பிராந்திய ஊடகவியலாளர்களின் தொழில்முறை முன்னேற்றம், ஊடகச் சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர் நலனை முன்னிறுத்தி இயங்கி வரும் சிலோன் மீடியா போரத்தின் (Ceylon Media Forum) வருடாந்த பொதுக்கூட்டமும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகக் குழுத் தெரிவும் இன்று (18) சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள், ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
இதன்போது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ரியாத் ஏ. மஜீட் மீண்டும் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் நூறுல் ஹுதா உமர், பொருளாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம். முஜாகீத், தேசிய அமைப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.வை. அமீர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டதுடன், புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய புதிய நிர்வாகத்தினர், ஊடகவியலாளர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்தும் பயிற்சிப் பட்டறைகள், டிஜிட்டல் ஊடக ஆற்றல் வளர்ப்பு நிகழ்ச்சிகள், சட்ட விழிப்புணர்வு கருத்தரங்குகள், இளம் ஊடகவியலாளர்களுக்கான வழிகாட்டல் திட்டங்கள் மற்றும் உறுப்பினர்களின் நலன்களை உறுதிப்படுத்தும் பல்வேறு திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தனர்.
கடந்தகால முன்னெடுப்புகள்
சிலோன் மீடியா போரம் கடந்த ஆண்டுகளில் பிராந்திய ஊடகவியலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. குறிப்பாக,ஊடகவியலாளர்களுக்கான தொழில்முறை திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் ஊடக ஒழுக்கவியல் கருத்தரங்குகளை நடத்தியது.
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, தகவல் அறியும் உரிமை மற்றும் ஊடகச் சுதந்திரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது.
இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அவசர சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
பல்வேறு சமூக அமைப்புகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து சமூக பொறுப்புணர்வுமிக்க ஊடக செயற்பாடுகளை ஊக்குவித்தது.
புதிய தலைமுறை ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்கில் ஊடகப் பயிற்சி மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியது.
எதிர்கால நோக்கு
புதிய நிர்வாகத்தின் கீழ், நாட்டின் அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள ஊடகவியலாளர்களை ஒருங்கிணைத்து வலுவான தொழில்முறை வலையமைப்பை உருவாக்குவதோடு, உறுப்பினர்களின் நலன்புரி, திறன் மேம்பாடு, ஊடக ஒழுக்கம், தகவல் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய செய்தியிடலை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்கள், சிரேஷ்ட மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு புதிய நிர்வாகத்திற்கு தங்களது வாழ்த்துகளையும் ஒத்துழைப்பையும் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment