“முதலாவது முக்கியமான விடயமாக, வெல்லாவெளி சந்தியிலிருந்து வக்கியெல்ல சந்தி வரையிலான வீதியை புனரமைக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன். அதற்கு RDA அதிகாரிகள் ஒரு கிலோமீற்றர் வீதியை அமைப்பதற்கு சுமார் 30 மில்லியன் ரூபாய் தேவைப்படும் என்று தெரிவித்தனர். பின்னர் வில்லுக்குளம் வீதி மற்றும் அப்பகுதியில் சேதமடைந்துள்ள குறுக்கு வீதிகளையும் புனரமைப்பதற்கான5 கிலோமீற்றர் வீதிக்கான நிதியை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார். அதனை ஆளுநர் ஊடாக உடனடியாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
வாழைச்சேனை துறைமுகத்தில் வரி செலுத்தாமல் சிலர் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருவாய்கள் முறையாக வசூலிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தேன். அதேநேரத்தில் சுற்றுலா சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானங்களும் உரிய முறையில் கிடைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன்.
மீனவர்களின் பாதுகாப்பிற்காக ‘Beacon Light’ வசதிகளை அமைக்க வேண்டும் என்று கேட்டேன். ஏற்கனவே காயங்கேணி பகுதியில் ஒன்று அமைக்கப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள நான்கு பகுதிகளிலும் அவற்றை அமைத்துத் தருவதாக தெரிவிக்கப்பட்டது.
தித்வா புயலால் பாதிக்கப்பட்ட 1500-க்கும் அதிகமான விவசாயிகளுக்கு இதுவரை எந்த நஷ்டஈடும் வழங்கப்படவில்லை என்பதை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தேன். அதற்கு உடனடியாக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. அதேபோல், தித்வா புயலால் சேதமடைந்த போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுளையடிவட்டை வீதியையும் புனரமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
பிரதேச சபைகளின் நிருவாக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தேன். குறிப்பாக, உள்ளூராட்சி ஆணையாளர் பதவியில் உள்ள அதிகாரி ஒருவர் பதில் அதிகாரியாகவும், அமைச்சின் செயலாளராகவும் செயற்படுவதால், பல நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு நிரந்தர உள்ளூராட்சி ஆணையாளர் ஒருவர் தேவைப்படுகின்றார் என்று தெரிவித்தேன். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
‘மண் வியாபாரிகள்’ என்ற பெயரில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் GSMB அதிகாரியொருவரின் செயற்பாடுகள் தொடர்பிலும் முறைப்பாடு செய்தேன். உரிய ஆய்வுகள் இன்றி சில அனுமதிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தேன். இதுகுறித்து விசாரணைக் குழுவொன்றை நியமிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக எடுத்துரைத்தேன். மண்டூர் நீர் தாங்கி இயங்காமல் இருப்பது, கொக்கட்டிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோக பிரச்சினைகள் நிலவுவது போன்ற விடயங்களை சுட்டிக்காட்டினேன். இதனால் மட்டக்களப்பிற்கென தனியான ‘Design Unit’ ஒன்றை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். தற்போது இவ்வாறான திட்டமிடல் பிரிவு திருகோணமலையில் மட்டுமே உள்ளது. எங்கு நீர் வழங்கலாம், எங்கு புதிய நீர்த் தொட்டிகள் அமைக்கலாம் போன்ற திட்டங்களை மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்க இது அவசியமானது என்பதை விளக்கினேன்.
மண்டூர் பாலத்திற்கான ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும், படுவான்கரை மற்றும் எழுவான்கரையை இணைக்கும் முக்கிய பாலமாக மண்டூர் பாலம் அமையவுள்ளதால், அதனை அவசரத் தேவையாக கருதி முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
அதேநேரத்தில் பட்டிருப்பு, திகிலிவெட்டை, குருக்கள்மடம், மகிழவெட்டுவான் மற்றும் மண்டூர் ஆகிய பாலகள் தொடர்பாகவும் கருத்தினை முன்வைத்தேன். அதில் பட்டிருப்பு பாலம் செய்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
கெவிலியாமடு மற்றும் மயிலத்தமடு பகுதிகளில் வனப்பகுதி காணிகள் தொடர்பான பிரச்சினைகளையும் எடுத்துரைத்தேன். உள்ளூர் மக்களுக்கு காணி விடுவிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையிலும், அதே வனப்பகுதிகளில் சில தனியார் தரப்பினரால் காணி அபகரிப்புகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினேன்.
அதேபோன்று, வனவிலங்கு திணைக்கள அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் பேசினேன். கடினமான சூழலில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தேன்.
விவசாயிகளின் உரப் பிரச்சினை தொடர்பிலும் ஜனாதிபதியுடன் விரிவாக கலந்துரையாடினேன். மட்டக்களப்பில் மகா பயிரிடல் காலம் ஏனைய மாவட்டங்களை விட முன்னதாக ஆரம்பிக்கப்படுவதால், அரசின் மானிய உரம் கிடைக்கும் முன்னரே விவசாயிகள் அதிக விலைக்கு உரம் வாங்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது 18,000 ரூபாய் வரை கொடுத்து உரம் வாங்க வேண்டிய சூழல் காணப்படுவதாக தெரிவித்தேன். அதற்கு ஜனாதிபதி 10,000 ரூபாய் விலையில் உரம் கிடைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அந்த உரம் கிடைக்கும் நேரத்திற்கு முன்பே விவசாயிகள் தங்களது செய்கைகளை ஆரம்பித்து விடுகின்றனர் என்பதையும் நான் விளக்கினேன்.
கடந்த காலத்தில் மாவட்டத்தை மோசமாக நிர்வகித்த அரசியல் தரப்புகள் தற்போது ஆட்சியில் இல்லாவிட்டாலும், அவர்களது செல்வாக்கு இன்னும் சில துறைகளில் தொடர்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டினேன். குறிப்பாக, காணி அபகரிப்புகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டாலும், அவை மக்களை திருப்திப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தேன்.
அதேநேரத்தில், அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் வெள்ளத்தின் போது மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான நான்கு கட்டிடங்களை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான கடிதம் ஏற்கனவே ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது.







0 comments :
Post a Comment