இளங்கலை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை






யூ.கே. காலித்தீன் -
ல்கலைக்கழக இளங்கலை மாணவர்களின் கல்வித் திறன்கள், மென் திறன்கள் மற்றும் எதிர்கால தொழில்வாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மென் திறன் பயிற்சித் திட்டம் மற்றும் தொழில் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை என்பன கடந்த (27) ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றன.

கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். நஸீர் அவர்களின் வழிகாட்டலிலும், கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் கல்விப் பணிப்பாளரும், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் அவர்களின் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்.

இன்றைய உலகம் செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு வேகமாக மாற்றமடைந்து வருகின்ற நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் நவீன தொழில்நுட்ப அறிவு, சிந்தனைத் திறன், தொடர்பாடல் திறன், பிரச்சினைத் தீர்க்கும் ஆற்றல் மற்றும் தொழில்சார் மென் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை மையமாகக் கொண்டு இப்பயிற்சித் திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

பயிற்சித் திட்டத்தின் வளவாளர்களாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எம்.எம்.எம். முபஷ்ஷிர் மற்றும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஏ. ஜாபீர் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினர்.

அவர்கள் தங்களது விளக்கவுரைகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி, கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைகளில் அதன் நடைமுறைப் பயன்பாடுகள், வேலைவாய்ப்புச் சந்தையில் உருவாகி வரும் புதிய மாற்றங்கள், எதிர்காலத் தொழில்களுக்குத் தேவையான திறன்கள், மென் திறன்களின் முக்கியத்துவம் மற்றும் தொழில் திட்டமிடல் தொடர்பான பல்வேறு அம்சங்களை விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், செயற்கை நுண்ணறிவு கருவிகளை பொறுப்புணர்வுடனும் திறமையாகவும் பயன்படுத்துவதன் மூலம் கற்றல் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், புதிய கண்டுபிடிப்புகள், தொழில்முனைவோர் முயற்சிகள் மற்றும் உலகளாவிய தொழில்வாய்ப்புகளை நோக்கி மாணவர்கள் முன்னேற முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்து தங்களைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

நிகழ்வின் நிறைவில் பயிற்சியில் பங்கேற்ற பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இப்பயிற்சி தங்களது தொழில் இலக்குகளைத் தெளிவுபடுத்துவதற்கும், எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கான தயாரிப்பை வலுப்படுத்துவதற்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாக மாணவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் ஐ. அலியார், நிதிப் பணிப்பாளர் ஏ.சி. முஹம்மட், சிரேஷ்ட ஆலோசகரும் ஓய்வு பெற்ற நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம், பிரதி நிர்வாகப் பணிப்பாளர் எம்.எம். உதுமாலெவ்வை, ஊடகப் பணிப்பாளர் யூ.கே. காலித்தீன் ஆகியோருடன் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

எதிர்கால தொழில்நுட்ப உலகின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்குத் தேவையான அறிவு, திறன் மற்றும் தன்னம்பிக்கையை மாணவர்களிடையே வளர்க்கும் பயனுள்ள முயற்சியாக இப்பயிற்சிப் பட்டறை அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




















:::
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :