1980களின் தொடக்கத்தில், எங்கள் குடும்பமும் தலைவர் அஷ்ரப் அவர்களின் குடும்பமும் கல்முனை அம்மன் கோவில் வீதியில் வசித்து வந்தன. அது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கமும் பரஸ்பர அன்பும் நிறைந்த காலமாக இருந்தது. பெரும்பாலும் தமிழ் மக்கள் வாழ்ந்த அந்தச் சூழலில் தலைவர் அஷ்ரப் அவர்களின் குடும்பம், எங்கள் குடும்பம் மற்றும் இன்றைய சம்பத் வங்கியின் முகாமையாளராகப் பணியாற்றிய முஸம்மில் அவர்களின் குடும்பம் ஆகியவை அயலவர்களாக வாழ்ந்தன.
அந்தக் காலத்தில் தலைவர் அஷ்ரப் அவர்கள் கல்முனையின் மிகவும் பிரபலமான சட்டத்தரணிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். சிறுவர்களாக இருந்த எங்களுக்கு சட்டத்துறையைப் பற்றிய புரிதல் அதிகமாக இல்லாவிட்டாலும், வீட்டில் அவரைப் பற்றிய உரையாடல்கள் அடிக்கடி இடம்பெற்றதால், அவர்மீது இயல்பாகவே ஒரு ஈர்ப்பு உருவானது.
1983–84 காலப்பகுதியில் வெளியான "விதி" திரைப்படம் சட்டத்தரணிகளின் சமூகப் பொறுப்பையும் நீதிக்கான போராட்டத்தையும் மக்களிடம் வலுவாக எடுத்துரைத்தது. அப்போது நான் கார்மேல் பாத்திமா கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். ஆசிரியர்களும் மாணவர்களும் அந்தத் திரைப்படத்தைப் பற்றி ஆர்வத்துடன் விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.
அந்த நாட்களில் கல்முனையில் தொலைக்காட்சி என்பது அரிதான வசதியாக இருந்தது. இன்று Brilliant Institute அமைந்துள்ள பகுதியில் பெரிய தொலைக்காட்சியில் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அது ஒரு சிறிய திரையரங்கத்தைப் போலவே இயங்கியது. நண்பர்களுடன் வீட்டுக்குத் தெரியாமல் சென்று "விதி" திரைப்படத்தைப் பார்த்த அனுபவம் இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது.
அந்தப் படத்தில் ஒரு பெண்ணுக்காக நீதிக்காக போராடும் சட்டத்தரணியின் பாத்திரம் என்னை ஆழமாகக் கவர்ந்தது. அதன் பின்னர் கருப்பு கோட்டும் வெள்ளை சட்டையும் அணிந்து நீதிமன்றத்திற்குச் செல்லும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம், திரைப்படத்தில் கண்ட ஹீரோவையே நேரில் காண்கிறேன் என்ற உணர்வு எனக்குள் தோன்றியது.
அவர் ஓட்டிச் சென்ற ஆரஞ்சு நிற Volkswagen கார் எங்கள் சிறுவயது கவனத்தை மிகவும் ஈர்த்தது. அந்தக் காரின் தனித்துவமான ஒலி கேட்டவுடன் வீட்டிலிருந்து ஓடிவந்து அவரைப் பார்ப்பது எங்களின் வழக்கமாக இருந்தது. அது ஒரு சினிமா நட்சத்திரத்தைப் பார்ப்பதற்குச் சமமான பரவசத்தை ஏற்படுத்தும்.
ஆனால் காலம் செல்லச் செல்ல, அவர் மீதான என் மரியாதை வெளிப்புற கவர்ச்சியால் மட்டும் உருவானதல்ல என்பதை உணர்ந்தேன். அவர் உண்மையிலேயே சமூக நீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய மனிதர் என்பதை எங்கள் குடும்பமே நேரடியாக அனுபவித்துள்ளது.
எனது தந்தை மர்ஹூம் அல்ஹாஜ் எம்.ஏ. ஹபீப் முகம்மது (பெரியதம்பி முதலாளி) அவர்கள் கல்முனை மொய்தீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலினதும், கடற்கரை பெரிய பள்ளிவாசலினதும் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், பள்ளிவாசலுக்குச் சொந்தமான பல காணிகளும் சொத்துக்களும் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.
அந்தச் சொத்துக்களை மீட்டெடுப்பது மிகக் கடினமான பணியாக இருந்தது. அப்போது எனது தந்தை தலைவர் அஷ்ரப் அவர்களிடம் உதவி கோரியபோது, "தைரியமாக இருங்கள். இந்தச் சொத்துக்களை நீதிமன்றத்தின் ஊடாக மீட்டுத் தருகிறேன்" என்று உறுதியளித்ததாக அடிக்கடி கூறுவார்.
அதற்காக அவர் ஒரு சதமும் கட்டணமாகப் பெறவில்லை.
கணினிகள் இல்லாத அந்தக் காலத்தில், நள்ளிரவுகளையும் தாண்டி தனது Typewriter-இல் நீதிமன்ற ஆவணங்களைத் தயாரித்தார். எனது சகோதரர் அமீர் அலி அவர்கள் தேவையான ஆவணங்களை எடுத்துச் சென்று அவருக்கு உதவியாக இருந்து, சில நேரங்களில் அதிகாலை நான்கு மணிக்குப் பிறகே வீடு திரும்பியிருக்கிறார்.
அவரது அயராத உழைப்பின் பலனாக கல்முனை நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, பள்ளிவாசலுக்குச் சொந்தமான பல காணிகள் மீட்கப்பட்டன. ஒவ்வொரு காணிக்கும் தடையுத்தரவு பெற்று, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு அளப்பரியது.
சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற மறுத்தனர். அத்தகைய வேளைகளிலும் அவர் காவல்துறையினருடன் நேரடியாகச் சென்று நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தியதாக என் தந்தை பெருமையுடன் கூறியிருக்கிறார்.
இந்த அனுபவங்கள் எனக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்றுத்தந்தன. ஹீரோக்கள் திரைப்படங்களில் மட்டுமல்ல; நிஜ வாழ்க்கையிலும் இருக்கிறார்கள். சமூக நீதிக்காக அஞ்சாமல் போராடிய அந்த நிஜ வாழ்க்கை ஹீரோ தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள்தான்.
அவரது வீடு எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தது என்பது இன்றும் எனக்கு பெருமையளிக்கிறது. அவரது குடும்பத்தினரின் வருகைகள் கூட எங்கள் வீட்டில் ஒரு விசேட மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பின்னர் அவரது அரசியல் எழுச்சியும், முஸ்லிம் சமூக உரிமைக்கான போராட்டங்களும், வரலாற்றை மாற்றிய பல சம்பவங்களும் என் கண்முன்னே நடைபெற்றன.
அந்த நினைவுகள் எண்ணற்றவை. அவற்றை அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஆனால் இன்று வரை என் மனதில் நிலைத்திருப்பது ஒரே உண்மைதான்—
என் சிறுவயதின் ஹீரோவும், என் வாழ்வின் நிஜ ஹீரோவும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களே.

0 comments :
Post a Comment