மறைந்த கவிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான முஹம்மத் அபார் அவர்களின் இலக்கிய, சமூகப் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் "நினைவுகளே நமது இருப்பு" எனும் தொனிப்பொருளில் மரபுரிமை ஆய்வு வட்டம் ஏற்பாடு செய்த நினைவுகூரல் நிகழ்வு 2026.06.28 ஆம் திகதி கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
நவீன தமிழ்ப் படைப்பிலக்கிய உலகில் தனித்துவமான கவிதைப் போக்கை உருவாக்கிய கவிஞர் அபார் அவர்களின் இலக்கிய ஆளுமை, சமூகப் பணிகள் மற்றும் மனிதநேயப் பண்புகளை நினைவுகூரும் நோக்கில் திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியை மரபுரிமை ஆய்வு வட்டத்தின் உறுப்பினர் எஸ்.எச்.எஸ். கதிர் தொகுத்து வழங்கினார். ஆரம்பத்தில் அனைவரும் எழுந்து நின்று சூரத்துல் பாத்திஹா ஓதி, மறைந்த முஹம்மத் அபார் அவர்களுக்காக துஆ செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மரபுரிமை ஆய்வு வட்டத்தின் தலைவர் கலாநிதி முபீஷால் அபூபக்கர், மரபுரிமை ஆய்வு வட்டம் தொல்லியல் மரபுகளை மட்டுமன்றி, இலக்கியம், கலை, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பிரதேசத்திற்கு பங்களிப்பு செய்த ஆளுமைகளை நினைவுகூர்ந்து, அவர்களின் பங்களிப்புகளை எதிர்கால சந்ததியினரிடம் கொண்டு சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு எனக் குறிப்பிட்டார்.
மேலும், "நினைவுகளே நமது இருப்பு" என்பது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் நினைவுகூரல் நிகழ்வாகும் என்றும், அதன் முதல் நிகழ்வாக கவிஞர் முஹம்மத் அபார் அவர்களைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் எம்.எஸ். காரியப்பர், ஏ.ஆர். மன்சூர், ஹமீட் உள்ளிட்ட பிரதேசத்தின் முக்கிய ஆளுமைகள் பற்றியும் மாதாந்தம் அல்லது மாதத்திற்கு இருமுறை நினைவுகூரல் நிகழ்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இளம் தலைமுறையினர் தங்கள் பிரதேசத்தின் ஆளுமைகளையும் வரலாற்றுப் பங்களிப்புகளையும் மறந்து வரும் சூழலில், அந்த இடைவெளியை நிரப்பும் அறிவு மற்றும் நினைவுக் களமாக மரபுரிமை ஆய்வு வட்டம் செயற்பட வேண்டும் என்பதே அமைப்பின் நோக்கம் என அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், முஹம்மத் அபார் ஒரு உலகப் புகழ்பெற்ற கவிஞராக மட்டுமல்லாது, தனது மண்ணையும் மக்களையும் அவர்களின் வாழ்வியலையும் தனித்துவமான பார்வையில் பதிவு செய்த கிராமியக் கவிஞராக விளங்கியவர் என்றும், அவரது சிந்தனைகள், எழுத்துகள் மற்றும் சமூகப் பங்களிப்புகள் காலம் கடந்தும் நினைவுகூரப்பட வேண்டியவை என்றும் குறிப்பிட்டார். அபார் அவர்களின் மறைவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிய பின்னரே இந்நினைவுகூரல் நிகழ்வை நடத்த முடிந்திருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மரபுரிமை ஆய்வு வட்டத்தின் நிறைவேற்று உறுப்பினராகவும், கவிஞராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் விளங்கிய முஹம்மத் அபார் அவர்கள் 2024 ஆகஸ்ட் 26 ஆம் திகதி காலமானதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் நினைவுகூரல் நிகழ்வை நடத்த பலமுறை முயற்சிக்கப்பட்ட போதிலும் அது சாத்தியமாகவில்லை என்றும், கடந்த மாதம் நடைபெற்ற மரபுரிமை ஆய்வு வட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பேராசிரியர் எஸ்.எல். றியாஸ், "மர்ஹூம் முஹம்மத் அபார் அவர்களின் இறுதிக்கால நினைவுகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். நீண்டகால நண்பராகத் தாம் அபாருடன் பகிர்ந்துகொண்ட அனுபவங்களை நினைவுகூர்ந்த அவர், அபார் ஒரு சிறந்த கவிஞர் மட்டுமன்றி, மனிதர்களின் துயரங்களை நகைச்சுவையால் மறக்கச் செய்யும் அபூர்வமான ஆளுமை கொண்டவராக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
எந்தவொரு சிக்கலான சூழலையும் எளிமையான நகைச்சுவையால் இலகுவாக்கும் அவரது இயல்பும், நண்பர்களின் மனதில் நிலையான இடத்தைப் பெற்றிருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
அபார் அவர்களின் இறுதி நாட்களை நினைவுகூர்ந்த பேராசிரியர் ரியாஸ், அவரை மருத்துவத் தேவைக்காக அழைத்துச் சென்ற இறுதி தருணங்களையும், பின்னர் அவரது திடீர் மறைவு தமக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியையும் மிகுந்த உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துகொண்டார். அந்த அனுபவம் வாழ்க்கையின் நிலையாமையையும் மனித உறவுகளின் அருமையையும் உணர்த்திய மறக்க முடியாத தருணமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், மனிதர்கள் மறைந்த பின்னரும் அவர்களின் சிந்தனைகளும் பங்களிப்புகளும் சமூக நினைவில் வாழ வேண்டும் என்பதற்காக இவ்வாறான நினைவுகூரல் நிகழ்வுகள் அவசியமானவை என வலியுறுத்திய அவர், குறிப்பாக மண்ணின் மணம் மிக்க மொழியிலும் மக்களின் வாழ்வியலையும் பதிவு செய்த அபார் போன்ற படைப்பாளிகள் காலப்போக்கில் மறக்கப்படாமல், அவர்களின் வாழ்க்கையும் இலக்கியப் பங்களிப்புகளும் ஆவணப்படுத்தப்பட்டு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றார்.
வரலாறும் மரபும் என்பது புகழ்பெற்றவர்களை மட்டுமே நினைவுகூர்வதல்ல; சமூகத்தின் பல்வேறு துறைகளில் அமைதியாகப் பணியாற்றிய ஆளுமைகளின் பங்களிப்புகளையும் பதிவு செய்வதே உண்மையான மரபுப் பாதுகாப்பு என அவர் சுட்டிக்காட்டினார். இந்த நோக்கில் மரபுரிமை ஆய்வு வட்டம் முன்னெடுத்துள்ள "நினைவுகளே நமது இருப்பு" தொடரை பாராட்டிய அவர், இத்தகைய முயற்சிகள் எதிர்காலத்தில் சமூகத்தின் வரலாற்று நினைவகமாக விளங்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நினைவுரைகளில் சட்டத்தரணியும் கவிஞருமான றொஷன் அக்தர், சமூக ஆர்வலரும் பொறியியலாளருமான இசட்.ஏ.எம். அஸ்மிர், மரபுரிமை ஆய்வு வட்டத்தின் உபத் தலைவர் கவிஞர் நபீல், சிரேஷ்ட சட்டத்தரணியும் சமூகச் செயற்பாட்டாளருமான யூ.எம். நிசார், அதிபரும் சட்டத்தரணி கற்கையில் பயிலும் மஜிதியா ஆகியோர் முஹம்மத் அபார் அவர்களின் இலக்கிய ஆளுமை, சமூகப் பங்களிப்பு, நட்புணர்வு மற்றும் மனிதநேயப் பண்புகள் குறித்து தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.
நினைவுரையாற்றிய சட்டத்தரணியும் கவிஞருமான றொஷன் அக்தர், முஹம்மத் அபார் அவர்களை தமது சிறுவயதிலிருந்தே நெருக்கமாக அறிந்திருந்ததாகக் குறிப்பிட்டார். அபார் ஒரு கவிஞர் மட்டுமன்றி, அரசியல், சமூக மற்றும் இலக்கியத் துறைகளில் தனித்துவமான ஆளுமையாக விளங்கியவர் என்றும், மக்களோடு இயல்பாக ஒன்றிணைந்து வாழ்ந்த எளிமையான மனிதர் என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.
அபார் அவர்களின் வாழ்வின் மிகப் பெரிய சிறப்பாக அவரது கருணை, அன்பு மற்றும் மனிதநேயப் பண்புகளே அமைந்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர், யாருடனும் மனம் திறந்து உரையாடும் இயல்பும், கிராமிய வாழ்வியலை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொள்ளும் தன்மையும் அவரை அனைவராலும் நேசிக்கப்படும் மனிதராக மாற்றியிருந்ததாக தெரிவித்தார்.
அபார் அவர்கள் தனது அரசியல் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தபோதிலும், பிறரது கருத்துக்களையும் அரசியல் நிலைப்பாடுகளையும் மதிக்கும் ஜனநாயகப் பண்பைக் கொண்டிருந்தார் என்றும், கருத்து வேறுபாடுகள் நட்புறவை பாதிக்க அனுமதிக்காத முதிர்ந்த ஆளுமையாகத் திகழ்ந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலக்கியப் பங்களிப்புகள் குறித்து கருத்துத் தெரிவித்த றொஷன் அக்தர், கல்முனை வட்டார வழக்குச் சொற்கள், கிராமிய வாழ்வியல் மற்றும் மண்ணின் மணத்தை தனது கவிதைகளில் இயல்பாகப் பதிவு செய்த படைப்பாளியாக அபார் விளங்கியதாகச் சுட்டிக்காட்டினார். "இடி விழுந்த வம்மி" உள்ளிட்ட அவரது படைப்புகள், மரபுவழிக் கவிதை மொழியிலிருந்து விலகி புதிய கிராமியக் கவிதை மொழியை உருவாக்கிய முயற்சிகளாக அமைந்தன என்றும் அவர் பாராட்டினார்.
மேலும், இளமைப் பருவத்தில் வெளியிடப்பட்ட "பூவிழி" இலக்கியச் சஞ்சிகையின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராக அபார் இருந்தமை, இப்பிரதேசத்தில் புதிய இலக்கியச் சிந்தனைகளை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக அமைந்தது என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.
அபார் அவர்கள் இயற்கையை நேசித்த எளிய வாழ்க்கை முறையைக் கொண்டவராகவும், கடற்கரை, நீர்நிலைகள் மற்றும் கிராமியச் சூழலோடு நெருங்கிப் பழகியவராகவும் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அவரது நகைச்சுவை உணர்வு, எளிமையான பழக்கம் மற்றும் மனித உறவுகளைப் பேணிய பண்பு என்றும் மறக்க முடியாதவை என தெரிவித்தார்.
இறுதியாக, மண்ணோடும் மக்களோடும் அன்பை விதைத்த மனிதர்கள் உடலால் மறைந்தாலும், அவர்களின் நினைவுகளும் பண்புகளும் சமூக நினைவில் என்றும் நிலைத்திருக்கும் எனக் குறிப்பிட்ட றொஷன் அக்தர், முஹம்மத் அபார் அவர்களின் இலக்கிய மற்றும் மனிதநேயப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் இத்தகைய நினைவுகூரல் நிகழ்வுகள் தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன்போது உரையாற்றிய சமூக ஆர்வலரும் பொறியியலாளருமான இசட்.ஏ.எம். அஸ்மிர், தாம் கல்முனை பிரதேச வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் காரியாலயத்தில் நீண்டகாலம் அபார் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை நினைவுகூர்ந்தார்.
அலுவலகத்தில் அவர் இருந்த காலம் முழுவதும் தனது நகைச்சுவை உணர்வாலும், எளிமையான பழகும் பண்பாலும், சக ஊழியர்கள் மத்தியில் எப்போதும் கலகலப்பான சூழலை உருவாக்கியவராக அபார் விளங்கியதாகக் குறிப்பிட்டார். எந்தவொரு சிக்கலான சூழலையும் புன்னகையுடனும் நிதானத்துடனும் அணுகும் அவரது இயல்பு அனைவரின் மனதிலும் அழியாத இடத்தைப் பெற்றிருந்ததாக அவர் தெரிவித்தார்.
அபார் அவர்கள் பணியிலிருந்து முன்கூட்டியே ஓய்வு பெற விரும்புவதாகத் தன்னிடம் பகிர்ந்துகொண்ட சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், அந்த எண்ணம் நிறைவேறுவதற்கு முன்னரே இறைவனின் அழைப்பை ஏற்று அவர் பிரிந்துவிட்டமை தமக்கு ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியதாகக் கூறினார்.
மேலும், அலுவலக நிகழ்வுகள், பிரியாவிடை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சந்தர்ப்பங்களில் உடனுக்குடன் வாழ்த்துக் கவிதைகளை இயற்றி வாசித்துக் காட்டும் அபார் அவர்களின் அபாரமான கவித்திறனை நினைவுகூர்ந்த அவர், ஒருமுறை தாம் கேட்டதற்கிணங்க சில நிமிடங்களிலேயே கவிதையொன்றை எழுதி வழங்கிய அவரது படைப்பாற்றல் இன்னும் தன் நினைவில் நீங்காமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இறுதியாக, மரபுரிமை ஆய்வு வட்டம் முன்னெடுத்துள்ள "நினைவுகளே நமது இருப்பு" என்ற இத்தொடர் முயற்சி ஒரு நிகழ்வோடு நின்றுவிடாமல், சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் வாழ்ந்த ஆளுமைகளை தொடர்ந்து நினைவுகூரும் அறிவார்ந்த பணியாக வளர வேண்டும் என்றும், அதற்கான ஆற்றலையும் அருளையும் எல்லாம் வல்ல இறைவன் வழங்குவானாக என்றும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
தமிழ் இலக்கிய உலகின் மூத்த அறிஞர் கலாநிதி எம்.ஏ. நுஹ்மான் அவர்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் நேரில் கலந்துகொள்ள இயலாத நிலையில், தனது நினைவுரையை ஒலிப்பதிவு மூலம் அனுப்பியிருந்தார். அதேபோன்று கவிஞரும் எழுத்தாளருமான உமா வரதராஜன் அவர்களின் நினைவுரையும் ஒலிப்பதிவாக ஒலிபரப்பப்பட்டது. இருவரின் உரைகளும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களை ஆழமாக நெகிழச் செய்தன.
மரபுரிமை ஆய்வு வட்டத்தின் உபத் தலைவரும் கவிஞருமான நபீல், தனது நினைவுரையில் முஹம்மத் அபார் தமக்கு ஒரு நண்பர் மட்டுமல்லாது, தந்தையைப் போன்ற வழிகாட்டியாகவும், வாழ்வின் பல தருணங்களைப் பகிர்ந்த ஆளுமையாகவும் இருந்ததாக உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டார்.
அபாரின் மறைவுக்குப் பின்னரும் அவரது நினைவுகள் தம்மை விட்டு அகலவில்லை என்றும், அவரை அடிக்கடி கனவுகளிலும் நினைவுகளிலும் சந்திப்பதாகவும் தெரிவித்த அவர், அபாருடன் இணைந்து கடற்கரையில் கழித்த இனிய தருணங்கள், இயற்கையை நேசித்த அவரது மனப்பாங்கு, கடல், மழை, காற்று, வானொலி இசை ஆகியவற்றோடு கலந்த வாழ்வியலை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். அத்தகைய அனுபவங்களே அபாரின் கவிதைகளில் இயற்கை, கிராமிய வாழ்வியல் மற்றும் மனித உணர்வுகளாக வெளிப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கவிதை எழுதத் தொடங்கிய அபார், தென்கிழக்கின் நவீனக் கவிதை உலகில் தனித்துவமான குரலாகத் திகழ்ந்தார் என்றும், அவரது "இடி விழுந்த வம்மி" கவிதைத் தொகுப்பு கிராமிய வாழ்வியல், சமூக யதார்த்தம் மற்றும் மனித உறவுகளை ஆழமான குறியீடுகளுடன் பதிவு செய்த படைப்பாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், "தொலைந்து போன கிராமம்", "என்னுடன் இரவைக் கழித்த இரவு", "மனதைச் சப்பிய மான்" உள்ளிட்ட கவிதைகள் மூலம் அபார் இன ஒற்றுமை, மனிதநேயம், இழப்பு, தனிமை மற்றும் அதிகார உறவுகளை வலிமையான கலைமொழியில் வெளிப்படுத்தியிருப்பதை எடுத்துரைத்தார். தனது கவிதைகளில் கிராமத்தின் மண்வாசனையையும் மக்களின் வாழ்வியலையும் உயிர்ப்புடன் பதிவு செய்த கவிஞராக அபார் திகழ்ந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கவிஞர் அபாரின் அனைத்து கவிதைகளையும் ஒருங்கிணைத்த முழுமையான தொகுப்பு தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மாதத்தின் முதல் பகுதியில் அந்த நூல் வெளியிடப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் அவர் அறிவித்தார். அபாரின் இலக்கிய மரபை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முக்கிய முயற்சியாக அந்த வெளியீடு அமையும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து நினைவுரையாற்றிய சமூகச் செயற்பாட்டாளர் எம்.எம்.எம். காமில், மறைந்த கவிஞர் முஹம்மத் அபார் அவர்களை தனது சகோதரரைப் போன்ற நெருங்கிய நண்பராக நினைவுகூர்ந்தார். அபார் மிகவும் எளிமையானதும் அமைதியானதுமான குடும்பப் பின்னணியில் வளர்ந்திருந்தாலும், கல்முனை பிராந்தியத்தில் இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த ஆளுமை எனக் குறிப்பிட்டார்.
சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கிய அபார், விளையாட்டிலும் மனித உறவுகளிலும் அனைவரையும் கவர்ந்தவர் என நினைவுகூர்ந்த அவர், பின்னர் சமூக மற்றும் இலக்கியத் துறைகளில் முழுமையாக ஈடுபட்டபோதும், தனது எளிமையையும் பணிவையும் இறுதிவரை கைவிடாத மனிதராக வாழ்ந்தார் என்றார்.
கடற்கரையில் அடிக்கடி சந்தித்து ஊரின் நிலைமைகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பொதுநல விடயங்கள் குறித்து அபாருடன் நீண்ட நேரம் கலந்துரையாடிய அனுபவங்களைப் பகிர்ந்த அவர், யாரையும் குறைத்து பேசாத, நேர்மையும் மனிதநேயமும் நிறைந்த பண்பாளர் அபார் எனப் பாராட்டினார்.
மேலும், கல்முனையின் வரலாறும் ஆளுமைகளும் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அவர், மரபுரிமை ஆய்வு வட்டம் முன்னெடுத்துள்ள "நினைவுகளே நமது இருப்பு" தொடர், பிரதேசத்தின் கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூகப் பணியாளர்களின் பங்களிப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அரிய முயற்சியாக அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் சிரேஷ்ட சட்டத்தரணியும் சமூகச் செயற்பாட்டாளருமான யூ.எம். நிசார் மற்றும் அதிபரும் சட்டத்தரணி கற்கையில் பயிலும் மஜிதியா ஆகியோரும் முஹம்மத் அபார் அவர்களுடனான தங்களது அனுபவங்களையும் மனப்பதிவுகளையும் பகிர்ந்துகொண்டு, அவரது மனிதநேயம், எளிமை, நட்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை நினைவுகூர்ந்தனர்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ரஹ்மத் மன்சூர், உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். றியாஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் மரபுரிமை ஆய்வு வட்டத்தின் செயலாளர் ஏ.எம். பாரக்கத்துல்லாஹ் நன்றியுரை வழங்கியதுடன், மறைந்த கவிஞர் முஹம்மத் அபார் அவர்களுக்காக துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது.
















0 comments :
Post a Comment