முஸ்லிங்களை பாதுகாக்க அரசு தவறினால் சட்டவிரோதமாயினும் சரி, ஆயுதமேந்தி மக்களை பாதுகாப்போம் – முழங்கியும், செய்தும் காட்டினார் அஸ்ரப்!



மாவீரன் அஸ்ரப் – அத்தியாயம் 03

தலைவர் அஷ்ரப் அவர்கள் மைக்கைப் பிடித்து வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு உரையை அங்கு ஆற்றினார்.

"1987 வடகிழக்கு ஒப்பந்தத்தின் காரணமாக கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் இணைக்கப்பட்டு, எமது கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகம் அடிமையாக்கப்பட்டுள்ளது. நம்மை கிழக்கு மாகாண முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே எமது மக்களை அடிமைப்படுத்துவதற்கு துணைபோய்விட்டார்கள்.

இனிமேல் இந்த அடிமைச் சங்கிலியை உடைக்க வேண்டுமென்றால் நாம் ஒற்றுமைப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல், எமது வடகிழக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பற்ற சூழ்நிலையையும் மரண பயத்தையும் இல்லாமல் ஆக்க வேண்டுமென்றால், மக்களின் ஆணையின் ஊடாக தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் எமது முஸ்லிம் மக்களின் அநீதிக்கெதிராக போராடுவதற்கான அங்கீகாரத்தை இந்தத் தேர்தல் மூலம் எனக்கு வழங்குங்கள்.

அதேநேரம், எமது மக்களின் பாதுகாப்பிற்காக எந்த எல்லைக்குச் சென்றாலும் அவர்களைப் பாதுகாக்க போராடுவோம். அதற்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தயாராக இருக்கின்றார்கள்."

என மிகவும் வலிமை மிக்க, உறுதியான இந்த உரையை அவர் முஹைய்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக அன்று ஆற்றினார்.

அதன் பின்னர், அடுத்த சில தினங்களில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன. குறிப்பாக அந்த நேரத்தில் இந்திய அமைதி காக்கும் படையான IPKF வடகிழக்கில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய வேட்பாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட போதிலும், தலைவர் அஷ்ரப் அவர்கள் அவர்களுக்கு தொடர்ந்து தைரியமூட்டினார்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால், பெரும்பாலான முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தேர்தலிலிருந்து விலகுமாறும், இல்லையெனில் எந்த விலைகொடுத்தேனும் உங்களை மரண தண்டனைக்கு உள்ளாக்குவோம் என்றும் அச்சுறுத்தல் கடிதங்கள் அனுப்பப்பட்டன.

கட்சியின் மூத்த உறுப்பினர்களான எம். ரீ. ஹசன் அலி, முஸ்லிம் முழக்கம் மர்ஹூம் மஜீத், சம்மாந்துறை மர்ஹூம் மன்சூர், மர்ஹூம் அலி உதுமான், எஸ். நிஜாமுதீன், மர்ஹூம் மருதூர் கனி மற்றும் வரலாற்றுப் புகழ் பெற்ற மூத்த உலமா ஏ.சி.எம். புஹாரி உள்ளிட்ட பல வேட்பாளர்கள் இவ்வாறான அச்சுறுத்தல் கடிதங்களைப் பெற்றிருந்தனர்.

இருப்பினும், சமூகப் போராட்டத்தில் இருந்து அவர்கள் ஒதுங்காமல் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு களத்தில் பணியாற்றினர்.

அதே காலகட்டத்தில் தேர்தலுக்கு முன்னர் EPRLF தலைவர் பத்மநாபா அவர்கள் கல்முனை சந்தாங்கணி மைதானத்தில் பிற்பகல் 3 மணியளவில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார். அந்தத் தேர்தல் அந்நாளில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியிருந்தது.

தேர்தல் ஒழுங்குபடுத்தலில் முஸ்லிம் பிரதேசங்களில் EPRLF இயக்கத்தின் கெடுபிடிகளும் கடுமையாக இருந்தன. குறிப்பாக முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகளை குறைப்பதற்கான பல நடவடிக்கைகளும் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.

இருந்தபோதிலும், 19.11.1988 அன்று நடைபெற்ற தேர்தலில் கிழக்கு மாகாண முஸ்லிம் பகுதிகளில் சுமார் 85 சதவீத முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்தனர். இளைஞர்கள் சாரை சாரையாக சென்று வாக்களித்தனர். இது ஒரு பெரும் மக்கள் எழுச்சியாக மாறியது.

தேர்தல் முடிவுகளின்படி, கிழக்கு மாகாணத்தில் 35 உறுப்பினர்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 17 உறுப்பினர்களை வென்றது.

அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் தவிசாளர் சேகு இஸ்ஸதீன், முன்னாள் செயலாளர் எம். ரீ. ஹசனலி, முன்னாள் தவிசாளர் ஏ.எல்.எம். அதாவுல்லா, அலி உதுமான் (பின்னர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்), சம்மாந்துறை மர்ஹூம் மன்சூர் (பின்னர் கொல்லப்பட்டவர்), முனாஸ் காரியப்பர், அட்டாளைச்சேனை பதுருதீன், சட்டத்தரணி எஸ். நிஜாமுதீன், முஸ்லிம் முழக்கம் மஜீத், மத்தியமுகாம் எம்.எம். ஆதம்பாவா மற்றும் மருதமுனை மருதூர்க்கனி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

கல்முனையைச் சேர்ந்த வேட்பாளர் ஏ.எம். நஸீர் துரதிஷ்டவசமாக இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

நான் உட்பட எனது பாடசாலை நண்பர்கள் இணைந்து, நண்பர் மர்ஹூம் எம்.ஐ.எம். றியாத் அவர்களின் காசிம் வீதி இல்லத்தை தேர்தல் நடவடிக்கைகளுக்கான மையமாக மாற்றி, இரவு பகலாக கல்முனை தொகுதி வேட்பாளர் ஏ.எம். நஸீர் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம்.

அதில் முக்கிய பங்காற்றிய மர்ஹூம் எம்.ஏ. சமட் (ரஸாக் ஸ்டோர் மச்சினன்) பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவ்வாறு 1988ஆம் ஆண்டில் சிறுவர் போராளிகளாக நாங்களும் அந்த அரசியல் களத்தில் இயங்கினோம்.

மேலும், சேகு இஸ்ஸதீன் அவர்கள் முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பாக பல வரலாற்று எழுச்சி உரைகளை நிகழ்த்தினார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது:

"நீங்கள் தொழுகைக்காக தலையில் அணிந்திருக்கும் தொப்பிகள் நாளை ஹெல்மெட்டுகளாக மாற வேண்டிய சூழ்நிலை வரலாம். முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதமேந்தி முஸ்லிம்களை பாதுகாக்க தயாராகுங்கள்"

என்ற புரட்சிகரமான கருத்துக்களை முன்வைத்தார்.

இதன்பின்னர் மாகாண சபை கூடியபோது, வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டிருந்ததால் EPRLF வடமாகாணத்தில் கணிசமான ஆசனங்களைப் பெற்றிருந்தது. அப்போது விடுதலைப் புலிகள் அமைப்போ அல்லது ஏனைய அமைப்புக்களோ தேர்தலில் போட்டியிடவில்லை.

இதன் காரணமாக வடக்கும் கிழக்குமாக EPRLF அதிக ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்து, வரதராஜப்பெருமாள் முதலமைச்சராக பதவியேற்றார்.

அதேநேரம் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வென்ற ஒரே ஆசனம் மருதமுனையைச் சேர்ந்த செனட்டர் மசூர் மௌலானாவுக்குக் கிடைத்தது.

மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு குழப்பங்களும் சர்ச்சைகளும் நிலவின.

இந்த மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அன்றைய தவிசாளர் சேகு இஸ்ஸதீன் தெரிவு செய்யப்பட்டார்.

முதல் அமர்வு திருகோணமலையில் நடைபெற்றபோது தலைவர் அஷ்ரப் அவர்களும் நேரில் சென்று அதனைப் பார்வையிட்டார்.

இந்தக் காலகட்டத்தில் EPRLF இந்திய ராணுவத்தின் ஆதரவுடன் தமிழ் தேசிய ராணுவம் (TNA) எனும் அமைப்பை உருவாக்கி, கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு விடயங்களில் பலத்த செல்வாக்கை ஏற்படுத்தியிருந்தது.

இவை அனைத்தும் கிழக்கு முஸ்லிம்களின் பாதுகாப்புக்கும் இருப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறிவருவதை உணர்ந்த தலைவர் அஷ்ரப் அவர்கள், இந்திய அரசும் இலங்கை அரசும் இணைந்து முஸ்லிம் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.

அதன் விளைவாக, முஸ்லிம் பகுதிகளின் பாதுகாப்பிற்காக Citizen Volunteer Force (CVF) எனப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.

இதன் பின்னர் முஸ்லிம் பகுதிகளின் பாதுகாப்பு ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டது.

"கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பில் வெற்றிடம் ஏற்பட அனுமதிக்கமாட்டேன்" என்ற தனது உறுதியை அவர் செயலில் நிரூபித்தார்.

இதனால் முஸ்லிம் கிராமங்களில் இளைஞர்கள் சட்டரீதியான ஆயுதங்களை ஏந்தி தமது மக்களைப் பாதுகாக்க தியாகத்துடன் பணியாற்றினர்.

தொடரும்...

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :