ்ரீலங்கா யங் விமென் முஸ்லிம் அசோசியேஷன் (YWMA) அமைப்பின் தலைவி பவாஷா தாஹாவும் இணைந்து கொண்டு புதிய குவிமாடம் மற்றும் மினாராவை திறந்து வைத்தார்கள்.

நிகழ்வில் வரவேற்புரையை பள்ளிவாசல் செயலாளர் எம். எஸ். அலி சப்ரி நிகழ்த்தினார். ரஹ்மத் பவுண்டேஷன் சார்பான உரையை அதன் செயலாளர் எம்.சி.எம். சம்சுல் முனா நிகழ்த்தியதுடன், மார்க்க சிறப்புரையை மௌலவி எம்.சி.எம். முஹைதீன் வழங்கினார்.

பிரதம அதிதியாக கலந்துகொண்ட ரஹ்மத் மன்சூர் தனது உரையில், நூரானியா ஜும்ஆ பள்ளிவாசலுடன் ரஹ்மத் பவுண்டேஷனுக்கு நீண்டகால உறவு இருப்பதாகக் குறிப்பிட்டார். பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்த பள்ளிவாசலின் குவிமாட கனவு இன்று அல்லாஹ்வின் அருளால் நனவாகியிருப்பதாகவும், YWMA மற்றும் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்பினால் இந்தப் பணியை குறுகிய காலத்தில் நிறைவு செய்ய முடிந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், "குவிமாடம் என்பது ஒரு பள்ளிவாசலின் முகம்" எனக் குறிப்பிட்ட அவர், புதிய நிர்மாணம் பள்ளிவாசலின் ஆன்மீகப் பெருமையையும் கட்டிடக்கலை அழகையும் மேலும் உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார். பள்ளிவாசலின் ஏனைய அபிவிருத்திப் பணிகளையும் முழுமைப்படுத்த சமூகத்தின் அனைத்து தரப்பினரும் தொடர்ந்தும் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

பள்ளிவாசல்கள் தொழுகைக்கான இடமாக மட்டுமன்றி, சமூக ஒற்றுமை, கல்வி, வழிகாட்டல் மற்றும் இஸ்லாமிய வாழ்வியலை வளர்க்கும் மையங்களாகவும் விளங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கிடையிலோ அல்லது சமூகத்திற்குள்ளோ ஏற்படும் கருத்து வேறுபாடுகளை வெளியில் எடுத்துச் செல்லாமல் கலந்துரையாடலின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

"நமது ஒற்றுமையே நமது பலம்; பள்ளிவாசல்களின் முன்னேற்றத்திற்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்" எனத் தெரிவித்த அவர், கல்முனையில் வசிக்கும் வசதியுள்ள தனவந்தர்களும் அல்லாஹ்வின் இல்லங்களின் அபிவிருத்திக்காக தாராளமாக பங்களிக்க வேண்டுமென அழைப்பு விடுத்தார். அத்துடன், இப்பள்ளிவாசலின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் சேவையாற்றியவர்களின் அர்ப்பணிப்புகளையும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீலங்கா யங் விமென் முஸ்லிம் அசோசியேஷன் (YWMA) அமைப்பின் தலைவி பவாஷா தாஹா, இவ்வாறான பள்ளிவாசல் அபிவிருத்திப் பணிகளில் பங்களிக்கும் வாய்ப்பை வழங்கிய நூரானியா ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

அவர் தனது உரையில், இப்பணிகள் வெற்றிகரமாக நிறைவேற அல்லாஹ்வின் அருளையும், ஆதரவு வழங்கிய அனைவரின் ஒத்துழைப்பையும் நினைவுகூர்ந்து, குறிப்பாக ரஹ்மத் பவுண்டேஷன் நிறுவனரும் தலைவருமான ரஹ்மத் மன்சூரின் தொடர்ச்சியான சேவைகளைப் பாராட்டினார். அவருக்கு நீண்ட ஆயுள், சிறந்த ஆரோக்கியம் மற்றும் சமூக சேவைகளை மேலும் முன்னெடுக்கும் வல்லமையை அல்லாஹ் வழங்க வேண்டும் என துஆ செய்தார்.

மேலும், ரஹ்மத் பவுண்டேஷனின் ஒத்துழைப்புடன் இப்பகுதியில் பல பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதையும், அதனுடன் கல்வி நிலையங்கள் மற்றும் குடும்ப நலன் சார்ந்த சமூக அபிவிருத்தித் திட்டங்களும் இணைந்த வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். பள்ளிவாசல், கல்வி மற்றும் குடும்ப முன்னேற்றம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து செயல்படும்போது சமூகத்தின் எதிர்காலம் மேலும் வலுப்பெறும் என்றும், எதிர்காலத்திலும் சமூக நலன் கருதிய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களுக்கும் YWMA தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நன்கொடையாளர் அல் ஹாஜ் மனாஸ் மர்சூக் அவர்களின் முழுமையான நிதிப் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட குவிமாடம் மற்றும் மினாரா திறந்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராச்சி, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எம்.ஐ. அப்துல் அஸீஸ், பிரதி தலைவர் மௌலவி ஏ.ஆர். சபா முஹம்மத், செயலாளர் எம். முபாரிஸ், நிர்வாக சபை உறுப்பினர் மௌலவி பி.எம். ஜலீல், சென்ட்ரல் ஹார்ட்வேர் உரிமையாளர் எம்.டி.எம். ஹிமாஸ், மௌலவி ஏ.சி.எம். முஹ்யத்தீன், மௌலவி ரியாஸ், கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய அதிபர் எம்.ஐ. அப்துல் ரசாக், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், உலமாக்கள், சமூகப் பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இங்கு அதிதிகளுக்கு பொன்னாடைகள் போர்த்தி நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன

உரையாற்றியவர்கள், புதிய குவிமாடமும் மினாராவும் பள்ளிவாசலின் ஆன்மீக மற்றும் கட்டிடக்கலைச் சிறப்புகளை மேலும் உயர்த்துவதோடு, இஸ்லாமிய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் புதிய அடையாளமாகவும் அமையும் எனக் குறிப்பிட்டனர்.

இந்நிர்மாணப் பணிக்கு ஸ்ரீலங்கா யங் விமென் முஸ்லிம் அசோசியேஷன் (YWMA) மற்றும் ரஹ்மத் பவுண்டேஷன் – கல்முனை ஆகியன அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் நிறைவில் பள்ளிவாசலின் தொடர்ச்சியான முன்னேற்றம், சமூக ஒற்றுமை மற்றும் நாட்டின் அமைதிக்காக விசேட துஆ பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.












































 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :