ஜூன் 16 முதல் 18 வரை நடைபெற்ற இந்தப் பயிலரங்கை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம், அமெரிக்க பசிபிக் கட்டளைப்பீடத்தின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனிதாபிமான உதவிகளை சிறப்பாக மேற்கொள்ளல் தொடர்பான மத்திய நிலையம் (CFE-DM), மொன்டானா தேசிய காவற்படை மற்றும் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுக்கும் மொன்டானா தேசிய காவற்படைக்கும் இடையில் 2025 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.
பேரிடர் சூழ்நிலைகளில் வளங்களை ஒருங்கிணைத்தல், பொதுத் தகவல் பரிமாற்றம், அவசரநிலை முகாமைத்துவம் மற்றும் விரைவான முடிவெடுப்பு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பில் பங்கேற்பாளர்களுக்கு நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற இப்பயிற்சி, யதார்த்தமான அவசரநிலைச் சூழலை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் மற்றும் செயல்முறைப் பயிற்சியுடன் நிறைவடைந்தது.
டிட்வா சூறாவளி உள்ளிட்ட சமீபத்திய அனர்த்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், பல்வேறு அரச நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இப்பயிலரங்கு சிறந்த தளமாக அமைந்தது.
மொன்டானா தேசிய காவற்படை மற்றும் மொன்டானா பேரனர்த்த மற்றும் அவசரகால சேவைகள் (DES) அமைப்புகளின் நிபுணர்கள், காட்டுத்தீ, வெள்ளம், கடுமையான பனிப்புயல் உள்ளிட்ட பேரிடர் நிலைமைகளில் பெற்ற அனுபவங்களை இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவற்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்புத் திணைக்களம், சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நேரடி திட்டமிடல் மற்றும் சூழ்நிலை அடிப்படையிலான பயிற்சிகள் மூலம் பங்கேற்பாளர்கள் தங்களது ஒருங்கிணைப்பு திறன்களை மேம்படுத்திக் கொண்டதுடன், எதிர்கால அவசரநிலைகளுக்கு விரைவாகவும் திறம்படவும் பதிலளிக்கும் திறனையும் வலுப்படுத்திக் கொண்டனர்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பேரிடர் முகாமைத்துவம், மனிதாபிமான உதவி மற்றும் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நிகழ்வாகவும் இந்தப் பயிலரங்கு அமைந்தது.

0 comments :
Post a Comment